Homeசெய்திகள்கட்டுரைமாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

மாற்றம் முன்னேற்றம் – என். கே. மூர்த்தி

-

அறிமுகவுரை

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி 
உன் செயல்கள் இருக்கும்.
உன் செயல்களுக்கு ஏற்றபடி 
உன் வாழ்க்கை இருக்கும்.
                                                       – சாக்ரடீஸ் 

மாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

வாழ்க்கை என்பது என்ன? என்று ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் வாழ்க்கை என்பது அதைப்பிடிக்க வேண்டும், இதைப்பிடிக்க வேண்டும் என்று அலைந்து கடைசியில் எதையோ பிடித்தும் பிடிக்க முடியாமலும் வாழ்ந்து மறைவது தான் என்றார்.

இன்னொருவர், தாயின் கருவறையில் இருந்து இறங்கி நடந்தோ, ஓட்டமாவோ சுடுகாடு வரை சென்று அடைவது தான் வாழ்க்கை என்றார்.

வாழ்க்கையில் அந்த அளவிற்கு அதிருப்தி அடைந்து இருக்கிறோம். நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை வெறுமை, சலிப்புத்தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது. நாள் கணக்கில், மாதக்கணக்கில், வருடக் கணக்கில் செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறோம். ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை தேடுகிறோம்.

மாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

நாம் குழப்பத்தோடு வாழ்வதால் நமக்கு ஒரு நோக்கம் தேவைப்படுகிறது. நம்மிடம் இல்லாத ஒன்றை தேடுவதற்கும், அதை அடைவதற்கும் இலக்கை நிர்ணயம் செய்கிறோம். அந்த முயற்சியில் இறங்குகிறோம், செயல்படுகிறோம், வெற்றி என்று கொண்டாடுகிறோம்.

ஒரு கட்டத்தில் அந்த கொண்டாட்டமும் நிரந்தரமாக இருப்பதில்லை. அந்த வெற்றியும் திருப்திகரமானதாக இல்லை. மீண்டும் வெறுமை சூழ்கிறது. மீண்டும் சலிப்படைகிறோம். மீண்டும் ஏதோ ஒன்றை தேடுகிறோம்.

இதற்கு காரணம் என்ன? ஏன் மீண்டும் மீண்டும் வெறுமையை உணர்கிறோம். ஏன் மீண்டும் மீண்டும் சலிப்படைகிறோம், நாம் ஒரு நாளும் நமக்குள் நாம் யார் என்று பார்த்து புரிந்து கொள்ளவில்லை. அதற்கான முயற்சியில் கூட இறங்கியதில்லை.

நம்மிடம் இருந்தே நாம் தப்பித்து ஓட விரும்புகிறோம். எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்ற காரணத்தை கண்டு பிடித்துக்கொண்டு கோயிலுக்கு போகிறோம். செல்போனில் எதையோ தேடுகிறோம். இவை அனைத்தும் நம்மிடம் இருந்து நாம் தப்பித்து ஓடுவதற்கு நாம் கண்டுபிடித்துக் கொள்கிற காரணங்கள்.

மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1

அதனால் தான் எது வெற்றி என்று அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றோம்.

இப்படி குழப்பமான மனநிலையில் உள்ள மனிதர்கள் புதியதாக எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குழப்ப நிலையில் இருக்கும் மனம், விரக்தியில் இருக்கும் மனம், புதிய சிந்தனையை வரவேற்காது.

அது பழைய மனம். பழைய கருத்துகளையும், உளுத்துப்போன கொள்கைகளையும் ஆரத்தழுவி வரவேற்கும்.

நண்பர் ஒருவர் புதியதாக வாங்கிய காரை துடைத்துக் கொண்டிருந்தார். காரின் மறுமுனையில் அவருடைய நான்கு வயது மகன் ஒரு சிறிய கல்லை வைத்து காரை தேய்த்துக் கொண்டிருந்தான்.

மாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

காரை துடைத்துக் கொண்டே வந்த தந்தை மகனின் செயலை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அவன் கையில் வைத்திருந்த கல்லை பிடுங்கி அவன் கை மீது ஆத்திரம் தீரும் வரை அடித்தார். மகன் வலியால் துடித்தான். கோபம் குறைந்தது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். கை எலும்பு முறிந்து விட்டதாக டாக்டர் சொன்னார்.

கட்டுப்போட்ட கையோடு மகன் கேட்கிறான். அப்பா என் கை எப்போது குணமாகும்?

குழந்தையை கட்டி அனைத்து ஓ… என்று அழுகிறார். அவர் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பை விட அவருடைய விலை உயர்ந்த கார் மீது அதிகமான பற்று வைத்திருக்கிறார். பொருள் உயர்ந்ததா? மனிதன் உயர்ந்தவனா? என்றால் அவரை பொருத்தவரை பொருள்தான் உயர்ந்தது. அவர் மகன் முக்கியமில்லை.

இன்னும் பலருக்கு அவர்களின் கருத்து தான் உயர்ந்தது, அவர்களின் கருத்தை, கொள்கையை காப்பாற்ற மனிதனை கொலை செய்கின்ற போக்கு அதிகரித்து வருகிறது. அந்த கொலையை நியாயப்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

அந்த கருத்திற்காக, வழிபாட்டிற்காக, கொள்கைக்காக கொலை செய்வது ஒரு உன்னதமானது என்று போற்றப்படுகிறது. அந்த கொலைக்கார கும்பல் மதத்தை காப்பதாகவும், நாட்டை காப்பதாகவும் கூறி நியாயப்படுத்துகிறது. எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை பலியிடுகிறது.

வெறுப்பும், குழப்பமும் நிறைந்திருக்கும் மனம், எது சரியானது? எது தவறானது என்று ஆய்வு செய்யவே முன் வராது. அதுபோன்ற குழப்பமான இளைஞர்களிடம் தவறான சிந்தனை விதைக்கப்படுகிறது. இதற்கு முன் எப்போதும் இதுபோன்ற ஆபத்தான நெருக்கடி இருந்ததில்லை. இது மிகவும் கொடுமையானது. அபாயகரமானது. இதுதான் இன்று நாடு முழுவதும் பரவிவருகிறது.

மதம், சாதி, வழிபாட்டு முறை இதுதான் முக்கியமானதாக போற்றப்படுகிறது. மனிதனுக்கு இனிமேல் எவ்வித முக்கியமும் கிடையாது. ஒரு கருத்தை காப்பாற்ற, கொள்கையை காப்பாற்ற எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்கிற ஆபத்தான மனநிலை அதிகரித்து வருகிறது. நாம் நம்மை அறியாமல் பொருட்களின் மதிப்பிலும் கருத்தின் செயல்பாட்டிலும் சிக்கிக்கொண்டோம்.

என்னை விட நான் வைத்திருக்கும் கார் உயர்ந்தது என்ற மனநிலையில் மாட்டிக் கொண்டோம். என்னை விட என் கருத்து உயர்ந்தது, என்னைவிட என் கொள்கை உயர்ந்தது, என்னைவிட என் கடவுள் உயர்ந்தது. அதற்காக உயிரையும் கொடுப்பேன், எவர் உயிரையும் எடுப்பேன் என்கிற ஆபத்தான சிந்தனை நம்மிடம் வளர்ந்து வருகிறது.

மனித இனத்திற்கு ஆபத்தான இந்த மனநிலையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். கடவுள், மதம், கொள்கை, கருத்து அனைத்தும் மனிதர்களின் தேவைகளுக்காக மனிதன் உருவாக்கியது என்கிற புரிதல் வேண்டும்.

மாற்றம் முன்னேற்றம் - என். கே. மூர்த்தி

வாழ்க்கை என்பது உறவுகளை அடிப்படையாக கொண்டது. உறவு என்பது அப்பா, அம்மா, மாமன், மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்தி, மைத்துனன் என்று வெறும் ரத்த உறவு மட்டுமே இல்லை. நாம் தினமும் பயன்படுத்தும் கார், வாகனம், நாற்காளி, படுக்கை, பேனா, புத்தகம், வீட்டு வாசலில் இருக்கும் செடி, என்னை சுமந்து கொண்டே இருக்கும் செருப்பு என்று இவை அனைத்தும் உறவுதான். அதேபோல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அலுவலகம், அங்குள்ள நண்பர்கள், சந்தித்து பழகிய சிநேகிதர்கள் என்று இவர்கள் அனைவரும் நம் உறவுகள் தான். அந்த உறவுகளுக்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஒரு குணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. கொள்கை இருக்கிறது. அதை எப்படி கவனிக்கின்றோம், எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது.

மனைவி மீது கோபம் வந்தால் நாற்காளியை ஏன் தண்டிக்க வேண்டும்? கணவன் மீது கோபம் வந்தால் கரண்டிக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்?

உறவுகளை புரிந்து கொள்வது, உறவுகள் மீது அன்பு செலுத்துவதில் அடங்கியிருக்கிறது வாழ்க்கை. அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு, குழப்பம், வெறுப்பு, வன்மம் எதுவும் இருக்காது.

நமது மனம் அன்பால் மலர வேண்டும். இதற்கு காலகெடு எதுவும் இல்லாமல் இப்பொழுதே நமது மனம் புதிய எழுச்சி பெற வேண்டும். நான் நாளைக்கு என்னை மாற்றிக்கொள்கிறேன் என்று நினைத்தால் அந்த நினைப்பு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும். வெறுப்பை உருவாக்கும். இப்பொழுதே அன்பை விதைக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரின் மனதிலும் மாற்றத்திற்கான சிந்தனையை விதைக்க வேண்டும்.

மாற்றம் என்பது மற்றவரால் வருவதில்லை. நம்மிடம் இருந்து தொடங்குவது.

மாறுவோம்! வெற்றி பெறுவோம்!!

                                                                                                                        -என்.கே.மூர்த்தி

MUST READ