– என்.கே. மூர்த்தி
பிஜேபியின் தேர்தல் வியூகம் – தகர்த்தெரியும் மக்கள்!
18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி, வங்கி கணக்குகளை முடக்கி, தலைவர்களை கைது செய்து என்று பிஜேபியின் அணுகுமுறை வித்தியாசமாகவும், ஆபத்தான தாகவும் இருப்பதை உணரமுடிகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக-105 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 127 இடங்களில் வெற்றி பெற்றது.
சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை உத்தவ்தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் அந்த திட்டத்தை பாஜக ஏற்கவில்லை. பால்தாக்கரே காலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்து வரும் உத்தவ்தாக்கரேவுக்கு முதலமைச்சர் நாற்காலி மீது பெரும் கனவு இருந்து வந்தது. பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த நிலையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி- காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் உடன் எதிர்பாராத விதமாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூட்டணி அமைத்தார். பால்தாக்கரேவின் வாரிசு உத்தவ்தாக்கரே முதன்முதலில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது நீண்டகால கனவை நிறைவேற்றிக் கொண்டார்.
சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சி ஆகிய கூட்டணி உருவானதற்கு அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் சரத்பவார் முக்கிய பங்காற்றினார்.
இந்த கூட்டணியை மோடி, அமித்ஷா இருவரும் எதிர்பார்க்க வில்லை. அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த கூட்டணி நீடித்தால் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை உத்தவ்தாக்கரே முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் சிவசேனாவில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதலமைச்சர் பதவி ஆசையை தூண்டியது மத்திய பிஜேபி அரசு. சிவசேனாவை உடைத்து 40 எம்.எல்.ஏ- களுடன் வெளியேறிய ஷிண்டே, ஜூன் 30 – 2022ல் பிஜேபி கூட்டணியில் முதலமைச்சரானார்.
அதனை தொடர்ந்து சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் மீது அமலாக்கத்துறை ஊழல் வழக்கு பதிந்தது. அவர் சிறைக்கு போகவேண்டும் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க வேண்டும் என்ற இரண்டு வாய்ப்புகளை கொடுத்தது மோடி அரசு. அஜித்பவார் வேறு வழியின்றி இரண்டாவது வாய்ப்பை கையில் எடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.
உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. அதனால் அவற்றை முழுமையாக கைப்பற்ற பாஜக திட்டமிட்டு எதிர் கட்சியின் ஆட்சியை கலைத்து, கட்சிகளை உடைத்து துணிந்து ஜனநாயக விரோத செயலை செய்தது.
அதற்கு அடுத்து PMLA- என்கிற பணமோசடி தடுப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்கு இடையூறாக இருக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை, பிரமுகர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். அந்த வரிசையில் மேற்குவங்கம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், (ஜாமீனில் வந்துள்ளார்) துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சொரான், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜி போன்ற நாடு முழுவதும் செல்வாக்குள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தேர்தலுக்கு முன்கூட்டியே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
PMLA என்கிற பண மோசடி தடுப்பு சட்டம் 2002 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த சட்டம். ஒருவர் பணம் மோசடியில் ஈடுபட்டு, அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவரை கைது செய்யலாம். அப்படி கைது செய்யப்படும் நபர் இடைக்கால ஜாமீன் கேட்டு பெறமுடியும். அந்த சட்டத்தை 2018 ஆம் ஆண்டு பாஜக அரசு திருத்தம் செய்து அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியது.
ஊழல் செய்துள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். கைது செய்து சிறையில் வைத்துக்கொண்டு, அதன் பின்னர் ஆதாரங்களை திரட்டி கொள்ளலாம். அதுவரை சிறையில் இருப்பவர் ஜாமீன் கூட பெறமுடியாது. அதாவது சிறையில் இருப்பவர் தன்னைத்தானே குற்றமற்றவர் என்று நிருபித்துக் கொண்டு வெளியே வரவேண்டும். இப்படி ஒரு ஆபத்தான சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமானோர் தற்போதும் சிறையில் உள்ளனர்.
முக்கிய எதிர்கட்சியை முடக்க சதி
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 1994-95 மற்றும் 2014-15 , 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கட்சி கணக்கில் கொடுத்த பணத்திற்கான ஆவணங்களை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை குற்றம் சுமத்தியது. அதனால் காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கில் இருந்த 135 கோடி ரூபாயை வருமானவரித்துறை எடுத்து கொண்டது. மேலும் 3567 கோடி ரூபாயை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கையும் முடக்கியுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் உள்ள ஒரு தகவல். 2017-18 ஆண்டில் 1297 பேர் தங்கள் பெயர், முகவரி தெரிவிக்காமல் பிஜேபிக்கு 42 கோடி கொடுத்துள்ளனர். அதுகுறித்து வருமான வரித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராகுல்காந்தியை கைது செய்ய முயற்சி
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தன்னுடைய பேச்சில் “எப்படி திருடர்கள் அனைவருக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது,” என்று நீரவ் மோடி, லலித் மோடி போன்ற ஊழல் செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடியவர்களை குறித்து ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரும் சூரத் மேற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
18 வது மக்களவை தேர்தலை பிஜேபி இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான, சர்வதிகார வழிமுறைகளை தேர்வு செய்து இந்த தேர்தலை சந்தித்து வருகிறது.
பிஜேபியின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்கட்சி தலைவர்கள் எதிர்கொண்டு மிகுந்த சிரமத்தோடுதான் இந்த தேர்தலை சந்தித்து வருகின்றனர்.
ஜனநாயகம் நிச்சயம் வெல்லும்….