Homeசெய்திகள்கட்டுரைதிமுகவுக்கு கைகொடுக்கும் பாஜக எதிர்ப்பு! ஜெ.வின் செல்வாக்கை சரித்த இபிஎஸ்!

திமுகவுக்கு கைகொடுக்கும் பாஜக எதிர்ப்பு! ஜெ.வின் செல்வாக்கை சரித்த இபிஎஸ்!

-

- Advertisement -

பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைப்பதை ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று பத்திரிகையாளர் லெஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைவது குறித்து மூத்த பத்திரிகையாளர் லெஷ்மி சுப்பிரமணியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின்போது அதிமுக – பாஜக கூட்டணி காரணமாக, அதிமுகவினர் பலர் திமுகவுக்கு வாக்களித்ததாக தெரிவித்தனர். 2024 மக்களவை தேர்தலின்போது, அந்த இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கூட்டணி அமைந்து விடும் என பலரும் அச்சம் தெரிவித்தனர். அதே நிலைதான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான மனநிலை இங்கே அதிகளவில் உள்ளது. ஆனால் அது ஒரு நேரேட்டிவ் ஆக  அமையவில்லை. அதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அதனை பெரிய அளவில் எடுத்துச்செல்லவில்லை. அதிமுகவில் உள்கட் பிரச்சினை. பாஜகவோ, அண்ணாமலையோ பேசினால் அவ்வளவு பெரிய அளவில் எடுபடவில்லை. இவற்றை எல்லாம் மீறி கூட்டணி அமைத்துள்ளார்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு பேட்டியிலும் பாஜக உடன் கூட்டணி இல்லவே இல்லை என்று சொல்லி வந்தார். இப்போது என்ன போகிறார்கள்? ஓபிஎஸ் கட்சியில் வெளியேற்றப்பட்டபோது அவர் மீது முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டே, அவர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார், கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்து விடுவார் என்பது தான். அப்படி எனில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி செய்துள்ளது என்ன? அவர் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேச சென்றிருப்பார் என்பதை நான் நம்பவில்லை. கூட்டணி தான் உருவாக போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இனி ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

திமுக, கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை, புதிய கல்விக்கொள்கை என அனைத்து விவகாரங்களிலும் பாஜக தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கிறது என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டனர். மக்களிடம் இது பெரியளவில் எடுபடுகிறது. இன்றைக்கு அதிமுக – பாஜக கூட்டணியில் சீமானும் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரியாரை பற்றி சீமான் பேசியபோது, அதிமுகவில் இருந்து பெரிய அளவில் எதிர்வினை ஆற்றவில்லை. இதைதான் பாஜகவும் செய்தது. பெரியாருக்கு எதிரானவர்களுடன் கூட்டணி என்றால் தமிழ்நாட்டில் அது பெரிய அளவில் எடுபடாது.

இந்த கூட்டணி கணக்குகள் எல்லாம் சேர்த்து தற்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக+ நாதக கூட்டணி,  விஜய் என்று மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீமான் தனித்து நிற்கும்பட்சத்தில் 4 முனை போட்டியாக அமையும். மும்முனை போட்டி ஏற்பட்டாலும் திமுகவுக்கான வாய்ப்புகள் அப்படியேதான் உள்ளது. பாஜக எதிர்ப்பு நேரடிவை பெரிய அளவில் கட்டமைத்துவிட்டார்கள். திமுக சரியான வியூகத்தை, சரியான நேரத்தில் கையில் எடுத்துள்ளது. பாஜகவுக்கு எதிரான குரலோ, மனநிலையோ கொஞ்சம் கூட குறையாதவாறு ஒன்றரை மாதமாக திமுக வைத்துக் கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி பாஜக எதிர்ப்பு திமுகவுக்கு கைகொடுக்கும். மகளிருக்கான பல்வேறு நலத் திட்டங்களும் திமுகவுக்கு கைகொடுக்கும்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தாலும், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக தொடருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அண்ணாமலையை ஆலோசித்துதான் டெல்லியில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். ஒரு வேளை அப்படி மாற்ற வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தலைவர் பதவிக்கான முகமாக யார் உள்ளார்? தமிழிசையை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை. நைனார் நாகேந்திரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் அவரை கொண்டுவருவார்கள் என்று தோன்றவில்லை. பாஜக மேலிடத்தை பொருத்தவரை தமிழ்நாட்டில் அண்ணாமலைதான் ஸ்டார். அண்ணாமலை இருந்ததால்தான் 2024 தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்தது. தற்போது அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று 2019 கூட்டணி மீண்டும் வந்துவிடும். அதே மாதிரியான ஒரு சூழல் ஏற்படும். மறுபுறம் விஜயை தனியாக வைத்திருப்பார்கள். திமுக, அதிமுக வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு தவெக ஒரு வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதை விஜய் எப்படி பயன்படுத்திக்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை. கட்சியில் கட்டமைப்பு எப்படி உருவாக்கினாலும், தவெக-வில் அனுபவமின்மை உள்ளது.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்பது நிச்சயமாக அதிமுகவுக்கு இழப்புதான். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது செல்வாக்கு 4 வருட அதிமுக ஆட்சிகாலத்தில் தான் அழிந்து போனது. ஜெயலலிதாவின் இல்லாத்தை நினைவு இல்லமாக மாற்றவில்லை. அவரது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது. கொடநாட்டில் கொலை நடைபெற்றது. அதற்கு யார் காரணம் என்பது முற்று பெறாமலே உள்ளது. ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு சுக்கு நூறாக நொறுக்கப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவுக்கு இருந்த பெண்கள் வாக்குகள் எல்லாம் இன்று அதிமுவுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி ஆவார். அவரது ஆட்சிக்காலத்தில் தான் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தினார்கள். அதை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். சசிகலா அதிமுகவில் இருக்கக்கூடாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் இன்றைக்கு அதே சசிகலா, அதே டிடிவி தினகரன் உடன் சேர்ந்துதான் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை எல்லாம் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் இந்த கூட்டணியை ரசிக்க மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ