Homeசெய்திகள்கட்டுரைஅம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி - அமித்ஷா மோதல்... போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

-

- Advertisement -

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

அமித்ஷா சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அம்பேத்கர் குறித்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய ஒரு மணி நேரத்தில் சர்ச்சைக்கு உள்ளானது கடைசி 30 வினாடிகள் தான். அமித்ஷா போன்ற பெரிய தலைவர்கள் வாய்தவறி பேசுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதனை சுட்டிக்காட்டும்போது நேர்மையான முறையில் வருத்தம் தெரிவித்துவிடுவார்கள். அதேபோல், அம்பேத்கர் விவகாரத்திலும் அமித்ஷா வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் வருத்தம் தெரிவிக்காமல் பிரச்சினையை முற்ற விடுகிறார். ஹரியானா, ஜம்மு, மகாராஷ்டிராவில் தலித் தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் பெரிய அளவில் தலித் வாக்கு வங்கியை  பெற்றுள்ள நிலையில், அமித்ஷாவின் பேச்சு தலித் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் விவகாரத்தை வெளிப்படையாக பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்குத்தான் லாபம் போல் தோன்றும்.  இந்த விவகரம் ராகுல்காந்தி கைதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே ராகுல்காந்தி கைது செய்யப்படலாம். அவ்வாறு நடைபெற்றால் அது சர்வதேச கனவத்தை பெறும். இந்த சர்ச்சையின் மூலம் அமித்ஷா மோடியுடன் போட்டிப் போடுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவவர் மோகன் பகவத், மசூதிகளில் ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றங்கள் அனுமதி வழங்குவது தேவையற்றது என வெளிப்படையாக கூறுகிறார். கோவில் – மசூதி விவகாரத்தை கையில் எடுப்பது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் சர்ச்சையில் பிரதமர் மோடி அடக்கியே வாசிக்கிறார். அம்பேத்கர் குறித்த விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் முதல்நாள் அமித்ஷா பேசியபோது விவாதம் எழவில்லை. மறுநாள்தான் காங்கிரஸ் இதனை கையில் எடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் மூலம் அமித்ஷா தன்னை சுற்றி அரசியல் சுழல்கிறது மாறி செய்துள்ளார். எதிர்க்கட்சி அரசியலில் இந்தியா கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டும் என எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. அதை தாண்டி மோடி Vs ராகுல்காந்தி என்று இருந்த அரசியல் தற்போது அமித்ஷா  Vs ராகுல்காந்தி என மாறியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சுற்றி சர்ச்சைகள் வருவதை பிரதமர் மோடி நிச்சயம் விரும்ப மாட்டார். அவரது இயல்பே தன்னை மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது என்பது தான். இதனால் பிரதமர் மோடியின் உள்ளார்ந்த உளச்சிக்கலாக அமித்ஷா மாறியுள்ளார்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

அமித்ஷா, அம்பேத்கர் விவகாரத்தை தனது வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறார். அம்பேத்கர் விவகாரத்தால் எதிர்க்கட்சிகளுக்கு எந்தவித அரசியல் லாபமும் இல்லை. ஆனால் உடனடி லாபம் அமித்ஷாவுக்கு கிடைக்கிறது. டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில் அமித்ஷா தலைமையில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்தோம் என சொல்ல விரும்புகிறார்.

பிரதமர் மோடியின் வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. 2014ல் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால் 2019ல் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக வென்றது. அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அமித்ஷா அனுமதிக்கவில்லை. அவர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதில் தீவிரம் காட்டினார். அதனால் எழுந்த வழக்கு, அரசியல் சூறாவளி காரணமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போது பாஜகவுக்கு பெரும்பான்மையே இல்லாத நிலையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜேபிசி ஆய்வுக்கு பின்னர் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் அதை நிறைவேற்ற முடியாது. அப்படி என்றால் அமித்ஷா இதனை விரும்பவில்லை. என்னை போன்ற மூத்த பத்திரிகையாளர்களுக்கு அமித்ஷா – மோடி இடையிலான மோதல் வலுத்து வருவது நன்றாக தெரிகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ஆகிறார். அமித்ஷா பிரதமர் ஆகிறார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

edappadi palanisamy

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தென்னிந்தியாவின் முகமாக பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை மோடி விரும்பவில்லை. அதனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வளர்த்து விட்டனர். ஆனால் அவர் என்ன செய்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது  என்பது தெரிந்து விட்டது. அதிமுக வாக்குவங்கி இல்லாமல் பாஜக வெல்ல முடியாது என அக்கட்சியினருக்கு தெரிந்துவிட்டது. இதனால் தமிழக மூத்த பாஜக தலைவர்கள் அதிமுக கூட்டணிக்கு வலியுறுத்தும் நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட இளம் தலைமுறையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிரச்சினை உள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை விரும்பவில்லை. அவர்கள் மூலம் மீண்டும் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை எடப்பாடி ஏற்கவில்லை. அதனால் தான் அமித்ஷாவோடு நெருக்கமாக உள்ளேன் என காட்டிக்கொள்ள விரும்புகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நாளை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நியாயமாக பார்த்தால் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து வகையிலும் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை கொண்டவர். எனவே அந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கவே கூடாது. ஆனால் அதனை விசாரணைக்கு எடுத்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் அமித்ஷா அதிமுகவுக்கு உதவுவார்கள் என எடப்பாடி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ