விஜய் திரைக்கு பின்னால் இருந்துகொண்டு அரசியல் ரீதியாக நகர வேண்டும் என்று நினைக்கிற நபராக உள்ளார் என்று திராவிட இயக்க பேச்சாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் கேஸ்ட் சர்வே நடத்தக்கோருவது குறித்தும், அய்யநாதன் குற்றச்சாட்டு குறித்து வல்லம் பஷீர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:தவெக தலைவர் விஜய் வெளியிட்டு உள்ள அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சீமான் பெரியாரை பற்றி பேசியதை விட மோசமான பேச்சு விஜயினுடையது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருந்தது வகுப்புவாரி இடஒதுக்கீடுதான். அதன் பிறகுதான் முத்தையா முதலியார் விவகாரம், வரலாறு எல்லாம் மக்களுக்கு தெரியும். தந்தை பெரியார் யாருடைய பெயரையும் பரிந்துரைத்தது இல்லை. முத்தையா என்ற பெயரை வைக்கத்தான் பரிந்துரைத்தார். விஜயின் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்புதான் மத்திய அரசு நடத்த வேண்டும், நீங்கள் கேஸ்ட் சர்வே எடுங்கள் என்கிறார். கேஸ்ட் சர்வே என்பது ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டுமானால் பயன்படலாம். சட்டம் இயற்றவும், இடஒதுக்கீடு வழங்கவும் அது நிச்சயம் பயன்படாது. அதிமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு ஒரு அரசியல் சித்து விளையாட்டு செய்து காட்டினார்கள். அதுதான் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு. அது வன்னிய சமுதாய மக்களை ஏமாற்றுவதற்கு அது தேர்தல் உத்தியாக பயன்படுத்தப் பட்டதே தவிர, உண்மையிலே வன்னியர்களுக்கு அது பயன்பட்டதா?. அது பயன்படாமல் போனதற்கு காரணம், அதனை முறையாக செய்யவில்லை. இது குறித்து சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், போக்குவரத்து துறை அமைச்சரும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர்.
கேஸ்ட் சர்வே எடுப்பதன் மூலம் என்ன முடிவுகள் கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். தெலுங்கானாவில், பீகாரில் நடக்கவில்லையா? பீகாரில் எடுத்த போது நீதிமன்றம் தடை விதித்துவிட்டது விஜய்க்கு தெரியுமா? சர்வே எடுப்பதால் எந்த பயனும் கிடையாது. இதை ஏன் ஒரு மாநில அரசு செய்ய வேண்டும். ஒரு அரக்கு என்று கொள்கை நிலைப்பாடு உள்ளது. செயல்திட்டம் உள்ளது. அரசு தன்னுடைய இயந்திரத்தை ஏதோ போகிற போக்கில் எல்லாம் பயன்படுத்த முடியாது. அரசை நடத்துவதற்கு என்று ஒரு நடைமுறைகள் உள்ளன. விஜய்க்கு ஸ்கிரிப்ட் சொல்பவர்கள் இதில் உள்ள பிரச்சினைகளை எடுத்துச்சொல்லுங்கள். அவருக்கு ஒரு நல்ல சூழல் உள்ளது. அது என்ன என்றால் விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதே கிடையாது. மக்களை சந்தித்து, நேரடியாக பேசுவதே கிடையாது. பனையூர் பங்களாவில் நிவாரண பொருட்கள் வழங்குவது போல புகைப்படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள். பத்திரிகையாளர்களை சந்தித்தால் நிச்சயமாக இந்த கேள்வியை கேட்டுவிடுவார்கள். கேஸ்ட் சர்வே எடுத்தாலே இடஒதுக்கீட்டிற்கு போதும் என்றும் விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் அறிக்கைகளை கொடுக்கிறார். விஜயிடம் அரசியல் தெளிவும் இல்லை. அரசியல் களத்தில் எதை பேச வேண்டும் என்கிற புரிதலும் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு எது தேவையோ அந்த அரசியலை பேசாமல், அரசியல் களத்தில் நீங்கள் எதை முனைவைத்திருக்கிறீர்களோ, அதற்காகவாவது பேச வேண்டும். பெரியார் குறித்து ஒரு மாத காலமாக அவதூறுகளை பரப்பியதற்கு ஒரு இடத்திலாவது எதிர்ப்பை பதிவு செய்தீர்களா? தாவெக மாநாட்டில் ஆளுநர் பொறுப்பு தேவை இல்லலை என்று தீர்மானம் போடுகிறீர்கள். ஆனால் அதே ஆளுநரிடம் கோரிக்கை மனுவை எடுத்துக்கொண்டு நிற்கிறீர்கள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? வன்முறை சூழலை உருவாக்க நினைக்கும் ஒரு கும்பல். உண்மையிலேயே காலம் காலமாக வழிபாடு நடத்திக்கொண்டிருக்கிற, சமய நல்லிணக்கத்தை விரும்புகிற ஒரு தரப்பு. இதில் யார் பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்? அரசுக்கு என்ன அறிவுரை கொடுக்கிறீர்கள். வேலுநாச்சியாரின் வரலாறு உங்களுக்கு தெரியுமா? பெரியார் என்ன சொன்னார் என்கிற புரிதல் உங்களுக்கு உள்ளதா? நீங்கள் வேறு யாரை எல்லாம் காட்டுகிறீர்களே, இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எதை செய்தார்களோ, அதை உள்வாங்கிதானே நீங்கள் கொள்கை தலைவர்களாக ஏற்க முடியும். அதுதானே எதார்த்தமாக இருக்க முடியும். நீங்கள் வெறுமனே அந்த தலைவர்களின் பிம்பத்தை பயன்படுத்துகிற பிம்ப அரசியலை செய்கிறீர்களா? அல்லது அவர்களது கொள்கையை உள்வாங்கி இருக்கிற கொள்கை அரசியலை செய்கிறீர்களா? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.
பத்திரிகையாளர் அய்யநாதன் ஒரு தலைச்சிறந்த சிந்தனையாளர். அவருக்கு இருக்கும் அரசியல் புரிதல், கொள்கை தெளிவு வேறு ஒருவருக்கு இருக்காது. விஜய் கட்சியில் அய்யநாதனை அழைத்து பாசறை கூட்டங்கள் எல்லாம் நடத்தினார்கள். அரசியல் என்றால் என்ன என்று தெரியாத விஜய் கட்சியினரை அரசியல் வயப்படுத்தும் வேலையை அய்யநாதன் போன்றோர் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டை, கடந்த காலத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஒருவரும் என்னிடம் சொல்லி உள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் தவெகவுக்கு வருவார் என்று தகவல் வந்தது. அவர் என்னையும் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். விஜய் மாநாட்டில் அவர் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் அவரிடம் கேட்டபோது, விஜயை நேரில் சந்தித்து பேச வேண்டும் என கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். நேரில் சந்தித்து பேச வாய்ப்பு இல்லாததால் அந்த கட்சியில் சேர வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன் என்றார். விஜய் திரைக்கு பின்னால் இருந்துகொண்டு அரசியல் ரீதியாக நகர வேண்டும் என்று நினைக்கிற நபராக உள்ளார். நேரடியாக களத்திற்கு வந்தோ, கட்சி நிர்வாகிகளை சந்திக்கிற வாய்ப்போ இல்லை.
அரசியல் கட்சி தொடங்கி தலைவர் என்கிற ஒரு நிலைக்கு வந்துவிட்டபோது, நேரடியாக தொடர்பு எல்லைக்கு வந்தால்தானே அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்று தெரியும். புஸ்ஸி ஆனந்த் அவருக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுக்கிறார் என சொல்கிறார்கள். பொருளாளர் தனக்கு வேண்டியவர்களை மட்டும் உங்களை சந்திக்க வைப்பதாக கூறுகிறார்கள். தவெக தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஒரு வருட காலத்தில் என்ன செய்தீர்கள். கட்சி தொடங்கி ஓராண்டிற்கு பிறகுதான் மாவட்ட செயலாளர்களை நியமிக்கிறீர்கள். ஒன்றிய, நகர, பேருர், கிளை கழக கட்டமைப்பு வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடும். அவரிடம் போய் சொல்பவர்கள், இவருக்கு புரிதல் உள்ளது. இவர் வந்தால் சரியாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதை மேலோட்டமாக உள்வாங்கிக் கொள்கிற ஒரு மனநிலையில் தான் விஜய் உள்ளார். ஆனால் அவருக்கு என்று ஒரு பகுப்பாய்வு கிடையாது. விஜய்க்கு அரசியல் புரிதலும் இல்லை, யாரை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லை. அதனால் வருகிற, போகிறவர்களுக்கு எல்லாம் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதனால் அய்யநாதன் தப்பித்துக்கொண்டார். அய்யநாதன் நாம் தமிழர் கட்சிக்கு சென்றதே எங்களுக்கு எல்லாம் வருத்தம்தான். அது அவருக்கு ஒரு சுமையாகத்தான் இருக்கும்.
பழ.கருப்பையா, திமுக – அதிமுகவுக்கு மாற்றாக புதிய இயக்கம் வரும் என நம்புகிறார். அவர் போய் திமுகவில் சேர்ந்தது என்பது திமுகவுக்கு பலம். ஆனால் அவர் போன்ற அதீதமான அறிவுஜீவிகளால் ஓரிடத்தில் நிலை பெற முடியாது. திமுகவில் இருந்து ஏன் வெளியேறுகிறேன் என்று என்னிடம் சொன்னார். செந்தில் பாலாஜி போன்றோர் இருக்கின்றபோது நான் இந்த இயக்கத்திற்கு தேவைப்பட மாட்டேன் என்று சொல்லி விட்டுதான் வந்தேன் என்றார். அரசியல் என்பது அறிவுஜீவிகளும் வேண்டும், செந்தில் பாலாஜியும் வேண்டும் என்பதால்தான் தலைவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டார். மாநில சுயாட்சிக்கு எதிராக எப்போது எல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் முதல் குரல் பழ கருப்பையாவின் குரலாகத்தான் இருக்கும். வள்ளுவர் குறித்து, வள்ளலார் குறித்து பாஜக தன்வயப்படுத்தி பேசியபோது, கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். விஜய் குறித்த தகவல்களை அவர் உள்வாங்கி இருப்பார். அதனால் அவர் விஜயுடன் செல்ல மாட்டார். அவர் புஸ்ஸி ஆனந்தோடு உட்கார்ந்து பேசிவிடுவார். ஆனால் ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுடன் அவர் நிச்சயம் அமர்ந்து பேச மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.