Homeசெய்திகள்கட்டுரைஅண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி... போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

-

- Advertisement -
kadalkanni

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள சரியான நடவடிக்கை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நடத்திய திடீர் ஆய்வு தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வுக்கு பின்னர் அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவார். அவர் தமது பக்கம் உள்ள தவறுகளை சொல்ல மாட்டார். அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்காமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டும் முரண் பிடிவாதம் தான் காரணம். இவர் மக்களிடம் எப்படி கொண்டுசெல்ல வேண்டும் என நினைக்கிறார் என்றால் ஆளுநர் தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர். அதனால் துணைவேந்த நியமன விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என கொண்டு செல்ல விரும்புகிறார். ஆனால், அது அப்படி இல்லை. முதலில் ஆளுநர் என்ற அடிப்படையில் அவருக்கு தாமாக பல்கலைக் கழங்களின் வேந்தர் என்ற பொறுப்பு வந்துவிடவும் இல்லை. அந்த காலத்தில் மாநில ஆளுநர்கள் அரசியல் சார்பு அற்றவர்களாகவும், நடுநிலையாளர்களாக இருந்ததாலும், மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டத்தில் ஆளுநர்களை பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக நியமித்தனர். விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் பிரதமர் என்பவர் விசிட்டர் பொறுப்புதான் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசும், ஆளுநருக்கு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. தற்போது ஆளுநர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதால் அவர்களை அந்த பதவியில் இருந்து நீக்கி தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு கையெழுத்து போடாமல் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.  இது எவ்வளவு கீழ்த்தனமான செயலாகும்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

ஆளுநர் ஆர்.என்.ரவி, நான் தான் பல்கலைக்கழங்களின் வேந்தர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி எனில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஏன் இணை வேந்தராக உள்ளார்?. இதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா. ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான வழிமுறை என்னவென்றால், அரசு அமைக்கும் தேடுதல் குழு தகுதி வாய்ந்த 3 நபர்களின் பெயர்களை, இணை வேந்தர் எனப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் வாயிலாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். இது தான் நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமது அதிகார வரம்பை மீறி தானே துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு அரசே அமைத்த தேடுதல் குழுவில், யூஜிசி உறுப்பினரையும் சேர்க்க சொல்லி மூக்கை நுழைத்தார். இப்படி அனைத்து விவகாரங்களையும் தெரிந்தே செய்கிறார்கள்.

அதானி முறைகேடு விவகாரத்தில் அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் இது குறித்து ஏன் என்று விசாரிக்கலாம் அல்லவா?. அதானியிடம் நடத்திய விசாரணையில் திருப்தி ஏற்படும்பட்சத்தில், அமெரிக்காவிடம் தங்கள் நாட்டின் குடிமகன் மீது குற்றம்சுமத்தியது ஏன் என்று கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?. ஆனால் மத்திய அரசு அந்நாட்டின் மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததால், அமெரிக்காவும், பிரான்சும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கீழ்த்தரமாக மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிற நிலையில், இவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் கீழ்த்தரமாகத்தான் நடப்பார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், கீழ்த்தரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார். இதை சொல்ல எனக்கு சந்தோஷமாக இல்லை. ஆனால் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும்  முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு சென்று என்ன செல்லப் போகிறார். அங்குள்ள புதர்களை அகற்ற சொல்லப் போகிறாரா?, சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய சொல்லப்போகிறாரா?, லைட்டுகளை பொருத்த சொல்லப் போகிறாரா? இதுதான் அவரது வேலையா?. இதுபோன்ற வேலைகளை செய்ய வேண்டியது துணை வேந்தரின் கடமை. அவர் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிடுவார். பதிவாளர் அந்த பணிகளை மேற்கொள்ளா விட்டால், துணைவேந்தர் அழைத்து கண்டிப்பார். இது தான் நடைமுறை. துணைவேந்தரே நியமிக்காமல் இருந்தால் எப்படி?, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அனைத்து குளறுபடிகளையும் ஆளுநரே செய்துவிட்டு, மக்களை குழப்புவது போல அறிக்கை விடுவது. இன்று பல்கலைக் கழகத்தில் சென்று ஆய்வு மேற்கொள்வது போன்றது எங்களை போன்றோரை அவமதிக்கும் செயலாகும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர், காவல் ஆணையர் கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்ப காரணங்களே காரணம் என காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகர் மாணவியை மிரட்டுவதற்காக செல்போனில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் உள்ளவர்கள் அரசின் முன் அனுமதி பெற்றுதான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவி விவகாரத்தில் மிகுந்த அழுத்தம் காரணமாக மாநகர காவல் ஆணையர் அருண் தமக்கு கிடைத்த சில தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில் இந்த விவகாரத்தில் 2 பேர் ஈடுபடவில்லை என்றும், ஒருவர் தான் ஈடுபட்டார் என்றும் தெரிவித்துள்ளார். குற்றவாளியை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும், எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் விசாரித்து வருவதாகவும் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். அவரது கருத்தில் எந்த தவறும் உள்ளதாக எனக்கு தெரிய வில்லை.

chennai commissioner
chennai commissioner

காவல் ஆணையர் அருண் எதற்காக பத்திரிகையாளர்களை சந்திப்பு நடைபெற்றது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியலாக்கப்படுவதாகவும், இது அப்படி இருக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இது ஒரு குற்றச்செயல், இதனை காவல்துறை அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி யார், அவர் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதெல்லாம் தங்களுக்கு தேவையில்லை, நாங்கள் ஒரு குற்றவாளியை குற்றவாளியாத்தான் பார்ப்போம், நடவடிக்கை எடுப்போம் என அருண் தெளிவுபடுத்தினார். மாணவி பாலியல் விவகாரம் குறித்து தெளிபடுத்த வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இருந்தது. அதனை ஆணையர் அருண் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல் ஆணையர் அருணை குற்றம்சாட்டுவது வரம்பு மீறிய செயலாகும்.

அப்படி பார்த்தால் எந்த ஒரு வழக்கு விசாரணையையும் அதிகாரிகள் தாமகவே முன்வந்து மேற்கொள்ளவே விடமாட்டார்கள். அந்த செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அருண் யாருக்கும் ஆதவாக பேசினாரா? அங்குள்ள நிலைமையை சொன்னார், என்ன செய்திருக்கிறோம் என்று சொன்னார். இன்னும் என்ன செய்ய உள்ளோம் என்றும் சொன்னார். அப்போதே, வழக்கின் விசாரணை விவரங்களை வழக்கமாக நாங்கள் வெளியில் சொல்ல மாட்டோம். ஆனால் இது அரசியலாக்கப்படுவதால் உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சொல்கிறோம் என அருண் கூறினார். அவரது கடமையை தான் காவல் ஆணையர் அருண் செய்துள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ