தமிழ்நாட்டில் பாஜகாவில் தனியாக நின்று வெல்ல முடியாது என்பதால் அதிமுகவை உடைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ. கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும், அதிமுகவில் செங்கோட்டையனின் கொந்தளிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பழ.கருப்பையா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு காரணம் இல்லாமல் இதுபோன்ற பாகாப்பை கவுரவத்தை வழங்குவது இல்லை. மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது வேண்டியவர்களாக ஆக்கி கொள்வதற்கோ இதுபோன்று பாதுகாப்பை வழங்குகிறது. பெரியாரை விமர்சித்து பேசி வரும் விவகாரத்தில், சீமானுக்கும் இந்த பாதுகாப்பு கொடுக்கப்போவதாக சொல்கிறார்கள். விஜய் கேட்டாலுமே ஒய் பிரிவு வழங்கமாட்டார்கள். ஏதாவது ஒரு பக்கம் நமக்கு சரியாக இருந்தால்தான் கொடுப்பார்கள். நாட்டின் தலைவராக இல்லாத ஒருவருக்கு ராணுவ மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது என்றால் அது மகாத்மா காந்திக்கு தான். நாட்டை உருவாக்கியவர் என்ற அடிப்படையில், அவருக்கு மரியாதை கொடுத்தார்கள். பெரியாருக்கு இறுதி மரியாதை கொடுக்கும்போது கூட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு கொடுக்கப்பட்டது. அவர் செய்த மக்கள் தொண்டிற்காக அரசு அந்த கவுரவத்தை வழங்கியது. அதற்கெல்லாம் அடிப்படை அவர்கள் மக்கள் தொண்டு செய்தவர்கள். மக்களுக்காக பல துன்பங்களை அனுபவித்தார்கள், பல அவமானங்களை தாங்கிக் கொண்டார்கள். அப்படி என்றால் அதற்கு ஒரு பொருள் உள்ளது. ஒன்றுமில்லை என்பதற்காக அடுத்ததாக சீமானுக்கு கொடுக்கிறேன் என்றிருக்கிறார்கள். இது தொடர்பான தகவல்கள் செய்தித்தாள்களில் வெளியகியுள்ளன. சீமானை வைத்து அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. பாஜக எந்த ஒன்றையும் முறைப்படி செய்வது கிடையாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது மிகவும் கேவலமானது. விஜய் அரசியல் சுற்றுபயணம் மேற்காள்ளப் போகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடாகவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு கிடையாது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள விஐபிக்களை தேடி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்றால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிடும். காவல்துறை மக்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக ஆகாத காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டியாகிறது. விஜயை வளைக்க முடியாமா? என்பதற்காக அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் செல்வம் பெரும்பங்கு விரையமாகிறது.
விஜய் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டால், தங்களுக்குதான் சாதகம் என நினைக்கிறார்கள். பாஜகவிடம் அவர் வசப்பட்டால் பாஜகவுக்கு தானே நன்மை. எதிரிகளை எல்லாம் பாஜக மடக்கி வைக்கிறது. ஒன்று கூட்டு சேர், அல்லது என்னை எதிர்ப்பதை விட்டுவிடு, திமுவுக்கு எதிராக இரு இதுதான் அவர்களது விருப்பம். இப்போது எதற்காக அதிமுகவை உடைக்கப்பார்க்கிறார்கள். பாஜகவால் இந்துத்துவா கொள்கைகளை சொல்லி தமிழ்நாட்டில் வாக்குகள் வாங்க முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அவர்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. ஆனால் அவர்களிடம் அதிகாரம் இருப்பதால் இதுபோன்ற கேவலமான வேலைகளை செய்கிறது. எங்கே எல்லாம் மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லையோ அங்கே இருக்கிற கட்சிகளை உடைத்து நாசமாக்கி, பணத்தின் மூலம் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். அதனால்தான் அதிமுகவை உடைக்க ஆள் பிடிக்கிறார்கள். ஒபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேரையும் வைத்து எடப்பாடியை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்களை உள்ளே அனுப்புகிறேன் என்று சொல்வது, அவர்கள் பாஜகவின் அஜெண்டாவை செயல்படுத்துவார்கள். இப்போது 3 பேரையும் அதிமுகவில் இணைக்க முடியாததால் செங்கோட்டையனை கையில் எடுக்க பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி உறுதியாக பாஜக எதிர்ப்பில் உள்ளார். அதனால் தான் அதிமுகவை உடைக்கப்பார்க்கிறார்கள். பாஜகவின் கருத்து வெல்லக்கூடாது என்றால் எடப்பாடி பழனிசாமி அவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு மூன்று நன்மைகள் நடக்கும். முதலாவது ஓபிஎஸ், தினரகன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க தேவையில்லை. 2வது சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும். மூன்றாவது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், உங்களோடு கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் தீர்மானமாக அறிவித்து விடுங்கள் திமுகவும், பாஜகவும் அதிமுகவின் எதிரிகள் என்று. உங்களுக்கு நிலைப்பாடு பாஜக எதிர்ப்பு, ஆனால் செயல்பாட்டில் பாஜக எதிர்ப்பு பெரிதாக இல்லை. அதனால் உங்களிடம் உள்ளவர்களை ஒவ்வொருவராக பிரிப்பதற்கும், வளைப்பதற்கும் பணத்தை கொடுத்து முயற்சித்து வருகிறார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். ஓபிஎஸ் போன்றவர்கள் திடீரென தர்மம் வெல்லும் என்று சொல்வதற்கு காரணம் மீண்டும் ஒரு முறை இரட்டை இலை சோதனைக்குள்ளாக போகிறது என்பது தான். எடப்பாடி பழனிசாமி திமுக எதிர்ப்பு உடன் நின்றுவிட முடியாது. மத்திய அரசு மீதான உங்கள் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும். திமுகவுக்கும் எதிர் அணிக்கும் நடைபெறும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெல்லட்டும். ஆனால் அந்த அணி பாஜகை விலக்கிவிட்டு வர வேண்டும்.
இந்த முறை தேர்தலின்போது ராமதாஸ் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார். அவரது பேச்சை மீறி அன்புமணி சென்றதால்தான் தந்தை – மகன் இடையே மோதல் வெடித்தது. அதிமுகவுடன் பாமக சேர்ந்திருந்தால் இருவரும் வாழ்ந்திருப்பார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு புதிய அணிகள் ஏற்படும். அதற்கு முன்னாள் நாம் நமது வேலைகளை பார்த்துக்கொண்டு வேகமாக செல்ல வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது என்பது மிக நீண்ட காலம் ஆகும். எடப்பாடி பழனிசாமி, பாஜக எதிர்ப்பில் உறுதியாகவே உள்ளார். அதனால்தான், ஓபிஎஸ், தினரன் உள்ளிட்டோருடன் இப்போது செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார்.
விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் எம்ஜிஆர் – ஜெயலலிதா புகைப்படம் வைக்காமல் இல்லாததால் அவருக்கு அவர்கள் மீது மரியாதை இல்லை என்று அர்த்தம் கிடையாது. செங்கோட்டையனுக்கு தனக்கு கட்சிக்குள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என அதிருப்தி. ஓபிஎஸ் வெகு காலமாக பாஜகவின் ஆளாகத்தான் உள்ளார். அவர்களால் தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதனால் தான் அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க பணம், அதிகார பலத்தை பயன்படுத்துகிறார்கள்.அதிமுகவினரிடம் கருத்தியல் ரீதியாக பாஜக எதிர்ப்பை கொண்டு செல்லுங்கள். இரட்டை இலை சின்னம் கிடைக்கா விட்டால் கூட பிரச்சாரத்தில் சென்று பாஜகவின் செயலை எடுத்துச் சொல்லுங்கள். எடப்பாடி செயல்பட தொடங்கினால், அவர்களின் ஆட்டம் எல்லாமே நின்றுவிடும்.
எடப்பாடி பழனிசாமி இல்லாமலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று தினகரன் சொல்கிறார். டிடிவி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சி வைத்துள்ளார். அதை நடத்திச்செல்ல வழியில்லாததால் தான் தற்போது அதிமுகவில் இணைய முயற்சிக்கிறார். சசிகலா பலம் இல்லாமல் வெளியே இருப்பது வேறு, அவர் உள்ளே வந்தால் இருப்பது வேறு. கருத்துக்கணிப்புகள் பணம் கொடுத்து தங்களுக்கு சாதகமாக நடத்தப்படுகின்றன. அதனால் அவற்றின் முடிவுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இவ்வாறு அவர் கூறினார்.