இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று வந்துள்ளதாகவும், திராவிடக்கட்சிகளுக்கு வர வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே – சீ ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்திய மூட் ஆஃப் த நேஷன் கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தால் 39 தொகுதிகளையும் திமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 47 விழுக்காட்டில் இருந்து 52 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் 18 சதவீதத்தில் இருந்து 21 விழுக்காடு ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், அதிமுகவின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்தில் இருந்து 20 விழுக்காடு சரிந்துள்ளது.இந்த நிலையில், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகளில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால், திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று கணிப்புகள் வந்துள்ளது. ஒவ்வொரு 6 மாதம் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தியா டுடே மூடு ஆஃப் த நேஷன் என்று கருத்துக்கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 2026ஆம் ஆண்டில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையே எடுக்கலாம் என இந்த கருத்துக்கணிப்புகளை எடுத்திருக்கலாம். பாஜக கேரளா, தமிழ்நாடு தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பாஜக 2014ஆம் ஆண்டில் 32%, 2019ல் 38%, இப்போது எடுத்தால் 41% வாக்குகள் பெறலாம். உண்மையில் நிலைமை அப்படி உள்ளதா? அல்லது மோடி அசைக்க முடியாத தலைவர் என்று உறுதிபடுத்த விரும்புகிறார்களா? என்று பார்த்தாலும் அதன் பின்னர் நடைபெற்ற மாநில தேர்தல் முடிவுகள் அந்த திசையை நோக்கிதான் கையை காட்டுகின்றன.
அரியானாவில் பாஜக – காங்கிரஸ் இடையே மிகவும் நெருக்கமாக போட்டி இருந்தது. ஆனால் சிஸ்டம் காரணமாக பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் மகாராஷ்டிராவிலும் நல்ல லீட் கிடைத்து. டெல்லியிலும் நல்ல இப்போது லீட் கிடைக்கிறது. இவை எல்லாம் மக்கள் மனதில் சிந்தனையை விதைக்கிறது. இது பாஜகவுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அதனால் அவர்கள் இன்னும் தைரியமாக சில விஷயங்களை பேசுகிறார்கள். அதனால் அவர்களது வாக்கு வங்கி இன்னும் உறுதியாகிறது.
ஏற்கனவே இந்தியா கூட்டணியில் உள்ள பூசல்களை நாம் பார்க்கிறோம். ஒவ்வாரு கட்சியும் காங்கிரஸ் கட்சியோடு என்ன மாதிரியான உறவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கிறோம். சமாஜ்வாதிக்கு, திரிணாமுல் காங்கிரசுக்கோ, ஆம் ஆத்மிக்கோ, தேசிய மாநாட்டு கட்சிக்கோ காங்கிரசை பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் பாஜகவை எதிர்ப்பதற்கு தேசிய அளவில் உள்ள 2வது பெரிய கட்சியாக காங்கிரஸ்தான் உள்ளது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்காமல் அவர் அவர் மாநிலங்களில் தேர்தல் வரும்போது காங்கிரசோடு முரண்டு பிடிக்கிறார்கள். காங்கிரசின் பழைய கால வரலாறு காரணமாக காங்கிரஸ் உயிர் பெற்றால், அது தங்கள் இருப்புக்கு பிரச்சினை ஆகிவிடும் என்பதால் காங்கிரசை உயிர் பெறாமலும் வைத்திருக்க வேண்டும், அதே நேரத்தில் கூட்டணியும் வைத்திருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லாததால் மக்கள் அவர்களை நிராகரிக்கிறார்கள். உண்மையாக கூட்டணி இருக்கும் தமிழ்நாட்டில் காங்கிரசோடு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையே முரண்பாடு இருந்தாலும், அவை பொதுவெளியில் பெரிதாக விவாதிக்கப் படுவதில்லை. என்ன நோக்கத்திற்கு அணி சேர்ந்திருக்கிறோம் என்கிற தெளிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாக முடிவுகள் வருகிறது.
ஆனால் தேசிய அளவில் காங்கிரேசோடு அவர்களுக்கு உறவு இல்லாததால், விரும்பியும், விரும்பாமலும் கூட்டணியின் மையமாக காங்கிரஸ் இருக்கிறது. அதை மற்ற கட்சிகள் உரிய முறையில் அங்கீகரிக்காமல் இருப்பதால் வரக்கூடிய பூசல்கள், மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணிக்கு செல்வாக்கு சரிகிறது. எதார்த்தத்தில் நடப்பதைதான் இந்த மூடு ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. அது என்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் அது உண்மைதான் என்று நான் அன்றாடம் படிக்கும் செய்திகள் எனக்கு சொல்கின்றன.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் அதிமுக துணை இன்றி பாஜக ஒரு சீட்டுக்கூட வாங்க முடியாது என்று சொல்கிறார்கள். கருத்துக்கணிப்பில் அதிமுகவை விட பாஜக ஒரு சதவீதம் கூடுதலாக காட்டுகிறது. அப்படி ஒரு தோற்றம் வர வேண்டும் பாஜக விரும்புகிறது. அவர்களது எண்ணத்தை உள்வாங்கிக்கொண்டு இந்தியா டுடே ஆங்கர் பேசினர். 2 ஆங்கர்களில் ஒருவர் முழுக்க முழுக்க பாஜக சிந்தனையாளர். மற்றொருவர் ராஜ்தீப் சர்தேசாய் பக்கச் சார்பு இல்லாமல் பேசினார். அவர்களது விருப்பம் அதிமுக – பாஜக ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்களோடு ஒன்று சேர்ந்தால் அதிமுக ஜெயிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி போன்றோர் நினைக்கின்றனர்.
வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர் பாஜக செல்வாக்கு பெற்ற பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு பாஜக கூட்டணியோடு நின்றால் வெற்றிபெற எளிதாக இருக்கும். மாறாக மற்ற பகுதிகளில் உள்ள அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள், பாஜகவோடு கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு விழாது என நினைக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அந்த கூட்டணி வேண்டாம் என்கின்றனர். அதிமுகவில் மேற்கு மண்டலத்தில் உள்ளவர்களின் பார்வை ஒன்றாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்களின் பார்வை மற்றொரு விதமாகவும் உள்ளது. பாஜகவை நோக்கி இழுத்துச்செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் செல்வாக்கு, செல்வம் நிறைந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்களது குரல் ஊடங்களில் ஓங்கி ஒலிக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பில் பாஜகவின் வாக்கு சதவீதம் 21 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாமகவின் வாக்குகள் குறைந்தபட்சம் 4 சதவீதம், பாஜக கூட்டணியிடம் உள்ளது. 2014 தேர்தலிலே இந்தளவு வாக்கு அவர்களுக்கு கிடைத்தது. ஒரு தொகுதியில் செல்வாக்கு உள்ள தனி மனிதர்கள் 5 பேர் வரை கூட்டணியில் வைத்திருந்தார்கள். அதுதவிர ஓபிஎஸ், டிடிவி ஆகியோரும் கூட்டணியில் இருந்தனர். இவ்வளவு பேரையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது பாஜகவுக்கு 10 முதல் 12 சதவிகிதம் தான் வாக்குகள் இருக்கும். இந்தியா டுடேவின் கேள்விகள் எப்படி இருந்தது என்றால் நாம் தமிழர், விஜய் போன்றோர் கட்சிகளின் ஆப்ஷன் இல்லாவிட்டால் பாஜகவுக்குதான் போய் சேரும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோக்கம் உள்ளவர்கள், அதிமுகவுக்கு போடா விட்டாலும் பாஜகவுக்கு போட்டு விடுவார்கள் என்பது போன்று இருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சரியாக செயல்படவில்லை. அதனால் அவர்களுக்கு 3 சதவீத வாக்குகள் இழப்பு உள்ளது என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. இந்த கருத்துக்கணிப்பை எதிர்க்க முடியாததற்கு காரணம் என்ன என்றால் 51 + 21 -72 சதவீதம் திராவிட கட்சிகளின் வாக்குகளாக உள்ளது. ஒவ்வொரு முறையும் 70 முதல் 80 சதவீதம் அளவிலான வாக்குகள் தான் இந்த கட்சிகளுக்கு கிடைக்கும். அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதனால் இந்த கருத்துக்கணிப்பு சரியாகவே உள்ளதாக தோன்றுகிறது.
இந்தியா டுடே கேள்வித்தாளில் விஜய், சீமான் கட்சிகள் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர்களது வாக்குகளும் சேர்த்து பாஜகவுக்கு செல்கிறது. எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை முடக்கக்கூடிய மத்திய அரசுக்கு எதிராக ஒரு துரும்பை கூட எடுத்துப்போட மாட்டேன், ஆனால் மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் தமிழ்நாட்டில் வாக்களிக்க மாட்டார்கள். அதிமுகவில் மத்திய அரசின் அதிகார குவியலை எதிர்ப்பவர்களும் உள்ளனர். மாறாக அவர்களுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு தேவையானவற்றை பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இதை பேலன்ஸ் செய்துதான் ஆட்சியை நடத்தினார்கள். இதில் மோதல் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவார்கள்.
.