தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்திற்கு நிறைய பணிகள் இருக்கிறது. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது, வாக்கு பதிவு இயந்திரத்தை சரிபார்ப்பது, வாக்கு பதிவு இயந்திரத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பது என்று ஏராளமான வேலைகள் இருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியான காலக்கட்டத்தில் தேர்தல் ஆணையர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பதில் பிஜேபி ஏதோ புதிய திட்டத்திற்கு தயாராகி வருகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மேலும் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் பிஜேபி மிரட்டல் காரணமாக அந்த முடிவிற்கு வந்தாரா அல்லது பிஜேபியின் மோசடி திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு ராஜினாமா முடிவிற்கு வந்தாரா? என்பது எல்லோருடைய மனதிலும் எழும் சந்தேகம்.
கடந்த 2019 -ல் நடந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024 தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கபடவில்லை. மார்ச் 15 தேதிக்குள் அறிவித்ததாக வேண்டும். ஆனால் பிரதமரின் அரசு நிகழ்ச்சிகளை பார்த்தால் விரைவில் தேதி அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
சமீபகாலமாக பாஜக தொடர்ந்து ஒருவித பதற்றத்தில் இருப்பது கண்கூட தெரிகிறது. அதில் ஒன்றுதான் தேர்தல் ஆணையர் ராஜினாமா. ஏன் இந்த பதற்றம்?
பாஜகவிற்கு தேர்தல் பயம்
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணியில் பாஜகவை தவிர பெரிய கட்சிகள், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகள் எதுவும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வரவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் மார்கெட்டில் விலை போகாத கட்சிகள் மட்டுமே கூட்டணியில் சேர்ந்துள்ளது.
சில மாநிலங்களில் அமைந்துள்ள கூட்டணிக் கூட தலைவர்களோடு உட்கார்ந்து பேசி, தொகுதி பங்கீடு செய்து அமைக்கப்பட்ட கூட்டணி கிடையாது. கட்சிகளை உடைத்து, எம்எல்ஏ களை இழுத்து அமைக்கப்பட்ட கூட்டணி. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நம்பி வந்த கட்சிகளை மிரட்டி, உடைத்து, எம்எல்ஏகளை இழுத்து கூட்டணி தர்மத்தை மீறி கட்சிகளை அழிக்கும் துரோக வேலைகளைத்தான் பாஜக செய்து வருகிறது.
உதாரணத்திற்கு மகாராஷ்டிரம் மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் பாஜக நீண்ட ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது. ஒரு கட்டத்தில் அந்த கட்சியை உடைத்து ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைத்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தது. ஆனால் அந்த மாநிலத்தில் உண்மையான மக்கள் செல்வாக்கு உத்தவ் தாக்கரே தலைமையில் உள்ள கட்சிக்கு தான் இருக்கிறது. உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியினால் தற்போது மகாராஷ்ட்ராவில் பாஜக தோல்வி முகத்தில் இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் உள்ள சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்ததும் அந்த மாநிலத்தின் கள நிலவரம் மாறிப் போய் இருக்கிறது. அதே நிலைதான் பீகாரிலும், அதே கள நிலவரம் தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜகவுடன் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், பச்சமுத்து என்று லெட்டர் பேடு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வரவில்லை.
அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” நடத்திய யாத்திரை தமிழ்நாட்டில் பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர் மட்டுமே பெரிதாக பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எப்பொழுதும் போல் தற்பொழுதும் பிஜேபிக்கு எதிராகவே இருக்கிறது. திமுக பிரச்சாரத்திற்கு முன்பு பாஜகவின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை. அதுவும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்ல விரும்பாத பிரதமரை, நிதி ஒதுக்காத பிரதமரை மக்கள் வெறுக்கவே செய்கிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் நிலைமை படு மோசமாகவே இருக்கிறது. இதே நிலைதான் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. தோல்வி பயத்தில் பாஜக பதற்றம் அடைந்துள்ளது. அதனால் ஏற்பட்டது தான் தேர்தல் ஆணையர் அருண் கோயால் ராஜினாமாவும்.