Homeசெய்திகள்கட்டுரைஅம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா - விசிகவில் பெரும் குழப்பம்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்

-

“அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” என்ற நூல் விகடன் நிறுவனத்தின் சார்பில் இன்று வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு நூலை பெற்றுக் கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போதைய சூழலில் விஜய்யுடன் ஒரே மேடையில் நிற்பது சரியாக இருக்காது என்று திருமாவளவன் தவிர்த்து விட்டார்.

கடந்த அக்டோபர் 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. விஜய் மாநாட்டில் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சியில் பங்கு என்று பேசினார். அதை ஆதவ் அர்ஜூன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும் அதுதான் என்று வரவேற்று பதிவிட்டார். ஆனால் விஜய் மாநாட்டில் பேசிய பேச்சு குறித்து திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகாது என்று உறுதிப்பட தெரிவித்தார். ஆனாலும் அவருடைய கட்சியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

நூல் வெளியிட்டு விழாவில் திருமாவளவன் கலந்துக் கொள்ளாதது குறித்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, அம்பேத்கர் குறித்து புரிதல் எதுவும் இல்லாமல் அரசியல் அமைப்பு சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக் கொண்டு சமரச “பாயாசம்” கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துக் கொள்ள முடியாது என்று கூறி திருமாவளவன் தவிர்த்து விட்டார். நூல் வெளியிட்டாளர்கள் திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம் தான் வேண்டும் என்று போய்விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து, என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்று என்பதை அறிந்த பின்னர் எப்படி அதற்கு நான் இடம் கொடுக்க முடியும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எவரும் கணிக்க முடியாத,எதிர்பாராத மழை பெய்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஆதவ் அர்ஜூன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் என்றால் ஒவ்வொரு பூத்திற்கு ஒரு அமைச்சரை நியமனம் செய்கின்ற ஆளும் கட்சி, பேரிடர் காலத்தில் அப்படி செய்யாமல் போனது ஏன் என்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அந்த கூட்டணியில் இருந்து பிரித்து வெளியே கொண்டு செல்லும் முயற்சியில் ஆதவ் அர்ஜூன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் திமுகவை விமர்சனம் செய்கிறார். இன்னொரு பக்கம் ஆட்சியில் பங்கு, எளிய வருக்கும் அதிகாரம் என்கிற முழக்கத்தை வைத்து கூட்டணியை உடைக்க முயன்று வருகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வரும் ஆதவ் அர்ஜூன், தான் எழுதிய புத்தகத்தை தன் தலைவரை தவிர்த்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை வைத்து வெளியிடுகிறார். அதனால் விசிக நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ