Homeசெய்திகள்கட்டுரைஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

ஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

-

- Advertisement -

சட்டவிரோதமாக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பது ஜனநாயகத்தை, மாநில அரசை இழிவுபடுத்தும் செயலாகும் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ஊட்டியில் எப்படியாவது துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவேன் என்று ஆளுநர் ரவி தொடர்ந்து அறிக்கை வெளியிடுகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிற உரிமை ஆளுநருக்கு உள்ளது என்று வேண்டும் என்றே ஜனநாயகத்தை சீண்டக்கூடிய வேலையை செய்கிறார். தார்மீக அடிப்படையில் நாம் அவர்களிடம் பேசி பார்த்துவிட்டோம். சட்ட அடிப்படையில் போராடி ஜெயித்தும் பார்த்து விட்டோம். ஆனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நான் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவது ஜனநாயகத்திற்கு அழகா? இந்நிலையில் நாங்கள் ஏப்ரல் 25, 26ல் ஊட்டியில் மாநாடு நடத்தப் போகிறோம். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதிப் தன்கர் கூப்பிடுகிறோம் என்கிறார்கள். ஜெகதீப் தன்கர் பேசுவதெல்லாம் உச்ச நீதிமன்றத்தை மிரட்டும் விதமாக உள்ளது. இந்த உச்சநீதிமன்றம் தானே ஆளுநரை கொட்டியது. ஆளுநர் 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றா விட்டால் நாங்களே நிறைவேற்றுவோம் என்று 142 சட்டப்பிரிவை பயன்படுத்தியது. தற்போது உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும், அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து இட வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தை பார்க்கும்போது அணு ஏவுகணையாக உள்ளது. பாபர் மசூதி வழக்கு வருகிறபோது எல்லாம், 142 பிரிவு அணு ஏவுகணையாக இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்திற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு சார்பாக ஒரு தீர்ப்பை வழங்கிய உடன் அவர்கள் அந்த சட்டப்பிரிவே அணு ஏவுகணை போன்று உள்ளதாக சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் தன்கர் வம்பு இழுக்கிறார்.  இங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்து பாரு என்கிறார். நான் ஊட்டியில் துணைவேந்தர் மாநாடு நடத்துவேன் என்கிறார். ஆனால் அதில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால் இன்றைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆளுநருக்கு செல்வாக்கு என்பது கிடையாது. முதலில் ஆளுநருக்கும், மக்களுக்கும் தொடர்பு என்பதே கிடையாது. உச்சநீதிமன்றமே இனி ஆளுநர் வேந்தர் கிடையாது. முதலமைச்சர்தான் வேந்தர் என்று சொல்லிவிட்ட பிறகு நான் வேந்தர் என்று ஆளுநர் நடத்தும் கூட்டத்தில் துணை வேந்தர்கள் பங்கேற்பார்களா? என்பது சந்தேகம்தான். முதலமைச்சரும் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

"பிரதமரின் வருகையால் தமிழ்நாட்டுக்கு பயன் உண்டா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

எனக்கு தெரிந்தவரை ஆளுநர் ஊட்டியில் மாநாடு நடத்தினால் பெரியாரிய இயக்கங்கள் மட்டும் இன்றி, திமுக கூட்டணி கட்சிகள் எல்லோரும் ஆளுநர் மீது கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மயிலாடுதுறையில் கோயிலுக்கு சென்றபோது அரசியல் கட்சிகள் கருப்புக்கொடி காட்டினார்கள். அனைத்து அதிகாரங்களும் புடுங்கப்பட்ட நிலையில், நான் துணை வேந்தர்களை கூப்பிட்டு ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேச போகிறோம் என்று சொல்கிறார். இன்றைக்கு ரவியே ஏ.ஐ ஆளுநர் ஆகிவிட்டாரே. செயற்கை நுண்ணறிவு ஆளுநரை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். இந்த ஆளுநர் வேண்டாம் என்கிற நிலைக்கு தமிழ்நாடு போய்விட்டது. ஆளுநர் பதவியை பிரிட்டிஷ்ஷ காலத்தில் பெரியாரே எதிர்த்தார்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கண்காணி வேலையை பார்க்கிறார்களா? என்று 1938லேயே கேட்டார். அண்ணாவும் ஆட்டுக்கு தாடி எதற்கு? என கேட்டார். தற்போது மக்கள் எல்லோரும் கேட்க தொடங்கி விட்டார்கள். எதற்கு இந்த ஆளுநர் என்று கேட்க தொடங்கி விட்டார்கள். ஊட்டியில் துணைவேந்தர்களை அழைத்து மாநாடு நடத்த அதிகாரம் உள்ளதா? என்று கேட்கிறார்கள். அது மட்டுமின்றி ஊட்டியில் நடைபெறும் மாநாட்டிற்கான முழு செலவும் மாநில அரசின் நிதியாகும். நமக்காக எதுவும் செய்யாத இந்த அளுநர் நடத்தும் இதுபோன்ற மாநாடு நமது வரிப்பணத்தில் தான் நடைபெறுகிறது. இதனால் இன்னும் மின்இணைப்பை துண்டிக்கவில்லையா? என மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்படுகிறார் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அப்படி செயல்படுகிற ரவிக்கு, அவரது விருந்தினர் தன்கருக்கு செலவு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுமா? என சராசரி மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்த தீர்மானம் 1974ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. அதில் மாநிலத்திற்கு என்று தனிக் கொடி, தனி திட்டக்குழு, தனி தகவல் தொழில்நுட்பம் என்று ஒரு மாநிலம் தனக்கு தேவையானதை, தனது இறையாண்மைக்கு உட்பட்டு தானே நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது தான் மாநில சுயாட்சி. தற்போது மத்திய அரசுக்கு அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதை மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் வாஜபாய் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுக்கு மேலும் அதிகாரத்தை கொடுக்கும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சித்தார்கள். இந்த நிலையில்தான் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ராஜமன்னார் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில் அந்தந்த மாநில முதலமைச்சர்களின் இசைவுக்கு இணங்கதான் ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்கிற ஷரத்து உள்ளது. முதலமைச்சர், குறிப்பிட்ட ஆளுநர் வேண்டாம் என்று சொன்னால் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆளுநரே இல்லை என்கிற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். அப்போது முதலமைச்சருக்கு எதிராக செயல்படும் ஆளுநர் தேவையே இல்லை.

சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: TN Rajbhavan

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆளுநரை நியமிக்கும்போது முதலமைச்சருக்கு இணக்கமாக செயல்படுவாரா? அல்லது எதிராக செயல்படுவாரா? என்கிற விவரங்கள் எங்களுக்கு வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநர்களே வேண்டாம் என்றும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். நமக்கு பழைய அனுபவங்கள் நிறைய உள்ளன. சட்டம் நமக்கு சாதகமாகவே இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பும் நமக்கு சாதகமாகவே உள்ளது. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வென்றிருக்கிறோம். இந்த நிலையிலும் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவேன். எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஊட்டியில் மாநாடு நடத்தினார் என்றால்? ராஜ்பவனை காலி பண்ணுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவாக இல்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தை அணு ஏவுகணை என்று தன்கர் பேசுகிறார். பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற தீர்ப்பை எல்லாம் மதிக்க முடியாது என்கிறார். அப்போது, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மக்கள் விரோதமாக செயல்படுகிற ஆளுநரை சட்டரீதியாக எதிர்கொண்டால்கூட நம் மீது விமர்சனத்தை வைப்பார்கள். இந்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாடு நடப்பது என்பது சரியானது அல்ல. இதற்கு குடியரசு துணை தலைவர் வருவது என்பது ஜனநாயகத்தை அவமதிப்பதற்கும், மாநில அரசை இழிவுபடுத்துவதற்கும் சமம். நிச்சயமாக இதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ