அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது என்பது முழுக்க முழுக்க பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கொங்குமண்டலத்தில் அதிமுக தயவால்தான் பாஜக வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தன் பின்னணி குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அரசியல் விமர்சகருமான பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் காங்கிரஸ், பாஜக என 2 அனைத்து இந்திய கட்சிகள் உள்ளன. திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல்காந்தி, நீட் தேர்வை அந்தந்த மாநிலங்களின் பொறுப்பில் விட்டு விடலாம். அவர்கள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு நடத்தலாம் என்று சொன்னார். திமுக, அதிமுக இருவரும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். அதில் திமுக, நீட் தேர்வை எதிர்க்கும் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதால் இது கொள்கை கூட்டணியாகும். அதேவேளையில் அதிமுக கூட்டணி வைத்திருக்கும் பாஜக அதுபோன்ற மறுக்க இயலாத உத்தரவாதத்தை அளித்திருக்கிறார்களா? அப்போது அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதில் அடிப்படையான கேள்வி என்ன என்றால் மும்மொழி கொள்கையில் நீங்க என்ன செய்ய போகிறீர்கள்.
அதிமுகவுக்கு 40 எம்.பிக்கள் இருந்தாலும், நாங்கள் மும்மொழி கொள்கை வேண்டாம் என்று சொல்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்கள் தான் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள்தான் செய்வார்கள் என்று சொல்வதற்கு பெயர் அரசியலா? அதைதான் உங்களால் செய்ய முடியும். இன்றைக்கு திமுக கூட்டணியின் அனைத்து எம்.பிக்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். ஆனால் நீங்கள் சிஏஏவை, வேளாண் சட்டங்களை ஆதரித்தீர்கள். பின்னாளில் பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் சில விஷயங்க எதிர்க்க முடியவில்லை என்று சொன்னீர்கள். அதிமுக தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன என்ன நிலைப்பாடுகளை எடுத்துள்ளதோ, அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை கொண்டதுதான் பாஜக. அப்போது இந்த கூட்டணியால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கும். அதனால் நேற்று நடைபெற்ற கூட்டணியில் வெற்றி பெற்றது பாஜக தான். அதிமுக தன்னையும் தோற்கடிக்கிறார்கள். தமிழ்நாட்டையும் தோற்கடிக்க பார்க்கிறார்கள். இது ஒரு கசப்பான உண்மையாகும்.
கொங்கு மண்டலத்தில் பாஜக கூட்டணியால்தான் அதிமுக வெற்றி பெற்றது என்றால்? பாஜகவின் மாநில தலைவர் ஏன் கொங்கு மண்டலத்தில் தோல்வியை தழுவினார். உண்மையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் பலமான கட்சியாகும். திமுகவுடன் ஒப்பிட்டால் அதிமுகவின் பலம் மிகவும் அதிகமாகும். அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் தன்னை மன்றாடியார் சமுதாயம் என்று சொன்னார். அதனால் கொங்கு சமுதாயத்தினருக்கு ஒரு சந்தோஷம். அதை தவிர கோவை செழியன் போன்றவர் செல்வாக்கு மிக்கவர்கள் எம்ஜிஆரின் மிக பெரிய ஆதரவாளர்களாக இருந்தனர். அப்படிபட்ட செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு எம்ஜிஆருக்கு கிடைத்தது. அதனால் கொங்கு மண்டலம் அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்தது. செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பெரிய துன்புறுத்தல்கள் நடப்பதற்கு காரணம் அவர் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை உடைத்து, திமுகவை கொண்டு வந்துவிட்டார். அடுத்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் போய்விட்டால் அடுத்து கொங்கு மண்டலமும் போய்விடும் என அதிமுகவினர் நினைக்கின்றனர். அதிமுகவை தவிர பாஜக கொங்கு மண்டலத்தில் தங்களது செல்வாக்கை சாதி அடிப்படையில் வளர்த்துக் கொண்டு வருகிறது. தங்களுக்கு இருக்கும் அந்த செல்வாக்கும் போய்விடும் என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு தொடர் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறார்கள். பாஜகவின் பலத்தால் அதிமுக வெற்றி பெற வில்லை. அதிமுகவின் பலத்தால்தான் வானதி சீனிவாசன் போன்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணிக்கு நிர்பந்திக்கப்பட்டு உள்ளார். இன்றைக்கு எடப்பாடிக்கு உள்ள மிகப்பெரிய பலம் என்பது இரட்டை இலை சின்னம். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கு என்று ஒரு பெரிய ஈர்ப்பு உள்ளது. அதனால் எடப்பாடிக்கு அந்த பயம் ஏற்பட்டிருக்கலாம். எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அவருக்கு நெருக்கமான மணிகளில் ஒருவர், அந்தபக்கம் நெருக்கமாக உள்ளார் என்று ஏற்கனவே பேச்சுக்கள் உள்ளன. அவர்கள் எல்லாம் சேர்ந்து எடப்பாடிக்கு நெருக்கடி அளித்திருக்கலாம். அவரும் வேறு வழியில்லாமல் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கியது. அன்றைக்கு கூட்டணியை அறிவித்தவர் கலைஞர். ஆனால் நேற்றைக்கு கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டார். ஈபிஎஸ் கைகட்டி, வாய் பொத்தி அமைதியாக இருந்தார். எடப்பாடி தான் கூட்டணிக்கு தலைமை வகிப்பார், அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றவர்கள் திருமாவளவன் கூட்டணி ஆட்சி என்று சொன்னபோது, எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அமித்ஷா இனிமேல் கூட்டணி ஆட்சி தான் என்று சொல்கிறார்கள். அப்போது இது எடப்பாடிக்கு கிடைத்த வெற்றியா? நேற்று நடைபெற்றது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
சிலர் கேட்கிறார்கள் ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணியை அறிவிக்கிறார்கள் என்று. ஏன் என்றால் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு பரவலாக அறியப்பட்டதாகும். 2009ஆம் ஆண்டில் அன்புமணி காங்கிரசுடன் கூட்டணி தொடர வேண்டும் என விரும்பினார். ஆனால் ராமதாஸ் பாஜக உடன் போக வேண்டும் என்ன விரும்பினார். அன்புமணியும் அவரது வார்த்தைகளை கேட்டு சென்றபோது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இன்றைக்கு அன்புமணி, பாஜக உடன் செல்ல விரும்புகிறார். ராமதாஸ் அய்யா சட்டமன்ற தேர்தல் என்பதால் சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் உள்ளுரில் அரசியல் செய்ய முடியாது. அதனால் அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி உண்மையாக இருந்தால், அதிமுகவையும், பாமகவையும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்துவிட்டார்கள் என்றால் அதில் பாஜக இல்லாவிட்டால், ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துவிடுவார்கள். தங்களுடைய பலம் பலவீனம் இரண்டையும் உணர்ந்த பாஜக, பாமகவுக்கு செக் வைத்துள்ளது. நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நீங்கள் திமுக பக்கம் செல்லவே மாட்டீர்கள். உங்களுக்கு எங்கள் கூட்டணிக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்கிற சூழலை உருவாக்கி உள்ளனர். அனைத்து விதங்களிலும் அதிமுக தனிப் பெரும்பான்மை வராமல் இருப்பதற்கான வேலைகளை பாஜக செய்யும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.