அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிருந்த நிலையில், அதிமுக பாஜக அணிக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி அவர் திமுகவை தனியாக எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்குழு கூட்டம் மற்றும் சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த மறுநாளில் சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் முதலமைச்சருக்கான பந்தயத்தில் விஜய் 18 சதவீதம் வாக்குகளுடன் 2வது இடத்தை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று அண்ணாமலை தலைமையில் பாஜக 18 சதவீதம் பெறும் என்றும் சொன்னார்கள். அது குறித்து பேச தைரியாமாக எங்களையும் அழைத்திருந்தார்கள். விவாதத்தின் நான் 18% ஆ, அல்லது 1.8% ஆ என்று கேட்டேன். கடைசியில் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த பாஜக கூட்டணியுமே 18 சதவீத வாக்குகளை தான் பெற்றார்கள். அது 2014ஆம் ஆண்டில் வாங்கியதை விட குறைவானதாகும். தற்போது விஜய்க்கு 18 % ஆதரவு என்று சிஓட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது. அப்படி என்றால் இதனை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தில் 18 இடங்களை தவெகவுக்கு போட்டு விடலாமா? இப்படி வாக்கு சதவீதம் உள்ளது விஜய்க்கு தெரியும் எனில் அவர் விக்ரவாண்டி, ஈரோடு இடைத்தேர்தல்களில் திமுகவோடு நேருக்கு நேர் மோதி இருக்கலாமே. நீங்கள் தான் திமுகவுக்கு போட்டி என்கிறீர்கள். அதை சி ஓட்டர் சொல்வதை எப்படி நம்ப முடியும். நீங்கள் களத்தில் வாக்குகளை பெறுங்கள் நம்புகிறோம். விஜய், 2026 தேர்தலில் போட்டியிட்டுதான் ஆக வேண்டும். இடைத் தேர்தல்கள், மக்களவை தேர்தலில் தப்பியோடியதை போன்று அதில் செய்ய முடியாது. அப்படி அவர் செய்தால் ரஜினிகாந்தை போன்று கதை ஆகிவிடும்.
மன்னராட்சிக்கு ஏற்கனவே முடிவு கட்டியாகிவிட்டது. தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்கள் ஆட்சி. மக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் தான் மக்கள் மன்றத்தில் உள்ளனர். போராட்டங்கள் நடைபெறுவதால் தான் தமிழ்நாடு மக்களாட்சி. மன்னராட்சியில் போராட்டங்கள் நடைபெறாது. போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்கிறார். ஆனால் திருவான்மியூரில்தான் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். 18 சதவீத வாக்குகள் என்பதை மதிக்கிறோம். விஜய் மக்கள் செல்வாக்கு மிக்க, ரசிகர்கள் செல்வாக்கு மிக்க ஒரு திரைக்கலைஞர் ஆவார். அவரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் வாக்குகள் இத்தனை சதவீதம் வாக்குகள் பெறுவார் என்பதை ஏற்க முடியாது. அதற்கு விஜய் தன்னை நிரூபித்திருக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி தொடங்கிய உடன் வந்த தேர்தலை சந்தித்து உள்ளனர். யாருமே தேர்தலை புறக்கணிக்கவில்லை. எம்ஜிஆர் தேர்தலை புறக்கணித்தாரா? விஜயகாந்த், கமல்ஹாசன் புறக்கணித்தனரா? விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை களத்திற்கே செல்லவில்லை. தேர்தலையே சந்திக்கவில்லை. ஆனால் சி ஓட்டர் சொல்லிட்டாங்க நம்புங்கள் என்கிறீர்கள். அப்போது ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி சொன்னது அதை நான் நம்பலாமா? தற்போது சிஓட்டர் சொன்னதை அதே ஊடகங்கள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். எல்லோருக்கும் சில அஜெண்டாக்கள் இருக்கின்றன.
விஜயின் அரசியல் வருகை கடந்த ஓராண்டில் எவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அவர் கட்சியின் முதல் மேடையில் ஆட்சியில் பங்கு என்று சொன்னார்கள். யாராவது சென்றார்களா? புதிதாக வரும் கட்சிகள் திமுக, அதிமுகவை டார்கெட் செய்து அடிப்பார்கள். ஆனால் விஜய், அதிமுக உடன் கூட்டணி போடலாம் என்கிற எண்ணத்துடன், அதிமுகவை விமர்சிக்காமல் இருந்து வந்தார். தற்போது அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்வதால், வேறு வழியின்றி திரும்ப தொடங்கிய இடத்திற்கே விஜய் வந்துள்ளார். இது அடுத்த பின்னடைவாகும். அவரால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியவில்லை. களத்தில் சந்தித்து இந்த வாக்கு சதவீதத்தை காட்டி இருக்க முடியும். ஆனால் அவர் களத்தை சந்திக்க வில்லை. ஈரோட்டில் அதிமுக களத்தில் இல்லை. இன்றைக்கு வாயால் சொல்வதை, அன்றைக்கு களத்திலேயே திமுக Vs தவெக என காட்டி இருக்க முடியும்.
ஒரு அரசியல் கட்சி என்பது வெறும் தேர்தலுக்கான கட்சி கிடையாது. அது ஒரு வெகுமக்கள் இயக்கமாகும். மக்கள் சந்திக்கிற பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, மக்களோடு நின்று, அவர்களது நம்பிக்கையை பெற்று தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும். இதுதான் ஒரு அரசியல் கட்சிக்கான பார்முலா ஆகும். இவர்கள் பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், வேங்கை வயல், விவசாயிகள்ள போராட்டம் என அனைத்தையும் 2026 தேர்தலுக்காக தள்ளி வைத்துள்ளேன். 2025 ஜுனுக்கு பிறகுதான் என்கிறார். அப்போது 3 வருடமாக அந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அந்த மக்கள் பிரச்சினையை அரசு கண்டுகொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எல்லாவற்றையும் நான் தேர்தலுக்கு சேர்த்து வைத்து தேர்தலுக்குதான் பேசுவேன் என்கிறார். அப்படி என்றால் இது தவெக நலனா? வேங்கைவயல் மக்களின் நலனா? வேங்கை வயலுக்கு திருமாவளவன் சென்றாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அங்கு முதன்முதலில் சென்றவர் திருமாவளவன்தான். தலித்துக்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக இப்படி உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்கள்.