Homeசெய்திகள்கட்டுரைஅமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

-

அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

“ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி” என்கிற அளவுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் “ஆவடி நாசர்” என்கிற அடை மொழியுடன் கம்பீரமாக வளம் வந்தார். ஆவடி சா.மு.நாசர் என்றால் தமிழ்நாட்டில் தெரியாத அரசியல் வாதிகளே இல்லை என்று சொல்லலாம்.

திமுக இளைஞர் அணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாசர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நெருங்கிய தொடர்புடையவர். 40 ஆண்டு காலம் திமுகவிலும், திமுக தலைவரின் குடும்பத்தோடும் நெருங்கி இருந்தார். சிறந்த விசுவாசியாகவும் வாழ்ந்தார். அவருடைய விசுவாசத்திற்கு பரிசாக ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் இளைஞர் அணி துணை செயலாளர், அதற்கு அடுத்தது ஆவடி நகர செயலாளர், இரண்டுமுறை நகர்மன்றத் தலைவர் என்று படிப்படியாக நாசர் வளர்ந்து வந்தார்.

ஆவடி சா.மு.நாசர்

கடந்த 2016ல் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராகவும், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதி வேட்பாளராகவும் ஆவடி சா.மு.நாசரை அறிவித்து தலைமை அழகுப் பார்த்தது. அப்போது நாசரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக மா.பா.பாண்டியராஜன் நிறுத்தப்பட்டார்.

ஆவடி தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் பாண்டியராஜன், நமது வெற்றி சுலபமாகிவிட்டது, கடவுளே நினைத்தாலும் நமது வெற்றியை தடுக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார் நாசர். அந்த நம்பிக்கையில் தேர்தல் வேலைகளில் அலட்சியம் காட்டினார். அந்த தேர்தலில் பாண்டியராஜனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் தோல்வி அதுவாகத்தான் இருக்கும். மனதளவில் மிகவும் பாதிப்படைந்தார்.

ஐந்தாண்டுகாலம் எதிர்கட்சியில் இருக்கும்போது கடுமையாக உழைத்தார். கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் என்று நிறைய கொடுத்தார். மக்கள் மத்தியில் அணுதாபம் ஏற்பட்டது. 2021ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனை எதிர்த்து நாசர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் நாசர் வெற்றிப்பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கட்சியை கடந்து, மதத்தை கடந்து, சாதியை கடந்து, எவ்வித பாகுப்பாடும் பார்க்காமல் எல்லோரும் உழைத்தார்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் எல்லோரும் வாக்களித்தார்கள். பாண்டியராஜனை விட 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இது ஒரு வரலாற்று சாதனை என்றே கூறவேண்டும்.

 அமைச்சரவையில் மாற்றம்

தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆவடி சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சரானார். கட்சியின் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியில் அமைச்சர் என்ற அதிகாரம் ஆட்கொண்டது.

அவ்வளவுதான் நடந்தது. வீட்டு வாசலில் மாவட்ட ஆட்சியர் காத்திருக்கிறார், தொழிலதிபர்கள் காத்திருக்கிறார்கள், உதவி கேட்டு ஓராயிரம் பேர் திரண்டு நிற்கிறார்கள். அமைச்சரின் கடைக்கண் பார்வை நம்மீது விழாதா என்று கருப்பு சிவப்பு கலர் வேட்டி கட்டியவன் காத்திருக்கிறான். என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரே நாளில் எல்லாமே மாறிவிட்டது.

முதல் வேளையாக ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி சொல்வதை மறந்தார். ஒரு தெருவில் கூட சென்று வாக்காளர்களுக்கு நன்றி சொல்லவில்லை. அதனை அடுத்து கட்சிக்கு அப்பாற்பட்டு தனக்காக உழைத்த மாற்று கட்சியினரை மறந்தார். கூட்டணி கட்சிகாரர்களை ஓரம் கட்டினார். அதிகாரிகளை வாய்க்கு வந்தப்படி ஒருமையில் பேசினார். சொந்த கட்சிகாரர்களை கடிந்தார். பத்திரிகையாளர்களிடம் பகைமை பாராட்டினார்.

அமைச்சர் நாசர்

தன்னைச் சுற்றி புகழ்வதற்கு ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொண்டார்.  அவர்கள் சொல்வதை மட்டுமே வேத வாக்காக நம்பினார். பிழைகளை சுட்டிக்காட்டுபவர்களை வெறுத்து ஒதுக்கினார். நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில், ஒருதடவை முடிவை எடுத்துவிட்டேன் என்றால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்பார். அதுபோல் அதிகாரம் வந்தப் பின்னர் அவர் சொல்லில் அவரே கட்டுப்பட்டு நிற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு பக்கம் பத்திரிகை எழுதுகிறது, அப்போதும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அடுத்தது உளவுத்துறை எச்சரிக்கை செய்கிறது அப்போதும் தன்னை சரிசெய்துக் கொள்ளவில்லை. கட்சியின் தலைமை மகனிடம் இருந்த “மாநகர செயலாளர் பதவியை பறிக்கிறது, அப்போதும் தன்னை ஒழுங்குப் படுத்தி கொள்ளவில்லை. திமுகவின் தலைமை அமைச்சர் நாசர் தன்னை சரிப்படுத்தி கொள்வார் என்று நிறைய வாய்ப்புகளை கொடுத்தது.

ஆனால் அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை.. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.. அவர் ஆளுங்கட்சியில் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.. எம்.எல்.ஏவாக இருக்கிறார்.. அமைச்சராகவும் இருந்தார்.. இவ்வளவு அதிகாரமிக்க பதவிகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று ஆவடி மக்கள் கேட்கிறார்கள்.

குறள் 448:
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’

கலைஞர் உரை : குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்..

MUST READ