விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் குறுகிய நேரம் மட்டுமே சந்தித்தார் என்றும், அந்த நேரத்தில் பிரபாகரனுடன் உணவு அருந்தவோ, அவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவோ இல்லை என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ் தெரிவித்துள்ளார்.
சீமான் ஆயுதப்பயிற்சி பெறுவது போல வெளியாகியுள்ள புகைப்படங்களின் உண்மை தன்மை குறித்து அவற்றை எடுத்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயதீன ஊடகவியலாளர் அமரதாஸ் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எல்லாளன் படம் எடுக்கப்பட்டபோது, நான் வன்னியில் சுயாதின ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் இருந்தேன். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படத்தை உருவாக்க முழு முயற்சி மேற்கொண்டிருந்தார். திரைப்பட உருவாக்க பிரிவின் தலைவர் சேரலாதனிடம், போட்டோகிராபராக என்னை கேட்டுக்கொண்டதால் நான் இணைந்து பணியாற்றினேன். எனது புகைப்படங்கள் அச்சு ஊடகங்கள் வெளி வரும். அவற்றை பார்த்துவிட்டு பிரபாகரன் என்னிடம் கருத்துக்களை சொல்வார். எனவே எல்லாளன் படத்திற்கு நான் போட்டோ கிராபராக இருக்க வேண்டும் என பிரபாகரன் விரும்பினார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் சீமான் இலங்கை அழைத்துவரப்பட்டார். பிப்ரவரி 9ஆம் தேதி வந்த சீமான் ஒரு 3 முறை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். ஆனால் சிலர் அவர் திரைப்பட உருவாக்க பணிகளுக்காக வந்ததாக தவறாக கருதுகின்றனர். அவர் திரைப்பட உருவாக்க குழுவோடு தங்கியிருந்தார். ஆனால் அவருக்கும் திரைப்பட உருவாக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காலகலட்டம் மிகவும் நெருக்கடியான காலமாகும். நாங்கள் இருந்த கிளிநொச்சி பகுதிகளில் விமான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தன. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது நிறைய நெருக்கடிகள் நடைபெற்றது. பிப்ரவரி 16ஆம் தேதி இரவு படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற செல்வீச்சு சம்பவத்தில் 2 போராளிகள் மற்றும் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
பிரபாகரனும், அவரது தளபதி கடாபியும் சீமானுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி வழங்கியதாக நாம் தமிழர் கட்சியினர் வெளியிடுகின்றனர். இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும். படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு சீமான் வந்திருந்தார். அந்த நேரம் நான்தான் அந்த படங்களை உருவாக்கி இருந்தேன். ஒரு சில படங்களை சந்தோஷ் எடுத்தார். அதற்கான தேவை இருந்தது. முக்கியமான படங்களை நான்தான் எடுத்தேன். பிப்ரவரி 15ஆம் தேதி காலை 10 மணிக்கு சீமான் வந்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஆயுதங்களை பார்த்து ஆச்சரியமடைந்து, அவற்றுடன் தான் படங்கள் எடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதானல் நான் ஆயுதங்களை கொடுத்து புகைப்படம் எடுத்தேன். இப்போதும் அவர் ஆயுதங்களை சரியாக வைத்திருக்க மாட்டார். குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. அவற்றை தான் நாம் தமிழர் கட்சியினர் ஆயுதப்பயிற்சி பெற்றபோது எடுத்த படம் என சொல்கின்றனர். அது ஒரு மோசடியான விஷயம். இது பற்றி அண்மையில் இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஈழப்பயணத்தில் அவர் பொய்களையும் புனைவுகளையும் கூறியுள்ளார். குறிப்பாக இந்த படங்கள் நான் எடுத்தது என்பதால் இதற்கு என்னுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை பொதுவெளியில் சொன்னேன். அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்ட மெட்டா டேட்டாக்கள் உள்ளன. சீமான் புகைப்படங்களின் 2 போட்டோக்களில் டெர்மாக்கோல் இருக்கும். சில போட்டோக்களில் நான் பின்னணியில் இருப்பேன். படப்பிடிப்பு தளத்தின் அருகே வடபோர்முனை உள்ளது. அதனால் அங்கே ஆயுதங்களை சுட முடியாது. எல்லாளன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு 3 நாட்கள் சீமான் வந்திருந்தார். முக்கியமாக அவருக்கு சொல்லப்பட்டது அங்கிருக்கும் நிலைமைகளை பார்த்துவிட்டு தமிழ்நாட்டு மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதுதான்.
சீமான் உண்மையில் ஒரு மாதம் கூட வன்னியில் இல்லை. ஊடகங்களில் அவர் 2 மாதம், 3 மாதம் என பொய் சொல்லியுள்ளார். சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருந்து பயிற்சி பெற்ற மாதிரி சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் புனைவுகள். பிரபாகரனை சீமான் சந்தித்தார் என்பது உண்மை. ஒரு குறுகிய நேரம் சந்தித்தார். அவர் அவசர கதியில் வேறு ஒரு சந்திப்பு இருந்த நிலையில்தான் அந்த சந்திப்பை நடத்தி இருந்தார். சீமான் வெளியில் சொல்வது போல நீண்ட நேரம் சந்திப்பாக இல்லை. இவர் பல விஷயங்களை திரித்து வேறு வடிவமாக்கியும், நடக்காத சம்பவங்களை உருவாக்கியும் சொல்லி இருக்கிறார். இறுதிப்போரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்க வைக்கப்படாமல், அரசு செயலகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சீமான் தனக்கு பாதுகாப்புக்கு சிலர் இருந்ததாக சொல்கிறார். அது படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த இளங்கோ என்பவரை, பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டதாக பொய் சொல்கிறார். இளங்கோ செல் தாக்குதலில் கொல்லப்பட்டார். சீமான் வேறு நபர்களுக்கு நடந்த நிகழ்வுகளை தனக்கு நடந்ததாக கதைகளை கட்டி சொல்லியுள்ளார். சந்தோஷுக்கு நடந்த விஷயங்களை தனக்கு நடந்ததாக மாற்றி கூறியுள்ளார்.
சீமானின் பொய்களை பார்த்து ஆத்திரமாகவும் இருந்தது, கவலையாகவும் இருந்தது. ஈழ மக்களுக்கு பெரிய பணி செய்பவர் போல காட்டிக்கொள்ளும் நபர், கதைகளை மாற்றி திரித்து தனது சுய லாபங்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்ற வருத்தம் ஏற்பட்டது. சீமான் ஓன்றும் புல் அடிக்கவில்லை. புல் அடித்தது சந்தோஷ். அவர் துல்லியமாக குறி பார்த்து அடித்தார். சீமான் அங்கே ஒரு தவறு செய்தார். அது எல்லோரையும் எரிச்சல் அடைய செய்தது. சீமானை விரைந்து நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என புலிகள் சொன்னார்கள்.அந்த நேரத்தில்தான் செல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவது சிரமமாக இருந்தது. சீமான் புகைப்படத்தில் போராளி ஒருவர் இருக்கும் புகைப்படம் இருக்கும். அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்தான். போர் முடிந்து நான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது சீமானை சந்தித்தேன். அப்போது, அவர் என்னிடம் தலைவர் இருக்கிறாரா? என்று கேட்டார். நான் தலைவர் இல்லை என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன். அப்போது அவர் என்னிடம் சில கேள்விகளை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டது எனக்கு தெரியவந்தது. ஆனால் இவர் ஆயுதப்பயிற்சி பெற்றதாக புகைப்படங்களை காண்பித்து ஏமாற்றுவதன் அவசியம் என்ன என்று யோசிக்கும்போது, பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொள்வதாக சொல்லிக்கொண்டு, ஆயுதப்பயிற்சிகள் எடுத்ததாக பொய் சொல்லி இவர் என்ன செய்ய போகிறார். இவர் இந்த விஷயங்களை பயன்படுத்தி தனக்கான புகழையும், ஆதரவையும் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் என தெரியவருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். இவருக்கு உதவக்கூடிய நிலையிலும் பலர் உள்ளனர். சிலரை முளைச்சலவை செய்து தன்னுடன் வைத்துள்ளார். இவர் ஈழப்பயணத்தை வைத்து பெரிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். சீமான், ஈழப்போராட்டம் சார்ந்த செயற்பாடுகளுக்கு உதவக்கூடிய தமிழ்நாட்டு தலைவர்கள், உணர்வாளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு விடுதலைபுலிகள் நன்றாக கவனித்து அனுப்புவார்கள். முதலாவது ஆமைக்கறி என்பது அரிதான விஷயமாகத்தான் கிடைக்கும். சந்தோஷுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. சந்தோஷுக்கு நடைபெற்றதை மாற்றி தனக்கு நடந்தது போல சொல்லியுள்ளார். இவர்கள் இலங்கை வந்திருந்தபோது போர் நெருக்கடி நிறைந்ததாக இருந்தது. அப்படி இருந்தும் அவர்களுக்கு சரியான உணவு வழங்கப்பட்டு கொண்டுதான் இருந்தார். பிரபாகரனுடன் சீமான் உணவு உண்ணவில்லை. வேறு இடங்களில் அவர் உணவு அருந்தியுள்ளார். பிரபாகரனை சந்தித்தபோது சந்தோஷ் அருகில் இருந்துள்ளார். சேரலாதன் தற்போது உயிருடன் இல்லை. பிரபாகரன் பொதுவாக வெளியில் இருந்து வருபவர்களை சந்தித்தால் உணவு அருந்துவது வழக்கம். ஆனால் சீமானை சந்தித்த அன்று பிரபாகரனுக்கு வேறு பல பணிகள் இருந்தது. அவர் அவசரமாக செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் குறுகிய நேரத்தில் உணவு அருந்தி, துப்பாக்கி பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பிரபாகரனை சந்தித்தபோது சீமானுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு புகைப்படங்கள் கொடுக்கப்படவில்லை. ஏன் என்றால் அவர் விமான மூலம் வந்து, விமானம் மூலம் திரும்பி சென்றார். இந்த புகைப்படம் விமான நிலையத்தில் சிக்கினால் பிரச்சினை என வழங்கப்படவில்லை. மேலும் சீமான் இலங்கையில் இருக்கும்போதே புகழ் விரும்பியாக அரியப்பட்டார். சேரலாதான் போன்றோர் இவரிடம் படத்தை கொடுத்தால் அவர் வெளியிட்டால் தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் சூழல் இருந்தது. இதனால் அவருக்கு படத்தை வழங்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.