திமுக கூட்டணியை உடைக்கும் ஆதவ் அர்ஜுனாவின் முயற்சியை, திருமாவளவன் மிகவும் அழகாக கடந்து வந்து விட்டார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் இனி விசிகவில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கணித்துள்ளார்.
திமுகவுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக கூட்டணியை உடைக்கு அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூடிப் சேனலுக்கு நேர் காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திமுகவுக்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ்அர்ஜுனா அக்கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மதுஒழிப்பு மாநாட்டில் தொடங்கி அவர் போட்ட ட்வீட், உதயநிதி குறித்து அவர் சொன்ன கருத்து, இதன் உச்சமாக விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் பேசியது, கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.
நீங்கள் ஒரு கூட்டணியில் இருக்கும்போது அந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் அரசாங்கம் குறித்து விமர்சனத்தை முன்வைக்கிறார். திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுமதி வழங்கியபோதே, அரசியல் பேச வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் அதையும் மீறி ஆதவ் அந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசினார். திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்வில்லை என கூறியதும், நான் விஜயை வைத்து நடத்திக் கொள்கிறேன் என்றபோதே, அவருக்கு என்று தனி அஜெண்டா உள்ளது தெரிய வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் வரை உள்ள நிலையில், ஏன் வெற்றிகரமான கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என எண்ணுவார்.
விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கு பின்னர் ஆதவ் ட்விட் போட்டபோதே திருமாவளவன், அவரை கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனினும் அவர் ஆதவுக்கு அறிவுரைகளை கூறி வந்துள்ளார். ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு என்று தனி அஜெண்டா இருந்ததுள்ளது. திமுகவை, பாஜக, அதிமுகவால் வீழ்த்த முடியாது. கூட்டணி பலமாக உள்ளதால் விஜயாலும் வீழ்த்துவது கடினம். எனவே திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை இழுக்க வேண்டும். அந்த முயற்சியில் விஜய் அதிகாரத்தில் பங்கு என கூறினார். பின்னர் புத்தக வெளியியீட்டு விழாவில் ஆதவ் பேசியுள்ளார். ஆதவ் அர்ஜுனா விசிகவில் சேர்ந்ததே தனது அஜெண்டாவுக்கு விசிகவை வேலை செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதன் பின்னணியில் பாஜக உள்ளது.
ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். 2019ல் திமுகவுக்காக வேலை செய்தவர். திமுகவில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்கள். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து சீட் வாங்கிவிடலாம் என்று பார்த்தீர்கள். உங்களுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சினை என்றால், திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என விசிகவில் புகுந்து வரணும் என்று பார்த்தீர்கள். திமுக ஆட்சியை அகற்ற உங்களுக்கு பல நோக்கங்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் விசிக உடன்பாடாக இருக்க வேண்டும் என என்ன அவசியம் உள்ளது. நீங்கள் திமுகவை விமர்சிப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும்போது அவ்வாறு பேசக்கூடாது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 6 மாத காலத்தில் ஆதவ் அர்ஜுன் தாமாகவே கட்சியை விட்டு போய் விடுவார் என்ற எண்ணத்தில் இடைநீக்கம் செய்திருப்பார்கள். இனி ஆதவ் விசிகவிற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு தான். மற்ற கட்சிகளை சேர்த்து, திமுகவை வீழ்த்துவதற்கான வேலைகளை செய்வார்.
விசிகவில் அதிகாரத்தில் பங்கு என்பது ஆரம்ப கால கொள்கையாக இருந்தது. விஜய் ஏன் அதை தற்போது கூற வேண்டும். ஆதவ் அர்ஜுனாவின் அஜெண்டாவில் அதுவும் ஒன்றுதான். நீங்கள் பேசுங்கள் அதன் மூலம் ஒரு தூண்டில் போடலாம் என ஆதவ் சொல்லியிருப்பார். விஜய் மாநாட்டில் பேசியது ஆதவ் அர்ஜுனாவின் அஜெண்டாவின் ஒரு பகுதிதான். திமுக கூட்டணியை உடைக்க பாஜக மேற்கொள்ளும் சதியின் ஒரு பகுதிதான் இது. அதற்கு ஏற்றார்போல கூட்டணியில் ஒரு சலசலப்பு வந்தது. ஆனால் திருமா மிகவும் அழகாக அதனை கடந்து வந்தார். அதன் பின்னர் தான் புத்தக வெளியீட்டு விழா பேச்சு ஆதவ் அர்ஜுனா யார் என்பது தெரியவந்து விட்டது. இனி அவர் விசிகவில் சேர வாய்ப்பு இல்லை.
ஆதவ் அர்ஜுன் இடைநீக்கத்திற்கு பின்னர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதால் அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திருமாவளவனுக்கு அவரது கட்சியினருக்காவே நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திமுவுடன் இணைந்து செயல்படும்போது ஆதவை ஆதரித்து விட்டு, திமுக கூட்டணியில் தொடர முடியாது. ஆதவ் அர்ஜுன் மீதான நடவடிக்கை என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மைக்காக செய்யப்பட்ட செயலாகும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திமுகவின் அழுத்தம் தேவையில்லை.
இனி ஆதவ் அர்ஜுனா திமுகவை வீழ்த்த கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இதனால் அவர் பிற கட்சிகளில் சேரமால் கூட கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். திமுக கூட்டணியினை உடைக்கும் முயற்சியில் விகடனுக்கு பங்கிருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் வர்த்தக நோக்கத்திற்காக தான் நிகழ்ச்சியை நடத்தினர். ஆனால் திருமா – விஜய் பங்கேற்கும் செய்தியை வெளியிட்ட தினசரி நாளிதழுக்கு அத்தகைய அரசியல் எண்ணம் இருக்கலாம். ஏனெனில் திருமாவளவன் குறித்த செய்திகளை புறக்கணிக்கும் அந்த நாளேடு, அவருக்காக 8 காலம் செய்தி வெளியிட்டிருப்பதாக திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
திமுகவுக்கு எதிராக அதிருப்தி இல்லாமல் இல்லை. சாத்தனூர் அணை திறப்பு விவகாரம், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பல்வேறு விவகாரங்களில் அதிருப்தி உள்ளது. ஆனால் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயண திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, இல்லம் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களிடையே அரசுக்கான நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுகவுக்கு வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் தான் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளபோதும், இருப்பதிலேயே இது சிறந்த கூட்டணியாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.