Homeசெய்திகள்கட்டுரைபுத்தர் போட்ட முடிச்சு - என்.கே.மூர்த்தி

புத்தர் போட்ட முடிச்சு – என்.கே.மூர்த்தி

-

- Advertisement -

கடிதம் -4

அன்புள்ள மகளுக்கு உன் பாசத்திற்குரிய தந்தை எழுதும் கடிதம்…

பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் ” என்ற மூன்றாவது கடிதத்தில் விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்பது தெரிந்தது.

புத்தர் போட்ட முடிச்சு – என்.கே.மூர்த்தி

அன்பு மகளே,

உங்களுடைய குழந்தைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை விடவும் மிகவும் முக்கியமானது உங்களுக்குள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பது. ஆகையால் அதற்கான விழிப்புணர்வு அவசியப்படுகிறது.

நீங்கள் ஒரு மனிதராகவும், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவராகவும் உள்ள உங்களுக்குள் எப்பொழுது மாற்றத்தை கொண்டு வர முடிகிறதோ அப்பொழுது உங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் சமுதாயத்தில் மாற்றமும் தானாகவே நிகழும்.

வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது என்பது என்றால் என்ன? என்ற தேடல் உங்களுக்குள் எழ வேண்டும். வாழ்க்கை என்பது பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும்கொண்டது. அதற்கு தீவிரமான ஆர்வமும், வாழ்க்கை மீது பற்றுதலும் இருந்தால் மட்டுமே அதை கண்டுபிடிக்க முடியும்.

வாழ்க்கை என்றால் என்ன?

 

தற்போது நாம் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கை முழுவதும் பொறாமை, வன்முறை, குழப்பம் என்று ஏராளமான சிக்கல்களை கொண்டதாக உள்ளது. ஒரு நல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகள் இருக்கும்போது தவறாக கட்டமைக்கப்பட்ட வாழ்க்கையை ஏன் வாழவேண்டும்?

உலகம் முழுவதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. குழந்தைகளுக்கு நிலாவை காட்டி உணவு ஊட்டிய நாம்  தற்போது நிலாவிற்கே சென்று விட்டோம். அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இருந்த வன்முறை, பொறாமை, பேராசை போன்ற பேரழிவு தரக்கூடிய குணங்கள் மட்டும் நம்மிடம் மாறவே இல்லை.

ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து உயர்ந்துள்ளது

ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து உயர்ந்துள்ளது. மறுப்பக்கம் வன்முறை, துயரம் என்று மனிதர்களின் வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கிறது.இதற்கு என்ன காரணம்? எல்லாவற்றையும் கண்டுப்பிடித்த மனிதன், வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழ்வது  என்பதை கண்டுபிடிக்க தவறிவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே, முதலில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை கண்டுப்பிடித்தாக வேண்டும். அதற்கு தீவிர எண்ணத்துடன் வாழ்க்கையை ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

புத்தர் தன் சீடர்களிடம் வாழ்க்கையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது தன் கையிலிருந்த முகம் துடைக்கும் துணியை எடுத்து அதில் ஐந்தாறு முடிச்சுகளை போட்டார். அதன் பின்னர் தன் சீடர்களிடம் அந்த துணியை காட்டி தற்போது என் கையில் இருக்கும் இந்த துணிக்கும் இதற்கு முன்பு இருந்த துணிக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்று கேட்டார்.

புத்தர் தன் சீடர்களிடம் வாழ்க்கையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது

புத்தரின் சீடர்களில் ஒருவரான ஆனந்தர் என்பவர் எழுந்து “சுவாமி வித்தியாசம் இருக்கிறது” என்றார். என்ன வித்தியாசம்? என்று புத்தர் கேட்டார். முதலில் இருந்த துணி முடிச்சுகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக இருந்தது. இப்போது அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டு முடிச்சுகளோடு உள்ளது என்று ஆனந்தர் பதில் அளித்தார்.

புத்தர் அவரை பாராட்டி விட்டு “நமது வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.” நமக்கு விழிப்புணர்வு இல்லாமல் நாமாக போட்டுக் கொள்ளும் முடிச்சுகளால் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம் என்றார். சரி, இந்த முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பது? என்று தன் சீடர்களிடம் மேலும் கேட்டார்.

 

உடனே அவருடைய சீடர்களில் ஒருவர் எழுந்து, சுவாமி அதை கண்டறிய நான் உங்கள் அருகில் வந்து அந்த துணியில் உள்ள முடிச்சுகளை கூர்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் அந்த முடிச்சுகள் எப்படி போடப்பட்டது என்பதை கண்டறிந்து அவிழ்க்க முடியும்.

ஒரு வேளை அதன் அருகில் செல்லவில்லை என்றால் முடிச்சுகளின் தன்மை புரியாமல், அதை அவிழ்க்க முடியாமல் போகலாம் என்றார்.

"நமது வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது."

வாழ்க்கையின் ஒவ்வொரு சிக்கல்களையும், குழப்பங்களையும்  விழிப்புடன் அதன் அருகில் சென்று கவனித்தால் அந்த சிக்கலை தீர்க்க முடியும்.

அன்பு மகளே, உங்களை நீங்களே கூர்மையுடன் கவனித்து பாருங்கள். உங்கள் செயலை கவனியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் கவனியுங்கள். முதலில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை கண்டுப்பிடியுங்கள்.

கொள்கை வாதியாக இருக்கிறீர்களா? ஏதாவது கடவுள் பக்தராக இருக்கிறீர்களா? சாதி வாதியாக இருக்கிறீர்களா? மதவாதியாக இருக்கிறீர்களா? வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை கண்டுப்பிடியுங்கள்.

இப்படி ஏதோ ஒன்றாக இருக்கும் மனிதன் முழுமையான மனிதனாக இருக்க முடியாது. அவரால் ஒரு வட்டத்தை தாண்டி சுதந்திரமாக சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட மனிதனால் சமுதாயத்தில் பிரிவினையைத் தான் ஏற்படுத்த முடியும்.

தன்னுடைய மனதளவில் உடைந்து போய், குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் மனிதன், தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற எண்ணம் அவனுக்குள் ஆழமாக பதிந்துவிடுகிறது. உலகம் முழுவதும் நடந்து வருகின்ற போர்களுக்கும், சண்டைக்கும், குழப்பத்திற்கும் அடிப்படை காரணம் பிரிவினை எண்ணம் உள்ள மனிதர்கள் தான்.

உங்கள் வாழ்க்கை என்பது உங்களுடைய உறவுகளில் இருந்து தொடங்குகிறது

உங்கள் வாழ்க்கை என்பது உங்களுடைய உறவுகளில் இருந்து தொடங்குகிறது. அந்த உறவுகளிடம் நீங்கள் உரையாடும் போது உங்களை கூர்ந்து கவனித்து பாருங்கள். உங்களை மிகைப்படுத்தி, உயர்த்தி, அனைத்தும் அறிந்தவராக பேசுகிறீர்களா? அல்லது எந்தவிதமான பெருமையும் இல்லாமல் எளிமையாக பேசுகிறீர்களா? என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

உங்களுக்கு யார் மீதாவது பொறாமை வருகிறதா என்பதை கவனிக்கவும். உங்களுக்குள் கவனித்து பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் உங்களை சூழ்ந்து உள்ள உங்கள் குடும்பத்திலும் மாற்றம் தெரியும்.

கருத்துகளுடன் உறவு இருக்கிறது.

வாழ்க்கை என்பது உறவுகள் தான். அந்த உறவுகள் உங்களுக்கும் மற்ற  மனிதர்களுக்கு இடையில் இருக்கும் உறவு மட்டும் கிடையாது. மனிதர்களை தாண்டியும் உங்களுக்கு உங்கள் கொள்கையோடு உறவு இருக்கிறது. கருத்துகளுடன் உறவு இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள தங்கம், வைரம், கார் போன்ற விலையுயர்ந்த பொருட்களுடன் உறவு இருக்கிறது.

அதில் உங்களை விட உங்கள் கருத்து, கொள்கை உயர்ந்ததாக இருக்கிறதா? உங்களை விட உங்கள் வீட்டில் உள்ள தங்கம், வைரம், கார் உயர்ந்ததாக கருதுகிறீர்களா? அந்த பொருட்களுக்கும், கருத்துகளுக்கும் எப்படி முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறீர்களோ, அதற்கு என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள் என்பதை கூர்ந்து கவனித்து பாருங்கள்.  அதுதான் உங்கள் வாழ்க்கையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

சிலர் தன்னுடைய சாதிக்காகவும், மதத்திற்காகவும் உயிரையும் விடுவதற்கு தயாராக இருப்பதாக உணர்ச்சி வசப்பட்டு பேசுவார்கள். இன்னும் சிலர் கருத்து , கொள்கையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள். அது ஒருவித மனநோய் என்பதை  உங்களை நீங்களே கூர்ந்து கவனிப்பது மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தரக்கூடிய குணங்கள் மட்டும் நம்மிடம் மாறவே இல்லை

உலகில் தோன்றிய கருத்துக்கள், சித்தாந்தங்கள், கொள்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இருக்கிறது. அனைத்து கொள்கைகளும், கருத்துகளும் உயர்ந்தது தாழ்ந்தது என்று விவாதம் செய்து, அந்த வாதம் போராக மாறிவிட்டது.  அந்த போட்டியில், பொறாமையில், வன்முறையில் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

உலகில் உள்ள அனைத்து கருத்துகளும், தத்துவங்களும், மதங்களும் தோல்வி அடைந்து விட்டது. எனவே நீங்கள் அதுபோன்ற பயித்தியக்கார தத்துவங்களில் எதிலாவது சிக்கிக் கொண்டு இருக்கீரா? என்பதை உங்களையே நீங்கள் கவனித்து பார்க்கவும்.

வாழ்க்கை என்றால் என்ன?  வாழ்வது – அன்பு கொண்டவராக இருப்பது – இறப்பது. இந்த மூன்று கோட்பாடுகளை உள்ளடக்கியது தான் வாழ்க்கை. இது மூன்றும் ஒன்றோடு ஒன்று கலந்தது. ஒன்றை பிரித்து இன்னொன்றை மட்டும் வைத்துக் கொண்டு வாழமுடியாது. வாழ்வது- அன்புடன் இருப்பது – இறப்பது. இந்த கோட்பாட்டை முழுவதுமாக புரிந்து கொண்டோம் என்றால் நமது வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

நாம் நமது சவுகரியத்திற்கு ஏற்றது போல் வாழ்வதை மட்டும் எடுத்து கொண்டு, அன்பை ஒதுக்கி வைத்துவிட்டோம். அன்பு இல்லாத  இறப்பை கண்டு பயப்படக் கூடியவர்களாக இருக்கிறோம். வாழ்க்கையில் சிக்கல்களும், குழப்பங்களும் இங்கே தான் தொடங்குகிறது.

வாழ்வது மட்டுமே நோக்கமாக மாறிவிட்ட பின்னர், அதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற பாதையை மாற்றிக் கொண்டோம்.தான் வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கியதால் போட்டி,பொறாமை, வன்முறை கலந்த வாழ்க்கை முறை இயல்பானதாக மாறிப்போனது.

அன்பும், கருணையும் சூழ்ந்து உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அன்பு மகளே, இந்த கடிதத்தை கொஞ்சம் கவனமாக படிக்கவும். வாழ்க்கை என்பது அன்பை நிறந்தரமாக கொண்டது. அன்பு, கருணை இல்லாத வாழ்க்கை குறுகிய எண்ணத்தையும், குறுகிய சிந்தனையும் உருவாக்கும். அந்த சிந்தனை ஒரு கட்டத்தில் வன்முறைக்கு அழைத்து செல்லும். எனவே உங்களையே கூர்ந்து கவனித்து வந்தால் உங்களிடம் உள்ள பொறாமை, வன்முறை என்னென்ன வித்தைகளை செய்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். 

பொறாமை, வன்முறை இருக்கும் இடத்தில் அன்பு இருக்க முடியாது. உங்களை தொடர்ந்து கவனித்து வந்தால் வன்முறை, பொறாமை , கோபம் ஆகியவை முற்றிலும் காணாமல் போய்விடும். அன்பும், கருணையும் சூழ்ந்து உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே குழந்தைகளுக்கும் சிறந்த வழிகாட்டுதலாக அமையும்.

(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி…

MUST READ