சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்து மாபெரும் வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகியது.
வைக்கம் என்ற பெயரை உச்சரிக்கும் போதே உடனடியாக நம் கண் முன் தோன்று உருவம் தந்தை பெரியார் தான்.
கேரளாவில் உள்ள அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்டிருந்த வைக்கத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று மக்களை திரட்டி உறுதியான போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றார் பெரியார். வைக்கம் போராட்டம் நிகழ்ந்த காலத்தில் பெரியாரை வைக்கம் வீரர் எனக் குறிப்பிட்டார் திரு. வி. கல்யாணசுந்தரம்.
அந்தப் பட்டம் வரலாற்றில் என்றென்றுமாய் நிலைத்து விட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைக்கம் போராட்டம் நிகழ்ந்த இடம் கேரளாவில் இருந்தாலும் அது தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவை தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட மக்களுக்காக நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்வு என வைக்கம் போராட்டத்தை குறிப்பிடும் அண்ணல் அம்பேத்கர், குளத்தில் குடிநீர் எடுக்க உரிமை கோரிய போராட்டத்திற்கும் உத்வேகம் அளித்ததாகவும் கூறுகிறார்.
இன்றைக்கும் சமூகநீதி போராட்டத்தின் மகத்தான அடையாளமாக திகழ்கிறது வைக்கம் போராட்ட வரலாறு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொத்த இந்தியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு இந்து சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெற்றது.
சனாதனத்தின் அடிப்படையில் மக்கள் சவர்ணர் என்றும் அவர்நர் என்றும் பிரிக்கப்பட்டனர். நம்பூதிரிகள் மற்றும் சப் சூத்திர பிரிவினர் சவர்ணர்கள் என்றும் ஈழவர், புலையர் உள்ளிட்ட ஏனைய சமூகத்தினர் வர்ண முறைக்கு அப்பாற்பட்டவர்களாக கருதப்பட்டு அவர்நர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். அவர்நர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஏராளமாக நடைபெற்றன.
ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டன. சாதி கொடுமையால் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக திருவிதாங்கூர் சமஸ்தானம் இருந்தது. இன்றைய கேரளத்தின் பெரும்பகுதியையும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னர்களும் நம்பூதிரிகளும் நாயன்மார்களும் சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை விலங்குகளை விட இழிவாக நடத்தினர்.
இருப்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெடித்தது வைக்கம் போராட்டம். மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலை போராட்டம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வந்த காலம் அது. அரசியல் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம், மகாத்மா காந்தியின் வருகைக்கு பிறகு சமூகப் பிரச்சனைகளிலும் குறிப்பாக தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் தலையிட்டது.
அதன் விளைவாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த வைக்கம் கொடுமையும் வெளிச்சத்திற்கு வந்தது. காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த காந்தியின் அனுமதியை பெற்று தொடங்கப்பட்டது வைக்கம் போராட்டம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வைக்கத்தில் சிவன் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர், புலையர், தீயர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர் நடக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையை நீக்க தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் தெருக்களை பயன்படுத்துவதற்கான உரிமை கோரி வெடித்தது தான் வைக்கம் போராட்டம்.
காங்கிரஸ் முன்னணி தலைவராக இருந்த டி. கே. மாதவனின் முன் முயற்சியால் கிளர்ந்த வைக்கம் போராட்டம் கேரள காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கே. பி. கேசவ மேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து டி.கே மாதவன் தொடக்கத்திலேயே அதாவது 1921 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு வந்த மகாத்மா காந்தி இடம் விவாதித்தார்.
இந்துக்கள் நடமாடக்கூடிய பகுதி என சொல்லப்படும் பகுதியில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட நடமாட முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டும் நடமாட முடியாதது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார் டி.கே மாதவன்.
கோயிலை சுற்றி தடை செய்யப்பட்டுள்ள தெருகளை தான் நீதிமன்றம், பதிவுத்துறை அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் இருப்பதால் தீண்டப்படாத மக்கள் அரசு அலுவலகங்களை அணுக முடியாத நிலை இருப்பதையும் விவரித்து, இதற்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என காந்தியிடம் வலியுறுத்தினார் டி கே மாதவன்.
தீண்டாமை கொடுமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட காந்தி போராட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தார். அதே நேரத்தில் வைக்கம் போராட்டத்தில் வேற்று மதத்தினர் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறித்தினர்.
1924 ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் அன்று வைக்கம் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் உள்ளூர் சூழல் காரணமாக அது ஓத்தி வைக்கப்பட்டு 1924 ஆம் ஆண்டு மார்ச் 30ம் தேதி கேரளா காங்கிரஸ் போராட்டத்தை தொடங்கியது.
போராட்டம் தொடங்குவதற்கு முன்பே வைக்கம் கோயிலை சுற்றி உள்ள தெருகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. மீர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.
தடையை மீறி திட்டமிட்டபடி தொடங்கியது போராட்டம். கேரளா காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய போராளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டதால், தலைவர்கள் இல்லாததால் தடுமாறியது போராட்டம்.
போராட்டத்தை வழிநடத்த தலைவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று காந்தி மற்றும் ராஜாஜிக்கு கேரளா காங்கிரஸ் மூத்த தலைவர் ஜார்ஜ் ஜோசப் கடிதம் எழுதினார். அதேபோன்று வைக்கம் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கேட்டு தந்தை பெரியாருக்கும் கடிதம் எழுதினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து போராடுவதால், எந்த பலனும் ஏற்படப்போவதில்லை, பெரியார் போன்றவர்கள் ஒரு வருடம் சிறையில் அடைபடுவதால் என்ன பிரயோஜனம், முக்கியஸ்தர்களை அங்கு அனுப்பி விட்டால் இங்கு கதர் பிரச்சார வேலையை நிறுத்த வேண்டி வரும், அதனால் உங்கள் யோசனை புத்திசாலித்தனமாக இல்லை எனக் கூறி அவர்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார் காந்தி.
அதே நேரத்தில் தொடர் பணிகளுக்கு இடையேயும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைக்கம் நோக்கி புறப்பட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார்.
1924 ஏப்ரல் 13-ஆம் தேதி வைக்கம் சென்றார் பெரியார். வைக்கத்துக்கு பெரியார் சென்றவுடன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சமஸ்தானத்தின் மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)