அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டே மத்திய அரசு முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளதாக, திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவி பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு வல்லம் பஷீர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தியதே, பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர். வெளியாகி அந்த பெண்ணிற்கு அவமதிப்பு நேர்ந்துவிட்டது என்று கூறிதான். அந்த போராட்டத்தை அறச்சீற்றம் என அண்ணாமலை கூறிக் கொண்டார். இப்போது, அந்த அறச்சீற்றத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. யார் மீது அவர் அறச்சீற்றம் கொள்ளப் போகிறார்? மத்திய அரசை குற்றம்சாட்டுவாரா அல்லது புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் மீது குற்றம்சாட்டுவாரா?. ஐபிசியில் இருந்து பி.என்.எஸ் டிரான்ஸ்பர்மேஷன் செய்தபோது, ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளதாக தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. இப்போது, யார் மீது அண்ணாமலை கோபப்பட போகிறார்?.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பி.என்.எஸ் சட்டம் கடந்த ஜுலை மாதம் தான் செயல்பாட்டுக்கு வந்தது. ஐபிசியில் பல குற்றங்களுக்கு தண்டனை குறித்த விரிவான சரத்துக்கள் சேர்க்கப்படவில்லை. அதனால் அதற்கான விரிவான தண்டனை விவரங்கள் குறித்தும், தண்டனை வழங்குவதற்கான கடுமையான சட்டங்களையும் கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை இந்த சட்டம் ஒரு போதும் ஆதரிக்காது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
ஐபிசியில் இருந்து பிஎன்எஸ் டிரான்ஸ்பர்மேஷன் செய்தபோது ஏற்பட்ட குறைபாடு காரணமாக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது தெரிய வந்ததாக தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனை சரிபார்த்தபோது இது உண்மை என கண்டறிந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய ஆவணக்காப்பகம் ஒரு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பி.என்.எஸ் சட்ட விதிகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இவற்றை எல்லாம் சட்டமாக கொண்டுவந்ததன் வாயிலாக இந்த பிரிவுகளை பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்தால், தன்னிச்சையாக வழக்கு எப்.ஐ.ஆர். பொதுமக்களின் பார்வைக்கு வராமல் இன்விசிபில் மோடுக்கு போய்விடும் என சொல்கிறது. அப்படி எனில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் மக்கள் பார்க்க முடியாத நிலைக்கு தன்னிச்சையாகவே மாற்றி விடும். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து இந்த ஒரு வழக்கு மட்டும் வெளியாகியது என்றால் எப்படி?
பிஎன்எஸ் சட்டம் கடந்த ஜுலை மாதம் நாட்டில் அமலுக்கு வந்தது. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் முதல் இன்ற சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12,813 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 12,813 வழக்குகளும் பாதுகாப்பாக இருக்கும்போது இந்த ஒரு வழக்கில் மட்டும் எப்படி எப்.ஐ.ஆர். வெளியானது. அப்போது ஏன் இந்த 12,813 வழக்குகளுக்கும் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என கேள்வி எழுகிறது. அப்போது திட்டமிட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி ஒரு அரசியலை முன்னெடுப்பதற்காக எப்.ஐ.ஆர்-ஐ கசிய விட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. தொழில்நுட்ப கோளாறு என்றால் இதற்கு முன் பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் பாதுகாப்பாக இருக்கும்போது, 12,814-வதாக பதிவு செய்யப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி வழக்கிற்கு மட்டும் பிரச்சினை உருவாகியது ஏன். திட்டமிட்டு ஒன்றிய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் மீது ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்ப வேண்டும் என செய்துள்ளனர்.
தொடக்கத்தில் இருந்து அண்ணாமலை பாயிண்ட்-ஐ புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை முதன் முதலில் செய்தியாளர்களிடம் என்ன சொன்னார் என்றால் எப்ஐஆர் லீக் ஆனது எப்படி? எப்ஐஆரை எப்படி வெளியிடலாம் என்று தான். அப்போது, எப்.ஐ.ஆர் வெளியாகிவிட்டதை அவர்தான் முதன் முதலில் அறிவிக்கிறார். எப்ஐஆர் லீக் ஆனது முதன் முதலில் அண்ணாமலைக்கு எப்படி தெரிய வந்தது. அப்படி எனில் முதல்நாளே இந்த திட்டத்தை வகுத்துள்ளனர். அது அண்ணாமலைக்கு தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காளை நீ பிரஸ்மீட்டில் சொல்லிவிடு என டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளது. அதை அவர் பிரஸ்மீட்டில் தெரிவித்துவிட்டார். அதை பாலோ செய்து மதியம் எடப்பாடி பழனிசாமியும் கூறிவிட்டார். எடப்பாடி இதை அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டார்.
பாஜக முழுக்க முழுக்க திட்டமிட்டு தமிழ்நாடு அரசை குறை சொல்வதற்காக, இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதற்காக தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, விஷயங்களை செய்து முடித்திருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியவந்துள்ளது. இப்போது அவர்கள் அம்பலப்பட்டு போய் நிற்கின்றனர். எப்ஐஆர் லீக் ஆனதற்கு மத்திய அரசே காரணம் என்று மத்திய அரசின் அமைப்புகளே தெரிவித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக்காப்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் 4.6 சதவீதம் ஆக இருந்தால் அங்கே பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அர்த்தம் என கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 0.7 சதவீதம் தான் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளன. அப்படி என்றால் பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு மீது நீங்கள் குற்றம் சொல்வதை தேசிய குற்ற ஆவணக்காப்பகமே இல்லை என நிருபித்துள்ளது.
மாணவி பாலியல் விவகாரத்தில் ஐபிசி டு பிஎன்எஸ் என டிரான்ஸ்பர்மேஷன் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று கூறி நாங்கள் எப்.ஐ.ஆரை வெளியிடுகிறோம். நாளை உண்மை தெரியவந்தால் கசிந்துவிட்டது என சொல்லி கொள்ளலாம் என்று எல்லோரும் சேர்ந்து ஒரு குழுவாக இந்த பிரச்சினையை உருவாக்க திட்டமிடுகிறார்கள். ஆளுநர் ரவியும் இதற்கு உடந்தையாக உள்ளார். அதனால் தான் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் ஏன் திடீரென வருகிறார். நீங்கள் நன்றாக யோசித்து பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் இந்த சார்? என்று எடப்பாடி பழனிசாமி போரட்டம் அறிவிக்கிறார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த விஜய், திடீரென தனது கைப்பட ஒரு அறிக்கையை எழுதி வெளியிடுகிறார். அதன் பிறகு ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டதாக சொல்கிறார்கள். உடனடியாக மதியானம் அப்பாயிண்ட்மெணட் கிடைக்கிறது. நேரடியாக செல்கிறார். எதற்காக இந்த திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்படுகின்றன.
திமுக அரசுக்கு எதிராக பாஜகவை முன்னிறுத்துகிற வேலையை இவர்கள் செய்கின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி திமுகவுக்கு எதிராக சரியாக செயல்படுகிறார் என காட்ட முயற்சிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் அதிமுகவுக்கும் அழுத்தம் கொடுக்கிறார்கள். திமுக தவறு செய்வதை அதிமுக சுட்டிக்காட்டினால் மக்கள் அதிமுக பக்கம் போய்விடுவார்கள். அது நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் விஜயை வைத்து பாஜகவினர் குறுக்கு சால் ஓட்டுகின்றனர். எனவே இது திட்டமிட்டு செய்த சதிதான். மாணவி பாலியல் வன்கொடுமை என சொல்லப்பட்ட 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் திமுகவை சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதனை அமைச்சர் ரகுபதி மறுத்தார். அவர் திமுகவை சேர்ந்த நபராகவே இருந்தாலும் அவரை காப்பாற்ற அரசு முயன்றதா?.
ஆனால் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 6 பேரில் 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது தலித்துகளுக்கு எதிரான அரசு எந்த மாநிலம்?. நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் குஜராத் முதலிடமும், உ.பி. 2வது இடம் பிடித்திருந்தன. ஆனால் தமிழ்நாடு 19வது இடத்தைதான் பிடித்திருந்தது. 19வது இடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை பற்றி பேசும் பாஜக முதல் இடங்களில் உள்ள குஜராத், உ.பி. குறித்து பேசாதது ஏன்?. இது திட்டமிட்டு வகுக்கப்பட்ட வியூகம். இதை திமுக முனை மழுங்கச்செய்கிறது. கொஞ்சம் அசந்திருந்தாலும் அவர்கள் பழியை திமுக மீது போட்டிருப்பார்கள். உடனடி கைது நடவடிக்கை மூலம் திமுக அதனை தடுத்துள்ளது. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது என்றுதான் நான் கருதுவேன்.
யார் அந்த சார்?
உள்துறை விவகாரத்தை கையில் வைத்திருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவி பாலியல் விவகாரத்தில் உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு, அனைத்து விதமான முன்னெடுப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த பிறகுதான் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமுலத்தில் தான் ஞானசேகரன் நான் சார்கிட்ட பேசுகிறேன், சாரிடம் சொல்லிவிடுவேன் என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் குற்றவாளி பிளைட் மோடில் போனை வைத்துக்கொண்டு மிரட்டுவதற்காக பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மிரட்டல் உண்மையா இல்லையா என காவல்துறை விசாரணையில் தெரியவந்துவிடும். நீதிமன்றமே குற்றவாளியை ஒரு அமைப்புடன் தொடர்புடையவர் என்பதை ஏற்கவில்லை. ஏனெனில் உண்மையில் அப்படி ஒரு கால் போகவில்லை. அப்படி போயிருந்தால் போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கும். இந்த விவரத்தை தெரிவித்தவர் காவல்துறை உயர் அதிகாரி. அவர் சொல்லிவிட்டு அப்படியே நகர்ந்துவிட முடியாது. நாளை ஆர்.டி.ஐ. வாயிலாக கேள்வி எழுப்பினால், அவர் நீதிமன்றத்தில் ஏறி பதில் சொல்ல கடைமைப்பட்டு உள்ளதை அறிந்தவர் ஆவார். எனவே வழக்கு சரியான திசைவழி போக்கில் செல்கிறது.
எனவே யார் அந்த சார்? விவகாரம் என்பது பாடல் வரிகளுக்கு ஏற்ப வசனத்தை வைத்துக்கொண்டால், அதுமக்களிடத்தில் எளிதாக எடுபடும். அதை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களிடம் சென்று சேரும் என்பது பாஜகவினரின் நம்பிக்கை. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பெண் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை, எடப்பாடி பழனிசாமி அரசு கைது செய்தது. ஆனால் அதற்கு காரணமான ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்ற சார் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், மத்தியில் ஆட்சியில் இருந்த மத்திய பாஜக அரசும் ஆளுநரை மாற்றவில்லை. அந்த சார் எந்த சார் என்று கடந்த காலத்தில் தெரிந்த போதே நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது இல்லாத சாரை தேடி கொண்டிருக்கிறீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.