அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதுவும் பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவ்வளவு பெரிய குற்றம் செய்த குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் அவரை பாதுகாத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அதானியின் பெயரை உச்சரித்தாலே அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விடுகிறார்கள். அதானி பெயரை உச்சரிக்கவே முடியவில்லை. உலக பொருளாதாரத்தில் 3-வது பெரியநாடு இந்தியா. இவ்வளவு பெரிய நாட்டின் தொழிலதிபர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பெரிய அவமானம்.
மேலும் இது தொடர்பாக அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ் கூறும்போது, அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றி கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் பொய் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். இதேபோன்று அதானி குழுமம் பல நாடுகளில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் பெற இருந்தது. ஆனால், அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினார்கள். ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் ‘ஸ்டாப் அதானி’ (Stop Adani) இயக்கம் 45 நாட்கள் நீடித்தது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இலங்கையில் ஜூன் 2022 இல், இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக்குழுவின் முன் விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ‘அழுத்தம்’ கொடுத்ததாக கூறினார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் வங்கதேச உயர்நீதிமன்றம் அதானி குழுமத்தின் அனைத்து மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது என இந்தியாவின் ஆங்கில வணிக நாளிதழான பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மியான்மரின் யங்கூனில் ஒரு கொள்கலன் முனையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. மியான்மர் ராணுவத்திடம் இருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதால் அதானியின் இந்த திட்டமும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவம் மனித உரிமைகளை மீறுவதாகவும், அதனுடன் அதானி ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
செப்டம்பர் 2024 இல், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற இருந்தது. விமான நிலைய தொழிலாளர்கள், அதானிக்கு அப்பொறுப்பு கிடைத்த பிறகு வேலை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். இப்படி உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது புகார்களும், குற்றச்சாட்டுகளும் வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் பாஜக அரசு இருந்து வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.