அரசியலமைப்பு சட்டத்தை மீறி தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரபல Wire செய்தி நிறுவனத்திற்காக பத்திரிகையாளர் கரண் தாப்பர், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணலின்போது மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கரண் தாப்பர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அமைச்சர் பி.டி.ஆர். தெளிவுடன் விளக்கம் அளித்துள்ளார். இதில் புதிய கல்விக்கொள்கை குறித்து மட்டும் அவர் 29 நிமிடங்கள் பதில் அளித்தார். இந்த நேர்காணலில் அமைச்சர் பிடிஆர் கூறியிருப்பதாவது:
கேள்வி : புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என்று ஏன் ஸ்டாலின் நம்புகிறார். யோகேந்திர யாதவ் உள்ளிட்ட வல்லுநர்கள் எல்லோரும் இந்தி என்கிற வார்த்தையே இல்லாதபோது அதனை அமல்படுத்தலாமே?

தமிழ்நாட்டில் நாங்கள் மிக முக்கியமாக பார்ப்பது கல்விதான். கல்விதான் சமூகநீதியை பெற்றுத்தரும். அதனால்தான் தொடக்கப்பள்ளிகளில் இருந்து கல்வி கட்டாயம் என்பதை 1921ல் நீதிக்கட்சி கொண்ட வந்தது. அப்போது முதல் இப்போது வரை தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறோம். யோகேந்திர யாதவோ அல்லது தர்மேந்திர பிரதானோ தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்துகொண்டு தமிழ்நாட்டு பள்ளிகளை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா? அந்த பாடத்தை எங்களுக்கு நடத்த தேவைல்லை? அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்க முடியாது. கல்வியை பொறுத்தவரை தொடக்கக்கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் கல்வி பயின்றேன். அங்குகூட எதாவது தேவை என்றால் ஃபெடரல் அரசாங்கம் கட்டுப்படுத்த மாட்டார்கள். மாகாண அரசுகள் தான் பல்கலைக்கழகத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வார்கள். ஆனால் இங்கு நிலைமை அப்படியா உள்ளது? யோகேந்திர யாதவ் படித்த அந்த கல்விக்கொள்கையில் வேண்டுமென்றால் இந்தி வார்த்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் நிறைய இடங்களில் இந்தி திணிப்பை பார்த்தேன். சமஸ்கிருதம் போன்ற வார்த்தைகள் இருக்கிறது.
கேள்வி : இந்தியை திணிக்க முடியாது என்றும், அரசாங்கமே நினைத்தாலும் 3 மொழிகளை நிர்ணயிக்க முடியாது, குழந்தைகள் தான் நிர்ணயிப்பார்கள் என்று மத்திய அரசு சொல்கிறதே?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. நாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைத்துள்ளோம். எங்களுக்கு என்று கொள்கை உள்ளது. எங்களுடைய கொள்கை இருமொழி கொள்கைதான். மும்மொழி கொள்கையை தேவையில்லை. யோகேந்திரயாதவ் என்ன நினைக்கிறார் என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
கேள்வி : இருமொழி கொள்கையில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக உள்ளீர்கள். குழந்தைகள் எளிமையாக 3 மொழிகளை கற்றுக்கொள் முடியும்போது அதை ஏன் தடுக்கிறீர்கள்?
உ.பி.யில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். குழந்தைகள் எளிதாக மூன்றாவது மொழியை கற்றுக்கொள்வார்கள் என்றால், இந்த மும்மொழி கொள்கையை செயல்படுத்திய 75 ஆண்டுகளில் நாடு பெற்ற பலன் என்ன? எப்படி குழந்தைகள் எளிமையாக கற்றுக்கொள்வார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? தமிழ்நாட்டை விட மும்மொழியை செயல்படுத்தக்கூடிய ஒரு மாநிலம் எல்லா இடங்களிலும் முன்னேறி உள்ளது என்று ஒரே ஒரு மாநிலத்தை காட்டுங்கள். அதற்கு பிறகு வந்து எனக்கு விளக்கம் அளியுங்கள். அதற்கு பிறகு மும்மொழி கொள்கையை ஏற்பதா? வேண்டாமா? என்று நான் முடிவு செய்கிறேன்.
கேள்வி : இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட கல்விகொள்கை மற்றும் தற்போது கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கையில் மும்மொழி உள்ள போது இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?
நாங்கள் எப்போது மும்மொழியை ஏற்றுக்கொண்டடோம். நீங்களே சொல்கிறீர்கள் அந்த காலத்தில் இருந்தே மும்மொழி கொள்கை இருக்கிறது என்று. அந்த காலத்தில் எதாவது ஒரு அரசு நீங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு நிதி கொடுப்போம் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா? நிதியை நிறுத்தினார்களா? ஆனால் மோடி அரசு நிதியை நிறுத்துகிறது.
கேள்வி : உ.பி., பீகாரை ஏன் ஒப்பிடுகிறீர்கள்? தமிழ்நாடுதான் அதிகம் அவுட்கம் கொடுத்துள்ளது. சிறந்த கல்வி கட்டமைப்பை வைத்திருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். அப்போது உங்கள் குழந்தைகள் 3வது மொழியை எளிமையாக கற்றுக்கொள்வார்களே? ஏன் அவர்களை தடுக்கிறீர்கள்?
எதாவது இடத்தில் செயல்படுத்தி ரிசல்ட் கிடைக்காத திட்டத்தை ஏன் நம்புகிறீர்கள்?. நாங்கள் ஏன் இருமொழி கொள்கையை விட்டுக்கொடுப்போம் என ஏன் நம்பகிறீர்கள். நீங்கள் என்ன கல்வியியல் துறையில் பிஹெச். டி பட்டம் பெற்றிருக்கிறீர்களா? இல்லை 10 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளீர்களா? அப்படியே நீங்கள் செய்திருந்தாலும், நீங்கள் சொல்வதற்காக நாங்கள் கேட்டுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டிடம் 70 வருட டேட்டா உள்ளது. 70 வருடத்தின் ரிசல்ட் உள்ளது. நீங்களும், யோகேந்திர யாதவும் ஒரு ரிசல்ட்டை காண்பித்துவிட்டு பேசுங்கள்.
கேள்வி : ஸ்டாலினுக்கு 4 மொழிகள் தெரியுமே. குழந்தைகள் 3 மொழிகள் கற்றால் என்ன?
ஒரு குழந்தை ஒன்று அல்ல 2 அல்ல 15 மொழிகளை கூட கற்றுக்கொள்ளலாம். அதற்கு நாங்கள் தடை சொல்லவே இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் நிதியில் இயங்கக்கூடிய பள்ளியில் இருமொழி கொள்கைதான் இருக்கும். எங்களுக்கு 3வது மொழியை கொண்டுபோய் திணிக்கும் எண்ணம் கிடையாது. இருக்கக்கூடிய நல்ல திட்டத்தை நீர்த்துபோக செய்ய விரும்பவில்லை. ஒரு குழந்தை மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறாரா? தாராளமாக அவர்கள் வெளியில் சென்று கற்றுக்கொள்ளலாம். அவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் படித்துக்கொள்ளலாம். அதற்கு அரசு ஒருபோதும் தடை செய்ததில்லை. நாங்கள் பேசுவது அரசுப்பள்ளி, அங்கு இருமொழி கொள்கை மட்டும்தான் இருக்கும்.
கேள்வி : தர்மேந்திர பிரதான் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாததால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்துகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒவ்வொரு திட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுதான் வருகிறது என்று நம்புகிறேன். அதேபோல் ஒவ்வொரு திட்டமும் 15வது நிதி ஆணையம் ஒப்புதல் வழங்கிய உடன் தான் வருகிறது என்று நம்புகிறேன். நாடாளுமன்றத்தால், பட்ஜெட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் நிதியை எப்படி இவர்கள் நிறுத்தலாம்? அப்போது பட்ஜெட்டிலும், நிதி ஆணையத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு விஷயத்தை பின்னாளில் ஏதாவது நிபந்தனையை சொல்லி நிறுத்துவோம் என்று மத்திய அமைச்சர் சொல்ல வருகிறாரா? அப்படி நிறுத்த அரசியலமைப்பு சட்டத்தில் எந்த ஒரு இடமும் கிடையாது. எப்படி ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்ற காரணத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோமோ? அதுபோல அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிற மத்திய அமைச்சருக்கு எதிராகவும் வழக்கு தொடருவோம்.
கேள்வி : ரூ.2,400 கோடியை நிறுத்திவிட்டதால் தமிழ்நாட்டின் கல்வியை அது பாதிக்காதா?
இப்போது நான் ஒரு தொழில் செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம் ஒரு மாபியா வந்து தலையில் துப்பாக்கியை வைத்து நீ ரூ.2,000 கோடி பணம் கொடு, அப்போதுதான் நீ உனது ரூ.10 ஆயிரம் கோடி தொழில் செய்ய முடியும் என்று சொல்கிறான். அப்போது நீங்கள் சொல்கிறீர்கள் அந்த ரூ.2,000 கோடியை கொடுத்துவிடுங்கள், அதுதான் ரூ.10 ஆயிரம் கோடி தொழில் உள்ளதே என்று நீங்கள் சொன்னால் எப்படி இருக்கும். அதுபோன்றுதான் நீங்கள் சொல்வதை பார்க்கிறேன். அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு உரிமை கொடுத்துள்ளது. நாங்கள் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசாக உள்ளோம். எங்களுக்கு என்று ஒரு கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். இப்படி செயல்படுத்தினால் தான் நிதி கிடைக்கும் என்று எந்த நிதி மசோதாவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு ஆலோசனை சொல்வதற்கு பதில் நீங்கள் ஏன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர்களுக்கும் கொடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் சென்று கேளுங்கள்.
எங்களுக்கு பணத்தை விட எங்களது கலாச்சாரம், மதிப்பீடுகள், கொள்கை தான் முக்கியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். மத்திய அரசு பணத்தை வைத்து தொடர்ச்சியாக அரசியல் செய்கிறார்கள். தங்களுக்கு பிடித்த மாநிலங்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குகிறார்கள். இப்படி கொடுப்பதால் அந்த மாநில மக்கள் தலைகுணிந்து மண்டியிடுகிறார்களா?. அந்த திட்டங்கள் மூலமாக அங்கே என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டுதான் சரியான பாதையில் இருக்கிறோம். பணத்திற்காக மண்டியிட முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.