ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, சதித்திட்டம் தீட்டியே அந்த கட்சிக்குள் நுழைந்துள்ளார் என பரவலான விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவரது நோக்கம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: – ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டிதான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் வந்தார். அவரது சதித்திட்டம் என்பது கிரானி கேபிட்டலிசம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் அதானி போன்று அவர் வந்தார். ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் மார்ட்டின், வெளிநாட்டில் சென்று லாட்டரி வியாபாரத்தை கற்றுகொண்டு வந்து, ஒரு நம்பர் லாட்டரி, சுரண்டல் லாட்டரிகளை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார். இதனால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். மார்ட்டின் கலைஞருக்கும், பின்னர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமானவராக இருந்தார். சசிகலாவுக்கு ஒருநாளைக்கு ஒரு கோடி பணம் வழங்குவார். லட்டரி மாபியா மிகப்பெரிய மாபியாவாக உருவெடுத்தது. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் லாட்டரி விற்பனை உச்சத்தில் இருந்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததால் ஜெலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார். ஆனால் தற்போது பாஜக ஆளும் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இன்று லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, ஆதவ் அர்ஜுனா மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு தடையை நீக்க முயற்சிக்கிறார். பொலிட்டிகல் சயின்ஸ் படித்துள்ள ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோரின் ஐபேக்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவர் மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜிக்காக வேலை பார்த்தார். மம்தா தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அதற்காக பிரசாந்த் கிஷோருக்கு வழங்க வேண்டிய தொகையை ஆதவ் அர்ஜுனாவே வழங்கினார். இதற்கு கைமாறாக மேற்கு வங்கத்தில் சுரண்டல் லாட்டரி விற்பனைக்கு மம்தா பானர்ஜி அனுமதி வழங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், திமுகவுக்கு தேர்தல் நிதியாக ரூ.509 கோடியை ஆதவ் வழங்கினார். பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகம் அமைக்க அழைத்து வந்தார். அதற்கு பிரதிபலனாக தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். நாடு முழுதும் லாட்டரி தொழில் நடைபெறுவதால் மத்திய அரசிடம் இருந்து பிரச்சினை வந்தது. இதனால் எம்.பி ஆக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா முடிவெடுத்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்று எம்.பி. ஆகலாம் என நினைத்தார். ஆனால் அங்கு நினைத்தது நடக்கவில்லை. அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி, விஜயை சந்திக்கிறார். அவர்கள் மூலமாகவே ரூட் எடுத்து, எதாவது செய்யலாம் என்று பார்க்கிறார். அதன் காரணமாக ஆதவின் பேச்சுக்கள் அப்படி இருந்தன. அதன் விளைவாக தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திமுகவில் முதன் முதலில் ஆதவ் அர்ஜுனா எதிர்த்தது உதயநிதி ஸ்டாலினை தான். தேர்தலில் உதயநிதி போட்டியிடக் கூடாது என பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த எதிர்ப்பை பெரிய அளவுக்கு வெளிப்படுத்தியவர் ஆதவ் அர்ஜுனா. ஆனால் எதிர்ப்பையும் மீறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தார். பின்னர் உதயநிதியை அமைச்சராக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல், மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது துணை முதலமைச்சராகியுள்ளார். உதயநிதியின் வளர்ச்சி என்பது ஆதவ் அர்ஜுனாவின் டீமுக்கு எதிரானது. இதனால் அவர் திமுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு எம்.பி ஆக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார். கட்சிக்காக நிறைய அளவில் செலவு செய்தார். மது ஒழிப்பு மாநாடு, வெல்லும் ஜனநாயகம் என 2 மாநாடுகளை தனது சொந்த செலவில் ஆதவ் அர்ஜுனா நடத்தினார். அந்த மாநாட்டில் தான் விசிகவின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அறிமுகம் செய்யப்பட்டார்.
திமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலின்போது தொகுதிகள் வழங்கும் பொறுப்பு உதயநிதியிடம் தான் இருந்தது. அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என கூறிவிட்டார். ஆதவ் அர்ஜுனா ஒரு பொது தொகுதி, ஒரு தனி தொகுதி என 2 தொகுதிகளை வாங்கி வந்தார். ஆனால் திருமாவளவன் அதனை ஏற்கவில்லை. 2 தனி தொகுதிகள், ஒரு பொது தொகுதி என 3 தொகுதிகள் வாங்கி வருமாறு கூறிவிட்டார். ஆனால் தேர்தலில் திமுகவே 21 இடங்களில் தான் போட்டியிட்டதால், விசிகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை. பெரம்பலூர் தொகுதியை ஆதவ் எதிர்பார்த்த நிலையில், அதனை அமைச்சர் நேருவின் மகனுக்கு வழங்கப்பட்டது. இதனால கிடைத்த 2 தனித் தொகுதிகளில் திருமாவளவன், ரவிகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் ஆதவ் அர்ஜுனாவின் எம்.பி. ஆகும் திட்டமும் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜயுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, 4 படங்களில் கூட நடிக்காத உதயநிதி துணை முதலமைச்சர் ஆகி விட்டார் என்றும், பாஜகவை விட்டு பிரிந்து வந்து எடப்பாடி பழனிசாமி நன்றாக உள்ளார் என்றும் விஜயிடம் புகழ்கிறார். மேலும், திருமாவளவனின் கொள்கை முழக்கமான ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு குறித்தும், திமுக மீது பெரிய அளவில் அதிருப்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தான் திமுக கூட்டணிக்குள் இருந்துகொண்டு விசிக, விஜய், எடப்பாடியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனாவின் அஜெண்டா.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்த தேர்தல்களில் எல்லாம் தோல்வியை தழுவி மோசமான நிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்றுள்ளது. வாக்கு சதவீதம் 20 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 18 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. இது அதிமுகவின் வாக்குகள் தான். ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி தான் வலிமையானவர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை முதலில் ராகுல்காந்தி, கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து நடத்தவே விகடன் திட்டமிட்டிருந்தது. பின்னர் வந்த ஆதவ் அர்ஜுன் புத்தகங்களில் பாதியை வாங்குவதாக உறுதி அளித்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளை கையில் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சிக்கு விஜயை கூப்பிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து திருமாவளவன் விலகினார். அந்த நிகழ்ச்சியில் தான் மன்னராட்சி என்று ஆதவ் கூறுகிறார். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி, பின்னர் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆகியுள்ளனர்.
திமுகவை ஊழல் கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஊழலுக்காக சிறை சென்றவர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. ஆனால் ஆதவ் அர்ஜுனாவும், விஜயும் அதிமுகவின் ஊழல் குறித்து வாய் திறக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஒட்டு மொத்த எதிரி திமுக, தனிப்பட்ட எதிரி உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சி அவர்களை அச்சுறுத்துகிறது. ஸ்டாலினுடன் திமுக முடிந்துவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு உதயநிதியின் வருகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உதயநிதியை டார்கெட்ட செய்யும் போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆதவ் அர்ஜுனா மீண்டும் விசிகவுக்கு வர மாட்டார்.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தன் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்? தான் கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரமடைந்துள்ளனர். இணையதளம், தொலைக்காட்சிகளுக்கு ஆதவ் பணம் செலவு செய்துள்ளார். அது கட்சிக்காக அவர் செய்த செலவு என்றும், இதில் கணக்க கேட்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவை தற்போது விஜயும் ஏற்க தயாராக இல்லை. அம்பேத்கரையே படிக்காத ஆதவ், ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட போகிறாரா?.
எடப்பாடி ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி வந்துவிடும். அதற்கான வேலைகளைதான் அவர் செய்வார். அடுத்து காங்கிரசை தூண்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பார் விஜய் கட்சிக்கு போனால், புஸ்ஸி ஆனந்த் அவரை விடமாட்டார். பொதுமக்கள் முன்பு அம்பலப்பட்டுபோன ஆதவ் அர்ஜுனாவை விஜய் ஏற்றுக்கொள்ள மாட்டார். விஜயின் மாநாட்டிற்கு ஆதவ் அர்ஜுனா நிதியுதவி செய்துள்ளார். ஆனால் ஆதவால் திருமாவளவன் பட்ட பாடுகளை அறிந்த விஜய் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.