தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டாலும் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பதவி பறிப்பு மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளின் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக தலைவர் பொறுப்பிற்கான போட்டியில் அண்ணாமலை இல்லை. அதற்கான பரிந்துரையையும் தன்னுடைய தரப்பில் இருந்து கொடுக்கவில்லை என்கிறார். அதனால் அவரோ, அவரது விசுவாசிகளோ அந்த பொறுப்புக்கு வர போவது கிடையாது. அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதில் பெரும்பாலும் கூட்டணி முடிந்துவிட்டது என்றுதான் அமித்ஷாவின் ஊடக பேட்டியில் தெரியவருகிறது. அதன்படி பார்த்தால் அண்ணாமலை தலைவராக இருந்தால் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு நெருடலாக இருக்கும் என்பதால் அவரை மாற்ற முடிவு செய்துவிட்டார்கள் என்பது தெரிகிறது.

அண்ணாமலை பதவி பறிக்கப்பட்டாலும் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அது தேசிய செயலாளராக இருக்கலாம். அல்லது ஒரு மாநில பொறுப்பாளராக நியமிக்கப்படலாம். பாஜக தலைமை அப்படி ஒரு முடிவில் தான் உள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா உடனான சந்திப்பின்போது அண்ணாமலைக்கு எதிராக பேசப்பட்டடதாக ஊடகங்களில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அண்ணாமலைக்கு சாதகமான நிலை தான் உள்ளது. அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். என்னை பொருத்தவரை அண்ணாமலைக்கு பாஜகவில் ஒரு பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு எதிரான மனநிலையில் அமித்ஷாவோ, மோடியோ இல்லை. அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலையின் பேச்சுக்கள் இரு தரப்பிலும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்ய அண்ணாமலையை மாற்றினால் அது சரியாகும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் பாஜகவில் அனைத்து மாநிலங்களிலும், தேசிய அளவிலும் மாற்றங்களை கொண்டுவர போகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தான் அண்ணாமலை மாற்றம் உள்ளது. ஏனென்றால் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் அவர்கள் தேசிய தலைமை மாற்றம் குறித்து அறிவிக்க வேண்டும். அண்மையில் மோடி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜக தலைமைக்கும் இடையில் உள்ள கணக்குகள். சஞ்சய் ராவத் பேச்சு என எல்லாற்றையும் சேர்த்துதான் அண்ணாமலையின் மாற்றத்தை நாம் பார்க்க வேண்டி உள்ளது. தனிப்பட்ட ஒரு அண்ணாமலைக்காக பாஜகவில் எந்த முடிவும் செய்யப்படவில்லை. தற்போதைக்கு அண்ணாமலையை மாற்றினால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கான முகம் மறைந்துவிடும் என சொல்கிறார்கள். அண்ணாமலை இல்லாவிட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் கடந்த முறை 4 எம்எல்ஏக்களை வென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு எதிரான மனநிலை உள்ளது. மக்கள் மத்தியில் ஒரு அமைதியான கோபம் இருக்கிறது. மற்றொருபுறம் விஜய் வாக்குகளை பிரிப்பார். இன்றைய நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே நிலையில் உள்ளன. அதிமுக – பாஜக, பாமக கூட்டணி வந்தாலும், தினகரன் – ஓபிஎஸ் கூட்டணியில் இணைந்தாலும் அது திமுகவை எதிர்க்க போதுமானதாக இருக்காது. விஜய் வாக்குகளை பிரிப்பது என்பது திமுகவுக்கு தான் சாதகமாகும். ஜெயலலிதா இருக்கும் வரை தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு தான் போட்டார்கள். 2021 தேர்தலின்போது அவர்கள் திமுகவுக்கு தான் வாக்களித்தார்கள். அதிமுக – பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்தால், திமுக அரசுக்கு எதிரான மனநிலையை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது. தமிழ்நாட்டில் மக்கள் யார் வேண்டும் என்று முடிவு செய்வதை விட யார் வேண்டாம் என்று தான் முடிவு செய்வார்கள். அதனால் இம்முறை திமுக வேண்டாம் என்று நிச்சயமாக மக்கள் முடிவு செய்ய மாட்டார்கள்.
திமுக அரசு மீது என்ன தான் கோபம் இருந்தாலும் சில திட்டங்கள் நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பது உண்மைதான். ஆனால் பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு மனநிலை என்பது இன்னும் பெரிய மாறவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் கூட்டணி வந்தாலும் நம்பர்ஸ் இருக்கும். ஆனால், அவர்களால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது. மற்றொன்று பாஜக ஆட்சியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். அதனால் அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்கிற அச்சம் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. ஒரு வேளை பாஜகவை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட அவர்களை ஆட்சியில் கொண்டு வந்து அமர செய்யும் மனநிலை மக்களிடம் கிடையாது.
எடப்பாடி பழனிசாமியிம் – அமித்ஷாவும் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியுள்ளார்கள். அதில் கூட்டணி குறித்து பேசியுள்ளார்கள். திமுகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து பேசியுள்ளார்கள். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துதான் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அதேவேளையில் அண்ணாமலை மாற்றம் என்பது தமிழக பாஜகவுக்கு பெரிய பின்னடைவை தான் கொடுக்கும். ஒரு வேளை அதிமுக கூட்டணிக்கு நல்லதாக தான் அமையும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.