ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த :- ஆர்எஸ்எஸ் பாஜக விரும்பாத 2 விஷயங்கள் தற்போது நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் 3 மாத காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்காவிட்டால் அது சட்டமாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மற்றொன்று வக்பு திருத்த சட்ட விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிப்போம் என்று முதல் நாளில் நீதிபதிகள் சொன்னார்கள். மத்திய அரசு இன்று நீதிமன்றத்தின் கால்களில் விழுந்து தடை விதித்து விடாதீர்கள். நாங்களே சில பிரிவுகளை நிறுத்திக்கொள்கிறோம். குறிப்பாக வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நாங்கள் நியமிக்க மாட்டோம். ஆட்சியர் வக்பு சொத்துக்களை மாற்றம் செய்ய மாட்டார். அதேபோல், வக்புவுக்கு வாய் வார்த்தைகளாக கொடுத்த சொத்துக்கள் தொடர்பாக எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என்கிற உத்தரவாதத்தை உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு கொடுத்து, அந்த வழக்கை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள். இந்த 2 விஷயங்களும் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுவரை நமக்கு ஆதரவாகத்தான் உச்சநீதிமன்றம் இருந்தது. தற்போது ஒரு சில தீர்ப்புகளை எதிராக கொடுக்கிறார்கள் என்பது தான் வருத்தம்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பில் சட்டரீதியாக என்ன தவறு உள்ளது?. பாஜக தரப்பில் ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ காலக்கெடு நிர்ணயிக்கக்கூடாது என்று வாதிடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பாஜக மெஜாரிட்டியை வைத்து ஒரு சட்டத்தை நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இந்த மசோதாவை 3 வருடமாக குடியரசுத் தலைவர் கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? தற்போதைய குடியரசுத் தலைவருக்கு பதிலாக காங்கிரஸ் குடியரசுத் தலைவர் இருந்தால், அவர் நாடாளுமன்றத்தின் எந்த சட்டத்திற்கும் கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்னால் பாஜக என்ன செய்யும்? நீதிமன்றத்திற்கு செல்வார்களா இல்லையா? நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்வார்களா? இல்லையா? அரசமைப்பு சட்டம் பிரிவு 200ல் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புதல் தர வேண்டும் என்று போட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது 3 வருடம், 5 வருடம் நான் வைத்துக்கொள்கிறேன் என்றால்? அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதுதான் உச்சநீதிமன்றத்தின் வேலையாகும். உச்சநீதிமன்றம் அரசியல் சட்ட உரிமைகளின் பாதுகாவலன் என்று சொல்லப்படுகிறது. அப்போது அரசியல் சட்டப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு வருகிறபோது இந்த சட்டப்பிரிவு 200ஐ எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்வது தானே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வேலை. அதை செய்யக்கூடாது என்று மிரட்டினால் என்ன அர்த்தம்?
உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு தான் அதிக அதிகாரம் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் கிடையாது. இதுதான் ஜனநாயகத்திற்கான அடிப்படை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கும், சட்டப்பேரவைக்கும் எந்த மதிப்பும் கிடையாது. ஆளுநர்கள் கையெழுத்தே போடாமல் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வேன் என்றால் என்ன அர்த்தம். குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தங்கர், நீதிபதிகள் நிர்வாகத்துறை அதிகாரம், நாடாளுமன்ற அதிகாரம் என எல்லாவற்றையும் கையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். பாஜக பல்வேறு விவகாரங்களில் உச்சநீதிமன்றத்துடன் கூடி குலாவி கொள்வார்கள். ஆனால் இவர்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பு சொன்னால் உடனே வெடிப்பார்கள்.
இதேபோல், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தால், அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அன்றைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும் நாட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். இன்றைக்கு உங்களுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது என்றால் எதிர்ப்பீர்களா? அரசியல் சட்டம் என்ன சொல்கிறேதோ அதைதான் சொல்ல முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் சட்டமன்றங்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. அதை தான் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 1935 இந்திய அரசு சட்டத்தில் ஆளுநர் என்கிற பிரிவு வருகிறது. அதற்கு பிறகு அரசியல் நிர்ணயசபையில் விவாதிக்கப்படுகிற போது ஆளுநர்களுக்கு விருப்புரிமை வழங்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போது யாருக்கு அதிகாரம் என்கிற விவாதம் நடைபெறுகிறபோது, நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கு தான் அதிகாரம்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தெளிவாக முடிவு செய்து, அமைச்சரவை சொல்வதை கேட்டுதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதா அனுப்பினால் அவர் கையெழுத்து போட வேண்டும். அல்லது காரணம் சொல்லி திருப்பி அனுப்ப வேண்டும். 2வது முறையாக திருப்பி அனுப்பினால் கையெழுத்து போடுவதை தவிர வேறு வழியில்லை. ஜனாதிபதிக்கு அனுப்பினால் அவரும் கையெழுத்து போட வேண்டும். இதுதான் அரசியல் சட்டம் சொல்கிறது. இதில் எது தவறு என்று பாஜக சொல்கிறது. அப்படி என்றால் ஒரு மசோதாவை 10 அல்லது 20 வருடம் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ நிலுவையில் வைத்திருக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வாருங்கள். அஸ் சூன் அஸ் பாசிபிள் என்றால் ஜெகதீப் தங்கர் சொல்லட்டும். மோடி சொல்லட்டும். அமித்ஷா சொல்லட்டும்.
குஜராத் படுகொலை வழக்குகளில் மோடி எல்லாம் பிரச்சினை இல்லை என்று சிபிஐ ரிபோர்ட்டை வைத்து வந்தார்கள். அதை ஆதரித்தீர்கள். அதற்கு பிறகு அமித்ஷா தொடர்பான கொலை வழக்கு. உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்றபோது தள்ளுபடி செய்துவிட்டார்கள். 4 நீதிபதிகள் வந்து உச்சநீதிமன்றத்தை மோடி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்று சொன்னார்கள். ஒன்று இரண்டு அல்ல கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்கிறார்கள். ரபேல் வழக்கில் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா? இது எல்லோருக்குமான சிக்கல்தான். அப்போது நீதிமன்றத்தை நீங்கள் எப்படி மிரட்டுகிறீர்கள்.