Homeசெய்திகள்கட்டுரைஉருவான அதிமுக - பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!

உருவான அதிமுக – பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!

-

- Advertisement -

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பு என்று பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி குறித்து  பத்திரிகையாளர் லெஷ்மி சுப்பிரமணியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று, பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினைக்காக பேசுவதற்காக நடைபெற்ற சந்திப்பு என அதிமுக கூறுவது உண்மையில்லை. இது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பாகும். மக்கள் பிரச்சினைகளை சொல்வதென்றால் மகா சிவராத்திரிக்கு அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்த போது சொல்லி இருக்கலாம். அல்லது நிர்மலா சீதாராமன் எத்தனையோ முறை தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். அவரிடம் போய் சொல்லி இருக்கலாமே. அவர்கள் மேலிடத்தில் சென்று சொல்லி இருக்கலாமே. அமித்ஷா தான், பாஜகவில் கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் உள்ளார். எந்த எந்த மாநிலங்களில் எந்த விதமான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யும் இடத்தில் அவர் உள்ளார். அவருக்கு மேலே  இறுதி முடிவுகளை எடுப்பது பிரதமர் மோடி ஆவார். அப்போது அமித்ஷாவை சென்று சந்திப்பதற்கு காரணம் இதுவாக மட்டுமே இருக்க முடியும். இதனை தாண்டி வேறு எந்த காரணங்களும் இருக்க முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நடைபெற்றது. நேற்று காலை ஒய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலம் இன்று மாலை சந்திப்புக்கு தயாராக இருக்குமாறும், டெல்லிக்கு வருமாறும் தகவல் சொல்லி அனுப்பப்பட்டதாகவும், அதனால்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த மகா சிவராத்திரி அன்று அமித்ஷா கோவைக்கு வந்திருந்தார். அப்போது, அவர்,  அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை தனியாக 8 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த சந்திப்பின்போது கூட்டணி கணக்குகள் குறித்த நிறைய கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. சந்திப்புக்கு பின்னர் மகாசிவராத்திரி விழாவில் ஒரே மேடையில் இணை அமைச்சர் எல்.முருகன், எஸ்.பி.வேலுமணி, அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் போன்றவர்கள் இருந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அதிமுக தரப்பிலோ, வேலுமணி தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அப்போது கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2ஆம் நிலை தலைவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணிக்கு போக வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர் என்று கூறப்பட்டது. செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமியின் மோதலின்போதும் இது சொல்லப்பட்டது. பின்னர் வேலுமணி இல்ல திருமண விழாவில் அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரிசையில் நின்று வணக்கம் வைத்தார்கள். பாஜக – அதிமுக கூட்டணி என்பது கட்டாயம் 2026 சட்டமன்ற தேர்தலில் உருவாகும் என்பதற்கான சமிக்ஞைகள் சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டன. அந்த சமிக்ஞைகள் எல்லாம் தான் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திப்பது வரை எடுத்துச்சென்றுள்ளன.

அண்மையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு, நாங்கள் திமுக அல்லாத வேறு எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக மெகா கூட்டணி அமைப்போம் என்று சொன்னார்கள். அதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்றன. திமுக கூட்டணியில் இருந்து வேறு எதாவது கட்சிகள் வெளிவருமா என்கிற எதிர்பார்ப்புகள் கூட அதிமுக தரப்பில் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்து நடக்கவில்லை. அந்த மெகா கூட்டணிக்காக முயற்சி நடைபெற்றபோது, ராஜ்யசபா தேர்தல் சீட் மறுக்கப்பட்டதால் அவர்களது கூட்டணியில் இருந்த ஒரே கட்சியான தேமுதிகவும் வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் அதிகமாகி கொண்டிருந்தது. தற்போது அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு அதனை முழுமையாக்கி உள்ளது.

தொடக்கத்தில் பாஜக கூட்டணியை எதிர்த்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த மன மாற்றத்திற்கு காரணம் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உங்கள் கணக்குகளை வேறு யாரோ ஒருவர், வேறு எங்கேயோ உட்கார்ந்துகொண்டு போட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் மடியில் கணம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு எடப்பாடி பழனிசாமியும் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தங்கம் தென்னரசு சொன்னதில் பெரிய அளவுக்கு உண்மை இருந்தது. பாஜகவை பொருத்தவரை தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடம் உள்ளது. தமிழ்நாட்டில் முன்பு இருந்ததை போன்ற தீவிரமான பாஜக எதிர்ப்பு மனநிலையோ, அல்லது அவர்கள் காலூன்ற முடியாத நிலையோ இல்லை. அவர்களுக்கு சிறிய அளவில் இடம் இருக்கிறது. நிறைய இடங்களில் அதிமுக வாக்குகளை பாஜகவினர் கைப்பற்றி வருகின்றனர். அதனால் அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜக தங்களுக்கு லாபமாக இருக்கும் என்று நினைக்கிறது.

Annamalai

பாஜகவிடம் இப்போது பாஜகவுக்கு 4 இடங்கள் இருக்கிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கும். 2019 தேர்தலில் கூட்டணியில் இருந்தபோது ஒரு எம்.பி. தொகுதியையாவது அவர்களால் வெல்ல முடிந்தது. அதற்கு பிறகு 2024 தேர்தலில் அதிமுக உடன் இருந்திருந்தால் வேறு ஒரு கணக்கு இருந்திருக்கும். ஒருவேளை இந்த கூட்டணி இல்லை என்றால் 2026 தேர்தலில் தற்போதைய 4 எம்எல்ஏக்களும் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்தபடியாக கோவையில் அண்ணாமலை கடுமையாக போட்டியிட்டபோதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் கூட்டணி இல்லை என்பதுதான். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் பல்வேறு மாநிலங்களில், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்து திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இங்கே உள்ளது. அதனை ஒரு நேரேட்டிவாக கட்டமைக்க வேண்டும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது தங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பாஜக நினைக்கிறது.

“இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மற்றொருபுறம் அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும் சரி, பொதுச் செயலாளரும் சரி பெரிய உத்தமர்கள் எல்லாம் கிடையாது. இன்றைக்கு திமுக மீது வைக்கக்கூடிய ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு பெரியதாக உள்ளதோ? இதே அளவுக்கு கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பெரிய அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதும் வைக்கப்பட்டது. திமுக பெரியளவில் பட்டியலை கொடுத்தார்கள். ஆனால் இன்றுவரை எந்த வழக்குகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் அந்த ஊழல் வழக்குகள் அனைத்தும் டெல்லியில் ஆதாரங்களுடன் உள்ளன. அதனால் தான் மடியில் கணம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று தங்கம் தென்னரசு சொன்னார். ஒரு வேளை வழக்குகள் வந்தால் என்ன செய்வது என்கிற எண்ணம் அனைவர் மத்தியிலும் உள்ளது. அதன் காரணமாகவே  மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணிக்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கின. தற்போது அது உறுதியாகி உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ