தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை எல்லோருக்கும் எல்லாம் என்ற விதத்தில்தான் அமைந்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிர்ழநாடு அரசின் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சாதக பாதகங்களை விளக்கி பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- 2025-2026ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எல்லோருக்கும் எல்லாம் என்ற விதத்தில்தான் அமைந்திருக்கிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறார். வெகு நாட்களுக்கு பின்னர் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முழுமையாக கேட்டேன். இந்த நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு செக்டாரையும், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பருந்து போன்ற வேட்டை பறவைகளுக்கும் சரணாலயம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தண்ணீர் பிரச்சினை வாய்ப்பு உள்ளது. அதனால் புதிய நீர்த்தேக்கத்தை ஏற்படுத்த நிதிநிலை அறிக்கையில் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. சென்னையில் போக்குவரத்து வசதிக்காக 6 திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர் என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் அறிவு தொழிற்வழித்தடம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பெங்கங்ளுருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், அருகில் உள்ள ஓசூரை பயன்படுத்தலாம் என்பதுதான்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நான் பார்க்கும் வித்தியாசம் என்ன என்றால்? கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக பெரியளவில் ஒன்றும் வெற்றிபெற வில்லை. ஆனால் மோடி தங்களை யார் எல்லாம் ஆதரிக்கவில்லையோ? அவர்களை எல்லாம் கண்டுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு உள்ளிட்ட அவர்களுக்கு வாக்களிக்காத மாநிலங்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் பேசவில்லை. ஆனால் திமுக அதையும் பேசியுள்ளனர். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பேசியுள்ளனர். அந்த பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்கள். தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று வேறுபாடு பார்க்காமல் திட்டங்களை அறிவித்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் எந்தெந்த திட்டங்கள், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என விரிவாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியுள்ளார். இதே மத்திய நிதிநிலை அறிக்கையை பார்த்தோம் என்றால், எந்த விவகாரம் குறித்து விளக்கமாக பேசவில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறை என்ற வார்த்தையே இல்லை. எல்லாம் விரிவாக 2 நாட்கள் கழித்து படித்துக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழக நிதிநிலை அறிக்கையில் அனைத்து விவகாரங்களும் விரிவாக பேசப்பட்டுள்ளன.
தமிழக பொருளாதாரம் என்பது ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். தமிழக தலைமை பொருளாதார ஆலோசகர் நேற்று அளித்த பொருளாதார ஆய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் அனைவரும் சேவைத் துறைக்கு சென்றுவிட்டதால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ,9 புதிய கலை கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி குழந்தை வரை படிக்க வேண்டும் என்பதற்காக காலை உணவுத்திட்டத்தை அனைத்து இடங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தாயுமானவர் திட்டம் வாயிலாக பெற்றோரில் ஒருவரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்களும் மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். இந்தியாவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்த நிலையில் சுகாதாரத்துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள். புற்றுநோய் சிகிச்சைக்கு என்று தனியாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்து விட்டதாக பெருமிதம் தெரிவித்துக்கொண்டனர். ஆனால் தமிழக அரசின் செலவில் புற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்து, நிதி ஒதுக்கியுள்ளனர்.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவரையும் சென்றடையும் திட்டங்கள் என்றால் 20 லட்சம் மாணவர்களுக்கு டேப்லாய்டு அல்லது லேப்டாப் என விரும்பியதை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய நன்மை ஆகும். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறச் சாலைகள், நகர்ப்புரச் சாலைகளுக்கு என்று தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னையில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனை சமாளிக்க புதிய நீர்த்தேகம் அமைக்க திட்டமிட்டு, அதற்காக ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
தமிழ்நாடு அரசின் வரி வருவாய் 2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.2 சதவீதத்தில் இருந்து 1.17 சதவீதமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் வருவாய் பற்றாக்குறை இன்னும் குறைந்திருக்கும். 3 சதவீதத்தில் இருந்தது தற்போது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. இதை ரூபாய் மதிப்பில் பார்த்தோம் என்றால் 45 ஆயிரம் கோடி கூடுதலாக வந்திருக்க வேண்டும். முன்பிருந்த ஃபார்முலா படியே கொடுத்திருந்தாலும், தமிகத்திற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். நமக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியின் அளவும் குறைந்துள்ளது. அதே அளவில் நிதியை கொடுத்திருந்தால் நாம் கடன் வாங்க வேண்டிய அளவு குறைந்திருக்கும். மத்திய அரசு 100 சதவீதம் கடன் வாங்கிவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டிற்கு 28 சதவீதம் கடன் வாங்கலாம் என்று உள்ள நிலையில், தற்போது 26 சதவீதம் தான் உள்ளது. முக்கியமான விஷயம் என்ன என்றால் கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையை கவனக்குறைவாக 3 சதவீதம் வரை கொண்டு சென்றுவிட்டது. தற்போதைய நிதி அமைச்சரும், முன்னாள் நிதி அமைச்சரும் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதில் கவனமுடன் செயல்பட்டனர். அதன் பயனாக தற்போது 1.17 சதவீதமாக குறைந்திருக்கிறது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இது ஒரு சதவீதமாக குறையும் என்றிருக்கிறார் நிதியமைச்சர்.
உண்மையில் வருவாய் பற்றாக்குறை என்பதே இருக்கக்கூடாது. அது பூஜியமானால் திட்டங்களுக்கு ஒதுக்க அதிக நிதி கிடைக்கும். நாடு முழுவதும் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறையும் நிலையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குறையவில்லை. அதிக வருவாய் இருந்தால்தான் ஜிஎஸ்டி வரி வசூலாகும். நமது ஜிஎஸ்டி பங்கு நமக்கு வரும். நாட்டின் பிற பகுதிகளில் ஜிடிபி குறைந்துள்ளபோதும், தமிழ்நாட்டின் ஜிடிபி உயர்ந்துள்ளது என்பது நமது வரி வருவாய் மூலம் தெரியவந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.