அதிமுகவில் குழப்பதை ஏற்படுத்தி, கட்சியை அழிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் 2வது கட்சியாக உருவெடுக்க பாஜக சதி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் மோதல் விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக தற்போது முட்டுச்சந்தில் நிற்கிறது. இருப்பதா? அல்லது இல்லாமல் போவதா? இருப்பது என்றால் பாஜகவுடன் சேந்தால் இருக்கலாம். இல்லாமல் போவதற்கும் பாஜகவுடன் சேர்ந்தால் இல்லாமல் போய் விடலாம். அதிமுகவுக்கு தற்போதுள்ள இரு வாய்ப்புகளுமே பாஜகதான் என்றாகி விட்டது. சாணக்யா நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்பதால், அவரை பாஜக கையில் எடுத்துக்கொள்ளுமா என கேள்விகள் எழுகின்றன. ஆனால் எதார்த்தம் என்ன என்றால்? அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கீழ் கணிசமானவர்கள் ஒன்றாக உள்ளனர். ஒபிஎஸ் மூத்த கட்சியின் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர் ஆவார். ஆனால் எத்தனை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அவருக்கு பின்னால் சென்று விட்டார்கள். எத்தனை எம்எல்ஏ-க்கள் அவர் பின்னாடி நின்றார்கள்.
சிக்கல் என்னவென்றால் பாஜக நேர்மையாக நடந்துகொள்வது இல்லை. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்குவது என்றாலும், தற்காலிகமாக பயன்பாட்டு உரிமையை நிறுத்தி வைப்பார்கள். ஆயிரக்கணக்கான ஆவணங்கள் உள்ளதால் அதனை படித்து பார்க்க நேரமாகும் என்று சொல்லி இரட்டை இலையை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிப்பார்கள். 1988ல் ஜானகி – ஜெயலலிதா மோதல் காரணமாக தற்காலிக தடை விதித்தார்கள். பெரும்பான்மை ஜானகி அம்மாளுக்குதான் ஆதரவாக இருந்தது. அப்படி இருந்தும் ஏன் நிறுத்தி வைத்தார்கள் என்றால், லாபம் காங்கிரஸ் கட்சிக்குதான். மூப்பனாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பார்த்தார்கள். ஆனால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக வர முடியாது என்று நன்றாக தெரிந்தது. அதேநேரத்தில் அதிமுகவில் ஜெயலலிதாவின் கைகள் ஓங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமியை எடுத்துக்கொண்டோம் என்றால் அதிமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் அவரிடம் தான் உள்ளனர். ஆனாலும் தேர்தல் ஆணையம் இப்படியான முடிவை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அதுதான் அதிமுக விவகாரத்தில் பயன்படுத்தப்படும் மிரட்டல் ஆயுதமாகும். அப்படி ஒரு முடிவை எடுத்தால் அதிமுகவில் குழப்பம் ஏற்படலாம். அதில் மீன்பிடிக்கலாம் என்று பாஜக எண்ணுகிறது. அதிமுகவை அழிக்காமல் எப்படி பாஜக 2வது இடத்திற்கு வர முடியும்.
எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையிலான மோதல் வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் வழக்கமான வாயிலை தவிர்த்துவிட்டு செங்கோட்டையன் மாற்று வழியில் சென்றுள்ளார். வாயில் மட்டும்தான் தனியா? அல்லது பாதையே தனியா? என்கிற கேள்வி எழுகிறதா? கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், எம்ஜிஆர் தொடங்கியை கட்சியை பாதுகாக்கத்தான் முயற்சி செய்வார். ஆனால் சிக்கல் என்ன என்றால்? அப்படியான அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க மறுப்பதுதான். செங்கோட்டையன் 1972 முதல் அதிமுகவில் இருக்கிறார். அந்த காலம் முதலே சட்டமன்ற உறுப்பினர். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் நின்று போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இயல்பாக செங்கோட்டையன்தான் சீனியர். அவரிடம் கேட்டால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு உள்ளதாகதான் தெரிவிப்பார். அந்த வாய்ப்பை காலம் கொடுக்குமோ இல்லையோ? ஆனால் காலம் மட்டும் அல்ல காலன் கொடுக்கும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவை பலப்படுத்தி திமுகவை வீழ்த்தலாம். அதிமுகவிடம் 20 சதவீத வாக்குகள் இன்றைய தேதிக்கு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அது மேலும் கூடும். பாமக கூட்டணிக்கு வரும் என்கிற பேச்சு உள்ளது. விஜய் வருவாரா? வரமாட்டாரா? என்பது யூகம்தான்.
தமிழ்நாட்டில் அடுத்து வரப்போவது ராஜ்யசபா தேர்தல். வழக்கமாக பெரும்பான்மை உள்ள கட்சி 4 இடங்களில் போட்டியிடும். மற்ற 2 இடங்களில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும். அதன்படி, தற்போது திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் போட்டியிடும். ஆனால் அதிமுக பாமகவுக்கு ஒரு இடத்தை கொடுக்க விரும்பினால், அதிமுக வலிமை பெறும். அதை திமுக விரும்புமா? அப்படி நடந்தால் பாமக திமுக கூட்டணிக்கு வர முடியாது. அன்புமணியின் எம்.பி., பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், அவர் மீண்டும் போட்டியிட முயற்சிப்பார். எடப்பாடி பழனிசாமி எதிர்கால கூட்டணிக்காக ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுப்பதாக கட்சியினரை சமாதானம் செய்துவிட்டு ஒரு சீட்டை அதிமுகவுக்கும், மற்றொரு சீட்டை பாமகவுக்கும் கொடுத்தால் பாமகவுடன் சேர்ந்து அதிமுக கூட்டணி வலுவடையும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் உடனிருந்த தேமுதிகவுக்கு தராமல், பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு தரலாமா என்று கேள்வி எழுப்பலாம். ஆனால் அரசியலில் சர்ச்சையும் கிடையாது, சங்கடமும் கிடையாது. நியாமும் கிடையாது, எதுவும் கிடையாது. வெற்றிக்கான சூத்திரம் என்ன? வெற்றிக்கான சூத்திரம் என்பது கூட்டணிதான். 30 சதவீத வாக்குகள் இருந்தால்தான் வெற்றிக்கூட்டணி மாதிரி தெரியும். தற்போது அதிமுகவிடம் 30 சதவீத வாக்குகள் இல்லை. பாமக வாக்குகள் வந்தால், அதிமுக கொங்கு மண்டலத்தில் அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். எடப்பாடியில் வெற்றி பெறுவதற்கே பாமகவின் ஆதரவு தேவையாகும். தருமபுரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் சவுமியா வெற்றிபெற்றிருக்க மாட்டார்களா? தேமுதிகவின் வாக்கு வங்கி கணக்கு என்ன? அந்த கணக்கின் அடிப்படையில் பொருத்திருங்கள் அடுத்த முறை வாய்ப்பு தருகிறோம் என்றுதான் சொல்லுவார்கள்.
திமுகவுக்கு மைனஸ் என்ன என்றால் கமலுக்கு ஒரு சீட் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். திமுகவில் பதவிக்காலம் முடிபவர்கள் எல்லோரும் மூத்த நிர்வாகிகள் ஆவார்கள். அவர்களை எல்லாருக்கும் சீட் வழங்க இடங்கள் இல்லையே? அப்போது 4 இடங்களுக்கு பதிலாக 5 இடங்கள் கிடைத்தால் திமுகவுக்கு லாபமா? இல்லையா?. அதிமுகவில் செங்கோட்டையனையும் சேர்த்து 5 எதிர்ப்பு எம்எல்ஏக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் ரகசிய வாக்குப்பதிவு நடைபெறுவதால் கட்சி மாறி வாக்களித்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி போட்டால் ஒரு சீட் போய்விடும். அபிஷேக் சிங்விக்கு அப்படி நடைபெற்றுள்ளது.
திமுகவுக்கு தமிழ் உணர்வாளர்கள், இரு மொழி கொள்கை ஆதரவாளர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் ஆகியோரது வாக்குகள் உறுதியாகிவிட்டன. அதிமுக வாக்குகள், திமுக எதிர்ப்பு மட்டும்தான் தற்போது உள்ளது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் திமுக பக்கம் போய்விட்டது. கடந்த 2 மாதங்களாக நடைபெறும் சம்பவங்கள். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தென் மாநிலங்களில் இருந்தும், பஞ்சாபில் இருந்தும் வந்து கலந்துகொள்கிறார்கள். அதற்கு பிறகு ஏதேனும் விஷயம் வேண்டும். இதையே சட்டமன்ற தேர்தல் வரை பேச முடியாது அல்லவா?. இடையில் ராஜ்யசபா தேர்தல் வருகிறது. அதில் 5 இடங்கள் கிடைத்துவிட்டால், இன்னும் கொஞ்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இமேஜ் கூடும் அல்லவா. அதைதான் தலைவர்கள் விரும்புவார்கள்.

அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் குறைந்து கொண்டிருக்கிறது. செங்கோட்டையன் விஷயத்தை எடப்பாடி பழனிசாமி சமாளித்திருக்க வேண்டும். எஸ்.டி.சோமசுந்தரத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பேசி சமாதானப்படுத்தினார். கட்சிக்குள் கலகம் வந்தால் தலைவர்கள் அப்படிதான் சரிசெய்வார்கள். ஆனால் செங்கோட்டையனை போய் கேளுங்கள், என் பொறுப்பில்லை என்று சொல்லக்கூடாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் ஏதோ முன்முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். இருவருக்கும் இடையிலான புகைச்சல் நீண்ட நாளாக வெளிப்படையாகிவிட்டது.தற்போது வெடிச்சத்தமாக கேட்பதாகவே நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.