ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் பாஜக எம்பி ஒருவரை ராகுல்காந்தி கீழே தள்ளிவிட்டதாக கூறி ஆளும்கட்சி தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மசோதாவை பாஜக அரசு கடந்த 17ம் தேதி தாக்கல் செய்தது. அந்த மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தது. அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் பேசும்போது டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று விமர்சனம் செய்தனர். அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதற்கு எடுத்தாலும் அம்பெத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்து பேசினாலும் சொர்க்கத்திற்கு போகலாம் என்று கோபமாக பேசியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த ஆணவமான பேச்சைக் கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். எதிர் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யும்போது ஆளும் கட்சி சார்பில் சமாதானம் செய்வதுதான் வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்கட்சி எம்.பிக்களை கண்டித்து ஆளும் கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அப்போது இரண்டு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பாஜகவை சேர்ந்த பிரசாத் சாரங்கி எம்.பி. என்பவரை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தள்ளிவிட்ட தாகவும், அதனால் படியில் விழுந்த பிரசாத் சாரங்கி தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து ராகுல்காந்தி, என் அருகில் கூட பிரசாத் சாரங்கி எம்பி வரவில்லை, நான் அவரை தள்ளிவிட வில்லை. இவ்வளவு கூட்டத்தில் நான் அப்படி செய்ய முடியுமா என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி தள்ளிவிட்டாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஆனால் அதற்கு முன்பே ராகுல்காந்தி தான் தள்ளிவிட்டார் என்றும் அதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக அரசு ராகுல்காந்தியை நோக்கி குற்றம்சுமத்துகிறது. அவர் மீது நாடாளுமன்ற வளாக காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி செய்தியாளர்களை சந்தித்தபோது, இன்று காலை காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பெண் எம்.பி.க்கள் தான் முன் நின்று சென்றனர். அதனை தொடர்ந்து தான் ராகுல் உள்ளிட்ட ஆண் எம்.பி.க்கள் பின்தொடர்ந்தனர். எதிர்கட்சி எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் பா.ஜ.க உறுப்பினர்கள் தான் வலுவாக தடுத்தனர்.அப்போது மல்லிகார்ஜுன கார்கே நிலைதடுமாறி கீழே விழுந்தார். ராகுல் காந்தி நின்றிருந்த இடத்தில் பா.ஜ.க.வின் ஒரு உறுப்பினர் கூட இல்லை. பா.ஜ.கவை சேர்ந்த உறுப்பினரை ராகுல் காந்தி தள்ளிவிட்டத்தாக பா.ஜ.க பொய் கூறுகிறது. ராகுல் காந்தியை தொடர்ந்து பாஜக குறி வைக்கிறது.மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். நாடாளுமன்றத்துக்கு உள்ளே எங்களை செல்ல விடாமல் தடுத்த அத்தனை பா.ஜ.க எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்ல விடாமல் எம்.பிக்களை எப்படி தடுக்க முடியும் ? பிரதமர் மோடிக்கு எதிராகவும், அதானி உள்ளிட்டோருக்கு எதிராகவும் சமரசம் இல்லாமல் போராடுபவர் ராகுல் காந்தி. அதனால் அவரை பா.ஜ.க குறி வைக்கிறது, அவரை எப்படியாவது முடக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. எனவே பா.ஜ.க.வின் நாடகம் தோல்வி அடையும், அரசியல் சாசனத்தை காக்க தொடர்ச்சியாக காங்கிரஸ் போராடும்.
அவைத்தலைவர்கள் பா.ஜ.க எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து பாஜக அரசை எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராகவும், அதானிக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால் அவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதனால் அவர் குறிவைக்கப் படுகிறார் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜக எம்.பி-க்கள் – கே.சி வேணுகோபால்