டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனியாக நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணரவில்லை என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியுற்ற அவர் மீது பல்வேறு நடவடிக்கைகள் பாயும் அபாயம் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக எப்போதும் தேர்தல் மனநிலையில் தான் உள்ளது. எதிர்க்கட்சிகள் அப்படி இல்லை. அவர்கள் இந்தியா கூட்டணி வாயிலாக ஒருங்கிணைப்பு என்று சொல்லி வந்தார்கள். குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் அவர்கள் வெற்றி பெறத்தான் செய்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை என்று இருந்த பாஜகவை, அந்த நிலையில் இருந்து கீழே இறக்கியது என்பது எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய சாதனைதான். ஆனால் அவர்களுக்கு அது பத்தவில்லை. உடனடியாக அவர்கள் நாம் தனித்தனியாக நின்றிருந்தால் இன்னும் அதிகமாக வெற்றி பெற்றிருப்போம் என்று எண்ணினார்கள். அது ஜம்மு- காஷ்மீரின் பருக் அப்துல்லா ஆகட்டும், உ.பியின் அகிலேஷ் யாதவ் ஆகட்டும், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, ஏன் மகாராஷ்டிராவிலும் அப்படி பேச தொடங்கி விட்டனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனியாக நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உணரவில்லை. அவர் சொன்னவற்றை எல்லாம் செய்தார் என்பது உண்மையே. தண்ணீருக்கான வரி விதிப்பை குறைப்பேன் என்றார், மின்சார கட்டணத்தை குறைத்தார். பள்ளிகளில் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் செய்வது போலவே டெல்லியிலும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு தருவதில்லை. இதனால் டெல்லியில் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெறாததால் எதும் சரியில்லை. டெல்லி அரசு தங்களது பணியாளர்களை தாங்களே நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக அந்த சட்டத்தையே மத்திய அரசு மாற்றி, தாங்களே அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்து கொண்டனர். இது ஜனநாயக விரோதமான செயலாகும். இதனால் டெல்லி மக்கள் கெஜ்ரிவாலால் எவ்வளவு முயற்சித்தாலும் இதனை செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டனர். அப்படி இருந்தும் டெல்லியில் பல்வேறு தொகுதிகளில் பாஜக – ஆம் ஆத்மி ஆகிய 2 கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு என்று மிகப்பெரிய ஒரு வீட்டை உருவாக்கி கொண்டார். என்னை பொருத்தவரை அது மிகப்பெரிய தவறு ஆகும். ஒரு முதலமைச்சருக்கு மிகப்பெரிய அலுவலகம் தேவைதான். அதனால் முதலமைச்சர் அலுவலகம் என்று அந்த பங்களாவை வைத்துவிட்டு, அதன் அருகில் ஒரு சின்ன குடியிருப்பை கட்டிக் கொண்டிருக்கலாம். அப்படி செய்திருந்தார் என்றால் அவருக்கு புகழை சேர்த்திருக்கும். ஆனால் அவர் வீடு விவகாரம் மிகப் பெரிய அளவில் கெஜ்ரிவாலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. எளிமை எளிமை என்று பேசிய கெஜ்ரிவால், இவ்வளவு பெரிய வீடு கட்டிக்கொண்டது மக்கள் மத்தியில் அவர் மீதான நன்மதிப்பை பாதித்தது. டெல்லியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலால், தங்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணியிருப்பார்கள். அதனால் பாஜக வந்தாலாவது நன்மை கிடைக்கும் என்பதற்காக பாஜகவை தேர்வு செய்திருப்பார்கள்.
டெல்லியில் கடந்த முறை தேர்தலில் காங்கிரஸ் 4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை ஒரு சதவீதம் கூடுதலாக 5 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக 49 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் 51 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். ஏன் அதற்கு கூடுதலான வாக்குகளே கிடைத்திருக்கும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில்தான் கூட்டணி இருந்தது. ஆனால் டெல்லி மக்கள் 7 தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு கொடுத்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றது கவலைக்குரிய விஷயம்தான்.
மாநில அரசியலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் போக வேண்டும் என பாஜக எந்த அளவுக்கு தீவிரமாக இருந்ததோ, அந்த அளவிற்கு காங்கிரசும் தீவிரமாக இருந்தது. அவர் நிர்வாகத்தில் புதிய கலாச்சாரத்தை கொண்டு வந்தார். அவர் டெல்லி நிர்வாகத்தை திறமையாக நடத்தினாரே தவிர, அவருக்கு எந்த ஒரு விஷயத்திலும் தீவிரமான கொள்கை கிடையாது. சிஏஏ பற்றியோ, ஜே.என்.யூவில் நடைபெற்ற தவறுகள் குறித்தோ அவர் தீவிரமாக எதையும் சொல்லவில்லை. அல்லது விவசாயிகள் சட்டம் குறித்து எதாவது தீவிரமாக பேசினாரா?. இதற்கு காரணம் என்ன என்றால், மாத வருமானம் உள்ளவர்கள், தொழில் துறையினர், மாணவர்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் கெஜ்ரிவாலை ஆதரித்தனர். அதற்கு காரணம் கெஜ்ரிவால் நேர்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என நினைத்தார். இவருக்கு என்ன அச்சம் என்றால் எதாவது ஒன்றுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தால், ஒரு தரப்பினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்று பயப்பட்டார். நமக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் வேண்டும் என நினைத்தபோது, கெஜ்ரிவால் அரசியல் தலைவர் என்கிற தகுதியை இழந்து விட்டார். அவர் ஒரு மென்மையான இந்துத்துவ வாதி ஆவார். காங்கிரஸ் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் தலித் விவகாரம், இடஒதுக்கீடு என சொன்னால் அது எடுபடாது. ஏனென்றால் அங்குள்ளவர்கள் இதனால் பயன்பெற்றவர்கள் என்பதால் எடுபடாது. தற்போது ஜெய்ராம் ரமேஷ், கெஜ்ரிவாலை விமர்சப்பது ஏன் என்றால் கெஜ்ரிவால் போய்விட்டால், டெல்லியில் கடைசியில் காங்கிரசும் பாஜக மட்டும் தொடர்ந்து இருக்கலாம் என்பது தான்.
பாஜகவுக்கு அனைத்து தேர்தல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக தான் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அதனால்தான் ஐதரபாத் நகராட்சி தேர்தல் என்றால் கூட 6 மத்திய அமைச்சர்கள் அங்கு சென்று முகாமிட்டிருப்பார்கள். வெளிநாட்டு தலைவர் ஒருவர் டெல்லி வருகிறார் என்றால், அப்போது அரசு புரோட்டக்கால் படி டெல்லியின் முதலமைச்சர் தான் விமான நிலையத்திற்கு சென்று அந்த தலைவரை வரவேற்க வேண்டும். அப்போது, டெல்லியின் முதலமைச்சர் வேறு கட்சியை சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தால், வருபவர்கள் பாஜகவின் வலிமை குறித்து யோசிப்பார்கள். டெல்லி தேர்தலில் பாஜக பொய் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டது. ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலின்போது பூரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டது என்று சொன்னார்கள். பிரதமர் அளவில் உள்ள ஒருவர் முழுக்க முழுக்க பொய்யான தகவலை சொன்னார். அதேபோல், டெல்லியில் கெஜ்ரிவாலை கவிழ்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை பாஜகவினர் செய்தார்கள். கெஜ்ரிவால் தற்போது பதவியை இழந்துவிட்ட நிலையில், அவர் மீது என்ன என்ன வழக்குகள் பாய போகிறது என்று அச்சமாக உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியின் வாயிலாக தமிழ்நாட்டில் திமுக இன்னும் பலமானதாக உணரும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலின்போது, எப்படி பூரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழ்நாட்டிற்கு வந்தது என பொய் பிரச்சாரம் செய்தார்களோ, அதேபோல் இங்கும் பொய் பிரச்சாரங்களை பரப்ப திட்டமிடுவார்கள். அப்படி பொய் பிரச்சாரம் செய்தால் உடனடியாக அதனை எதிர்த்து முறியடிக்க திமுக ஆயத்தமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்வதாக கருதுகிறேன். அண்ணா பல்கலைக் கழக விவகாரம், கள்ளச் சாராயம் போன்ற பிரச்சினைகளை அரசுக்கு எதிராக கட்டமைத்து, எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்போது திமுக விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேசிய அளவில் டெல்லியில் பாஜக வந்துள்ளது என்பது அவர்களது பலத்தை மேலும் கூட்டுகிறது. சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளால் பாஜகவை ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களுக்குள்ளேயே அதிகார யுத்தம் வாந்தால் ஒழிய, அவர்களுக்குள்ளேயே பிளவுகள் கூர்மை பட்டால் ஒழிய பாஜக இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்திய தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.