புஷ்பா – பார்ட் 3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா…
– பொன்னேரி P. G. பாலகிருஷ்ணன்.
தற்போது தமிழக அரசியலில் பக்குவத்துடனும், நிதானமாகவும், வலிமையான அரசியலை முன்னெடுத்து சென்று கொண்டிருக்க கூடியவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் தான் என்பதை அனைவரும் நன்கு அறிவார். அந்த அளவிற்கு அவருடைய அரசியல் நகர்வுகள் மிக தெளிவாக இருக்கும். சிறுவயதிலிருந்தே அரசியலில் பயணித்து கொண்டிருக்கும் அவர், 90களில் தன்னுடைய 29 வது வயதிலேயே அரசியலில், ஒரு தனி கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய வலிமையை பெற்றிருந்தார். அவர் இன்று இந்திய அளவில் தனி சிறப்பு மிக்க ஒரு தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் இருக்க கூடிய பல பட்டியலின தலைவர்களை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்த பாஜக, சுயம்புவாக உருவாகி இன்று இந்திய அளவில் அரசியல் களத்தில் உறுதியுடன் இருந்து வலிமையாக இயங்கி கொண்டிருக்கும் திருமாவளவன் அவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர பல முயற்சிகள் செய்தது. அவையெல்லாம் கைகூடி வர முடியாத சூழ்நிலையில், சமீப காலங்களாக அவருக்கு பலவிதமான வகைளில் நெருக்கடி கொடுத்து அவரை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையில், தற்போது அவரை பலவீனப்படுத்த கூடிய செயல்களில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இப்படி, வியூகங்கள் அமைத்து செயல்படும் பாஜக அவரையும், அவருடைய கட்சியையும் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், திருமாவளவன் அவர்களுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருக்கக்கூடிய, ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை தன்னுடைய மறைமுக அஸ்திரங்களாக பயன்படுத்தி வருகின்றது என்பது தான் உண்மை. இதற்கான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டிலேயே துவக்கப்பட்டு விட்டது என்பது பெரும்பாலானவர்களு டைய கருத்தாக நிலவி வருகிறது.
அந்த கருத்து பொய்யில்லை என்னும் வகையில், டிசம்பர் 6ம் தேதி விகடன் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட, அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவின் பல நடவடிக்கைகள் மற்றும் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் ஆகியோர்களுடைய பேச்சுக்களும் அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனாவினுடைய அரசியல் பயணத்தை உற்று நோக்கினால் பல உண்மைகள் தெளிவாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மறைவிற்கு பின்பாக ஆதவின் அரசியல் பயணம் தீவிரமாக துவங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மறைவிற்கு பிறகு அதிமுக மூன்றாக பிரிந்த சூழ்நிலையில், 6ம் தேதி நடத்தப்பட்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்திருந்த, அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை அனைவருடைய மனதிலும் நல்ல மதிப்பை பெற்றிருக்க கூடிய, முன்னாள் காவல்துறை டிஜிபி திரு திலகவதி அவர்களை, அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் களம் இறக்கி, தனது அரசியல் பயணத்தை ஆதவ் அர்ஜுனா துவக்கினார்.
தனது பெரியம்மாவான டிஜிபி திலகவதி அம்மா அவர்களை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஓபிஎஸ் அணியில் இணைந்த ஜெயலலிதா அவர்களுடைய அண்ணன் மகளான தீபா அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அந்த கட்சியில் இணைந்த டிஜிபி திலகவதி அவர்கள் அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் தீபாவை ஆதரித்து ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், அடுத்தடுத்த கட்டங்களில் ஓபிஎஸ் அணி தொய்வு அடையவே திலகவதி அம்மா அவர்கள் தனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு, ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் பயணத்தை, திமுகவை நோக்கி நகர்த்த துவங்கினார். இன்றைய சூழ்நிலையில் அனைத்து கட்சியிலும் நிதி வழங்கக்கூடிய நபர்களுக்கு அந்த கட்சிகளில் முன்னுரிமை வழங்கப்படுவது சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அதில் திமுகவும் விதிவிலக்கல்ல. அதன்படி, திமுகவிற்கு எப்போதும் நிதியை வழங்கக்கூடிய லாட்டரி தொழில் அதிபரான மார்ட்டின் அவர்கள் மூலமாக திமுகவின் வளையத்திற்குள் ஆதவ் அர்ஜுனா நுழைந்து இருக்கிறார். சினிமா தொழிலில் பணம் கொடுத்தால் கவுரவ நடிகராக அறிமுகபடுத்தபடுவது போல், ஆதவ் திமுகவின் தேர்தல் பணிகளில் செயல்பட்ட குழுக்களோடு இணைந்து செயல்பட்டு இருக்கிறார். அதன்படி, சில தேர்தல்களில் களப்பணியாற்றியதே தன்னுடைய அடையாளமாக கொண்டு வலம் வந்து கொண்டிருந்த ஆதவ் அர்ஜீன் மீது பாஜகவின் மேலிடப்பார்வை விழவே, 2023 ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திருச்சியில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஆதவ் அலுவலகத்திலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.
அதன் பிறகு நிகழ்த்தப்பட்ட பல நிகழ்வுகளை தான் நாம் உற்று நோக்க வேண்டியதுள்ளது, அதில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது, இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய், தான் அரசியல் கட்சி துவங்க போகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதே காலகட்டத்தில், ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து திருமாவளவன் அவர்களுடைய நம்பிக்கையை பெரும் அளவிற்கு தன்னை கட்சி பணிகளில் இணைத்து கொண்டு செயல்பட்டது, போன்ற நிகழ்வுகளை நாம் உற்று நோக்கினால் தெரியவரும். இதே காலகட்டத்தில் தான் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்றால், அந்த கூட்டணியில் மிகவும் பலமான ஒரு நபரான திருமாவளவன் அவர்களை பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் படி, பல திசைகளில் இருந்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு நகர்வு, ஆதவ் அர்ஜுனா அவருடைய அரசியல் நகர்வுகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது வெளிவந்துள்ள புஷ்பா பார்ட் 2 திரைப்படத்தில், தவறாக குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதித்து அதிக பணபலம் படைத்த ஒருவன் அரசியலில் எப்படி வேண்டுமானாலும் சதுரங்க விளையாட்டை விளையாடலாம் என்பதை போல், ஆதவ் அர்ஜுனா புஷ்பா பார்ட் 3 படத்தை தமிழக அரசியலில் உண்மையிலேயே நிகழ்த்தி காட்ட வேண்டும் என்று அதிமேதாவியை போல் செயல்பட்டு, காமெடி செய்து கொண்டிருக்கிறார்.
குறுகிய காலமே விசிக வில் பயணித்த இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை (திருமணம் கூட செய்து கொள்ளாமல்) மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் கட்சியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது. மேலும், அவர்கள் அனைவருக்கும் தெரியும், திருமா அவர்களுடைய ஒவ்வொரு நகர்வும் பக்குவமாகவும், உறுதியுடன் இருக்கும் என்பது, அவர் ஒரு அரசியல் கட்சி தலைவராக மட்டுமில்லாமல், நள்ளிரவு 12 மணிக்கு கூட மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை தீர்த்து வைப்பதுடன், அந்த நேரத்திலும் கோபம் கொண்டு செல்லும் ஒரு சாதாரண தொண்டனையும் திரும்ப அழைத்து சமாதானம் செய்ய கூடிய ஒரு எளிமையான மனிதராக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதையும், அனைவரும் நன்கு அறிவார்கள். ஆதவ் சொல்லுவது போல், திருமா, 94 லட்சம் மக்களுக்கான தலைவர் கிடையாது. இந்தியா முழுவதும் அனைத்து தரப்பிலும் ஒடுக்கப்பட்டு இருக்க கூடிய பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்பதை ஆதவ் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமா, திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார் என்ற ஒரே குற்றச்சாட்டை கூறி, அவரை கரைபடுத்தி மக்களிடம் இருந்து எளிதில் பிரித்துவிடலாம் என்றும், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் அவர்களை அந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார். அவர் உள் மனதில் இருக்கக்கூடிய அந்த ஆசை வெளிப்படும் வகையில் தான், புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை வேங்கை வயலுக்கு நேரில் வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். அம்பேத்கர் பற்றி தனது 15 வயதிலேயே நன்கு படித்து ஞானப்பால் குடித்த ஆதவ், அம்பேத்கருடைய புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கரைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினார் என்றும், சென்ற ஆண்டு வரை நேசத்துடன் பணியாற்றிய திமுகவை பற்றியும், சில தினங்கள் வரை பாசத்துடன் பழகிய திருமா அவர்களை பற்றியும் அந்த மேடையில் எவ்வளவு நேரம் பேசினார் என்றும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
15 வயதிலேயே அரசியலில் ஞானப்பால் குடித்த ஆதவ், நாம் தான் தற்போது தமிழகத்தில் பெரிய அரசியல் ஞானி என்ற நினைப்பில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும், மேலும், இளைஞர்களில் ஒரு சிலரை உணர்ச்சி வயப்படுத்தி அந்த கட்சிகுள் கொளுத்தி போட்டு குளிர் காயலாம் என்ற நினைப்பையும் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமா அவர்களால் வளர்க்கப்பட்ட சிறுத்தைகள் யாரும் சிந்திக்க தெரியாதவர்களும், சீறுவதற்கும், செயல்படுவதற்கும் தெரியாதவர்களும் இல்லை, அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமில்லாமல் மாவட்ட செயலாளர்கள் உட்பட மற்ற நிர்வாகிகளையும் தாய் சிறுத்தையான அந்த கட்சியின் தலைவர் மிகச் சிறப்பாக வளர்த்து வைத்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நன்கு பக்குவபட்டு இருக்கிறார்கள். எப்போது சீறிபாய வேண்டும், எப்போது பதுங்க வேண்டும் என்று பக்குவத்துடன் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு சில சமயங்களில், சில சில பிரச்சனைகளில் ஒருவர் மீது ஒருவர் ஆதங்கங்களும், அதிருப்திகளும் அடைவது உண்டு அப்போதெல்லாம் அந்த தாய் சிறுத்தையின் அரவணைப்பால் அவர்களின் பிரச்சனைகள் எல்லாம் காணாமல் போய் விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாத ஞானப்பால் குடித்த, புஷ்பா பார்ட் 3 கதாநாயகராக கனவு காணும் ஆதவ், ஞானசம்பந்தரை போல தன்னுடைய அரசியல் வாழ்க்கையை குறுகிய காலத்தில் முடிந்து போய்விடாமல் பார்த்து கொள்வது நல்லது.