சீமான் போன்றோர் அனைவருக்கும் அரசு வேலை தருவேன் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அதனை ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும்தான் செயல்படுத்த முடியும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற் இளம் பெண்கள் பாசறைக் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்பது பல பேருக்கு பிடிக்காத ஆட்சியாக உள்ளது. அதற்கு பல விமர்சனங்கள் வைத்துக்கொண்டு உள்ளனர். அந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கக்கூடிய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். வாக்குரிமைக்காக பல நாடுகளில் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவ்வளவு போராட்டத்திற்கு பின்னர்தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஆனால் இந்தியாவில் முதன் முறையாக 1920ல் நீதிகட்சி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எந்தவித போராட்டமும் இன்றி வழங்கப்பட்டது.
இன்று பெண்களுக்கு இத்தனை உரிமைகள் கிடைத்துள்ளதற்கு காரணம் தந்தை பெரியார். பெண் விடுதலை குறித்து பெரியாரை விட பெரிய அளவில் பேசிய தலைவர்கள் யாரும் இல்லை. இன்று அவரை சிலர் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். அது ஏனென்றால் பெரியாரை சொன்னால் தனக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பதுதான். ஒரு பழைய படம் வரும், அதற்கு பிறகு ஒரு புதுப்படம் வரும். அந்த பழைய படத்தை பற்றி யாரும் பேச மாட்டார்கள். புதுபடம் பற்றித்தான் பேசி கொண்டிருப்பார்கள். அப்போது பழைய படம் ஏதாவது பேசினால் தானே அட்டென்ஷனை வைத்திருக்க முடியும். அதற்காக பெரியாரை பற்றி பேசினால், ஊடக வெளிச்சத்திற்கு வரலாம் என நினைத்துள்ளனர். அதை பேசுகின்ற ஒருவர் அந்த மேடையில் ஏறி பேசுகிறார் என்றால், அந்த தடத்தை வகுத்துக்கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
நீங்கள் படித்துவிட்டு அந்த இடத்தில் நிற்கிறீர்கள் என்றால், உங்களுக்கு சமூகத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதை உருவாக்கித் தந்தவர் பெரியார். பெரியாரை தலைவணங்கிவிட்டு தான் அந்த மேடையில் நீங்கள் ஏறுகிறீர்கள். நமது அரசியலமைப்பு சட்டத்தில் இடஒதுக்கீட்டிற்காக முதல் சட்டத் திருத்தத்தை போராடி கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதன் பின்னர்தான் சாதியின் அடிப்படையில் படிக்கக்கூடாது என ஒதுக்கிவைக்கப்பட்ட நமக்கு படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் பெரியார். அப்படி எழுத படிக்க தெரிந்தால் ஒவ்வொரு எழுத்தின் பின்னால் நிற்பது தந்தை பெரியார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சமூகத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. சமுதாயம் என்பது அதன் கட்டுமானங்கள், கட்டமைப்புகளை எல்லாம் மாற்றிக்கொள்வதற்கான அவகாசத்தை வழங்கினால்தான் அந்த மாற்றம் காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும். எல்லோருக்கும் எல்லாம் என்று ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பது தான் திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய எதிர்காலத்திற்கு நாம்தான் திட்டமிட வேண்டும். மேடையில் ஏறிக்கொண்டு நான் இது செய்வேன், நான் அது செய்வேன். அனைவருக்கும் அரசு வேலை தருவேன் என்று சொல்லலாம். கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த முடியுமா?- அது ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும்தான் முடியும். மேடையில் ஏறி ஆட்சி நடத்துவது என்ன என்றே தெரியாமல், மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து கூட கேட்க முடியாமல், அதற்கு கூட நேரம் இல்லாதவர்கள் எல்லாம். நாளை ஒரு பதவிக்கு வந்துவிட்டால் நம்மை பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நம்முடைய சுய மரியாதையை, நாம் போராடி பெற்றிருக்கிற உரிமைகளை, பகுத்தறிவை உடைத்து நொறுக்குவதற்கு என்றே சிலர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரவதாக சொன்னார்கள். ஆனால் அது நடைமுறைக்கு வராத வகையில் மாற்றி வைத்துள்ளனர். 100 வருடங்கள் ஆனாலும் அந்த மசோதா நடைமுறைக்கு வராது. ஒரு பெண் பாலியல் பாலத்காரத்திற்கு உட்பட்டால் அந்த பண்ணை கேள்வி எழுப்பக் கூடியவர்களாக நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டும் என நினைக்கிறவர்கள். எந்த காலத்திலும் அவர்கள் தான் நமது கொள்கை எதிரிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.