ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின் கருத்து மற்றும் அவர் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கருடன், ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே மந்தையில் இருந்து பிரிந்து வந்த 2 ஆடுகள் தான் தன்கரும், ஆளுநர் ஆர்.என்.ரவியும். அவர்கள் இருவருடைய கருத்துக்களும் ஒன்றுதான். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை விட, தங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பதுதான் அவர்களது சிந்தனையாகும். ஏனென்றால் அவர்கள் அரசியலமைப்பு சட்டப் பதவியை வகிக்கின்றனர். ஜெகதீப் தன்கர், மேற்குவங்கத்தில் ஆளுநராக இருந்தபோது அவர் என்ன செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். சந்திரசேகர் காலத்தில் அவர் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அரசியல் நிலைப்பாட்டை மாற்றி மாற்றி எடுத்தார். ஆளுநராகினார். தற்போது குடியரசுத் துணை தலைவராகியுள்ளார். அதுபோக இன்றைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கிறார்.
அது நமது ஆளுநரை பாதிக்கும் விஷயமாகும். அதனால் அவர்போய் தன்கரை பார்த்துள்ளார். அவர்களுக்குள் உண்மையில் என்ன விவாதம் நடைபெற்றிருக்கும்? நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதில் எல்லாம் சேர்ந்துதான் வரும். அதாவது மாநிலங்களுக்கான அதிகாரம். சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதாகும். அப்படி மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கு ஒரு தனி மனிதருக்கு அதிகாரம் உள்ளதா? என்பதுதான் கேள்வியாகும். அரசியலமைப்பு சட்டத்தில் அப்படிபட்ட அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை இவர்கள் வெளிப்படுத்தும் விதம் தவறானதாகும்.
குடியரசுத் தலைவருக்கு எப்படி காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியும். என்ன சூப்பர் பார்லிமெண்டா நீதிமன்றம்? என்று ஜெகதீப் தன்கர் கேட்கிறார். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் நீதி, நிர்வாகம், சட்டமன்றம் என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறையை மற்ற 2 அமைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை. அவர்களது கடமை, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை சீராய்வு செய்து, சரிபார்த்து சமன் செய்து இந்த நாட்டு மக்களுக்கு எது நல்லது என்று முடிவு செய்வதாகும். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இயற்றுகிற சட்டங்களை விட, சட்டங்களுக்கு கொடுக்கப்படும் வியாக்யானங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். அதற்கு காரணம் இன்னொரு அமைப்பு இருக்க வேண்டும். வெறுமனே பெரும்பான்மை அடிப்படையில் சில விஷயங்களை திரித்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு ஆகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி என்கிற அடிப்படையில் இதை பார்க்கிறார். அண்ணா சுயாட்சி குறித்து, இல்லஸ்ட்ரேட்டர் இதழில் ஒரு கட்டுரையை எழுதினார். மாநில சுயாட்சி என்பது, மாநிலங்களுக்கான உரிமைகளும், கடமைகளும் நிறைவேற்றப் படுகிற வகையில் அவர்களுக்கு அதிகாரம். அண்ணா 1968ல் மே தின பூங்காவில் உரையாற்றிய அண்ணா, என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதை செய்யட்டும் என்றார். இப்போதும் அப்படிதான் சொல்ல வேண்டி இருக்கிறது. வேறு வழியில்லை. நாம் நம்மால் ஆனவற்றை செய்து கொண்டிருக்கிறோம். எதற்கும் கேளா காதினராக இருந்தீர்கள் என்றால்? பிறகு நீங்கள் உங்களால் ஆனவற்றை செய்து கொள்ளுங்கள். அண்ணா அன்று சொன்னரை மு.க.ஸ்டாலின் வேறு விதமாக சொல்லி இருக்கிறார். ஜெகதீப் தங்கர் அண்ணாவுக்கு நேர் எதிராக சொல்லியுள்ளார். அவருடன் போய் கூட்டணி சேர்வது ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த நாட்டில் சட்டநடவடிக்கைகள் எல்லோருக்கும் சீராக கடைபிடிக்கப்படுவது கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற கட்சிகளை உடைத்து, கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவது தான் பாஜகவின் பார்முலா. அது தமிழ்நாட்டில் எடுபடாது என்று சொல்லியுள்ளார். முதலமைச்சர் சொல்வதில் அரசியல் இருக்கும். தேசிய அளவில் ஒரு உத்வேகத்தை உருவாக்குவது தமிழ்நாடு என்றாகிவிட்டது. ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கு இன்றைய தேதிக்கு தேசிய அளவிலான உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் துணை தலைவர் அதை கண்டித்து, கிட்டத்தட்ட நீதிமன்றங்களை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார். நீதிமன்றத்திற்கு எதற்கு சிறப்பு அதிகாரம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அதிகாரம் என்பது முழுமையான நீதியை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் நீதி பரிபாலனத்தின் அடிப்படை கோட்பாடு. சட்ட நீதி அல்ல. ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே பிரச்சினை. இதில் பாதிக்கப்பட போவது மக்கள் தான். நீதிமன்றம் இருவரும் பேசி சமரச தீர்வுக்கு வர சொன்னார்கள். ஆனால் பேசித் தீர்க்க முடியவில்லை. ஆளுநரால் தான் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் தலைகுனிவு. அப்போது ஏன் குடியரசுத் தலைவர் அவரை ஆளுநராக வைத்திருக்க விருப்பப்பட வேண்டும். மத்திய அரசு நடுநிலையோடு நடவடிக்கை எடுத்திருக்குமானால், இந்நேரம் ஆளுநரை திரும்ப பெற்று இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.