Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?... ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

-

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க நடவடிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒற்றுமைக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா விவகாரத்தின் முழுமையான பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒரு கூட்டணியில் இருப்பதால், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி, அந்த கட்சி ஆட்சி நடத்தினால் ஆட்சியை பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்பது ஜனநாயக விரோதம். ஆனால் எந்த இடத்தில் கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என வரைமுறை உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் நிலையில், திமுக தலைமை தாங்கி நடத்தும் இந்த ஆட்சியில் தவறுகள் இருந்தாலோ, அல்லது சக கூட்டணி கட்சி என்ற முறையில் தங்களை நடத்தும் முறையில் பாகுபாடு உள்ளது, சில ஏமாற்றங்கள் உள்ளது என்றால் விசிக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் வெளிப்படையாக பேசி விவாதிக்க வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை வழங்குவதாக திமுக தெரிவித்தது. அதில் ஒரு தொகுதி பொதுத் தொகுதி வாங்கினால், அந்த தொகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்குவது என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வளர்ச்சி தொடங்கியது. ஆனால் 2 தொகுதிகள் கொடுத்தால் ஒரு பொதுத் தொகுதியை ஆதவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். வேண்டுமெனில் 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 3 தொகுதிகளை வாங்கி, அதில் பொதுத் தொகுதியை ஆதவுக்கு விட்டுக் கொடுங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனால் திருமாவளன் 3 தொகுதிகள் கேட்டார். ஆனால் திமுக 3 தொகுதிகள் வழங்க முடியாது என்று தெரிவித்து, 2 தொகுதிகளில் விருப்பமானவற்றை கேளுங்கள் என கூறி விட்டது. இதனால் இன்னொரு பொதுத் தொகுதி கேட்க முடியாத நிலை திருமாவளவனுக்கு ஏற்பட்டது. ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவனால் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட உறுதி மொழியை காப்பாற்ற முடியாமல் போனது.

மன்னராட்சி நடத்தும் ஸ்டாலின், இளவரசராக உள்ள உதயநிதி ஸ்டாலின் கட்சியிடம் ஒரு பொதுத் தொகுதியை வாங்கி போட்டியிடும் மனநிலையில் தான் ஆதவ் அர்ஜுனா இருந்தார். இது ஊர் அறிந்த உண்மை. ஆனால் அது நடக்காததால் தேர்தல் முடிந்த நாளில் இருந்து பொதுவெளியில் திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை ஆதவ் முன்வைக்க தொடங்குகிறார். தனிப்பட்ட பாதிப்பு காரணமாக விமர்சனங்களை வைக்கத் தொடங்கினார். ஆதவ் அர்ஜுனா ஒரு முறை விமர்சனம் வைத்தால் தெரியாமல் செய்துவிட்டார் என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால் ஆதவ் மீது எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது என திருமாவளவன் கூறுகிறார். ஒரு முறை என்றால் ஏற்கலாம், ஆனால் பல முறை விமர்சித்தபோதும் திருமாவளவன் வேடிக்கை பார்த்தால், எதனால் அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என கேள்வி எழுந்தது.  கட்சியில் பூட்டிய அறைகளுக்குள் மூத்த நிர்வாகிகள் கடுமையான கேள்விகளால் திருமாவளவனை கேட்டுவிட்டனர். ஆனால் அவர்களது குற்றச்சாட்டுக்கு திருமா அமைதி காத்தார்.

நேற்று ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், என்னுடைய நம்பத்தன்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவித்தார். அது தான் நிஜமான வார்த்தை. இந்த வார்த்தை அவரிடம் இருந்து வெளிப்பட இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. திருமாவளவனுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு முதல்நாள் கூட ஆதவை பாதுகாக்க முயற்சித்தார். தலித் அல்லாத தலைவர்கள் மீது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றார். ஆதவ் அர்ஜுனா தலித் அல்லாதவர் என்றால், எஸ்.எஸ்.பாலாஜி யார், ஆளுர் ஷாநவாஸ் யார். அவர்களுக்கு கட்சியின் கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றால், ஏன் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொருந்தாது. இந்த விவகாரத்தில் தலித், தலித் அல்லாதவர் என்ற வேறுபாடு கிடையாது. கட்சிக் கட்டுப்பாடு என்றால் எல்லோரும் ஒன்றுதான். ஒரு வழியாக தன் மீதான நம்பகத்தன்மையை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை திருமாவளவன் எடுத்துள்ளார். இது எதிர்காலத்தில் விசிகவின் ஒற்றுமையை ஓரளவுக்காவது காப்பாற்றும்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் குறைந்தபட்சம் இடை நீக்க நடவடிக்கையையாவது மேற்கொண்டுள்ளார் என கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை திமுகவினர் மௌனமாகத்தான் இருந்தனர். இதற்கு மேலும் திருமாவளன் மௌனம் காத்திருந்தார் என்றால் திமுகவில் இருந்தும் குரல்கள் வந்திருக்கும். நேற்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுகவில் இருந்து தனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை என கூறினார். அது உண்மை தான். ஆனால் நீண்ட நாட்களுக்கு அப்படி இருந்திருக்க மாட்டார்கள். திமுக தவறு செய்கிறது என விஜய் குற்றம்சாட்டலாம் தவறில்லை. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே ஆட்சியை குற்றம் சாட்டுவது தவறு. வேண்டுமானால் கூட்டணியில் இருந்து வெளியேறி என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

ஒரு குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று விஜய் சொல்கிறார். அவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது கருத்தியல் தலைவர் என கூறுகிறார். வாரிசு அரசியல் என்ற சொல்லைத்தான் ஆதவ், மன்னராட்சி என கூறுகிறார். நீங்கள் யாரை மன்னராட்சி என்று சொல்லுகிறீர்களோ, அந்த ஆட்சியை உருவாக காரணமாக இருந்தவர் நீங்கள் தான். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அப்போது, அவருடன் முதலமைச்சரின் மருமகன் சபரீசன், உதயநிதியின் நண்பர்கள் சிலர் செல்வார்கள். அவர்களில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர்.  அப்போது, மன்னருடன் நகர்வலம் வந்தபோது உங்களுக்கு தெரியவில்லையா இது ஜனநாயக விரோத மன்னராட்சி என்று. உங்களுக்கு ஓரு பொதுத் தொகுதியை வழங்கி தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் அந்த மன்னர் ஜனநாயகவாதி ஆகி விடுவார் அல்லவா?. சீட்டு கொடுக்கலானா மன்னராட்சி, ஜனநாயகத்திற்கு விரோதம் என கோஷம் போடுவது தவறு.

வாரிசு அரசியல் என்பன உள்பட ஆதவ் அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியானவை தான். ஆனால் அவற்றை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்கள் கையில் உள்ளது. வாரிசாக வருபவர்கள் ஆட்டம் போட்டால் அவர்களுக்கு பாடம் புகட்டி வீட்டிற்கும் அனுப்ப வேண்டிய அதிகாரமும், உரிமையும், கடமையும் மக்களுக்குத்தான் உள்ளது. அந்த ஆட்சி அமைய காரணமாக இருந்துவிட்டு, ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சுய விருப்பு வெறுப்பு காரணமாக மக்களை திசை திருப்பும் வேலையை செய்யக்கூடாது. உதயநிதியோடும், சபரீசனோடும் மிக நெருக்கமாக இருந்து, திமுகவுக்கான வெற்றி வியூகங்களை வகுத்தவர்தான் ஆதவ் அர்ஜுனா. அப்போது தெரியவில்லையா இது மன்னராட்சியை உருவாக்குவதற்கான ஏற்பாடு என்று. அப்போது சொல்லாமல் தற்போது செல்வதில் அர்த்தம் இல்லை. இல்லை தற்போதுதான் அது தவறு என்பது புரிந்தால், அதனை கட்சி கட்டுப்பாடுகளை மீறாமல் செய்ய வேண்டும்.

தற்போது ஆதவுக்கு புதிய கருத்தியல் தலைவர் கிடைத்துள்ளதால் அவருடன் சென்று பேசலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தர தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என அறிக்கை விட்டுள்ளார். இதில் இருந்து ஆதவ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களை தவறாக திசை திருப்பக்கூடாது. மக்கள் உங்களைவிட புத்திசாலி. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திமுக உண்மையிலேயே காயப்பட்டது. வெளியில் சொல்ல முடியாமல் தவித்தது. திருமாவளவனை கண்டிக்கவும் முடியவில்லை, அவர் வேடிக்கை பார்க்கிறார் என்கிற ஆதங்கம் திமுகவிடம் இருந்தது. அதனை தெளிவுபடுத்தவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். தாமதாமாக எடுத்தாலும் திருமாவளன் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார்.

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
thirumavalavan mk stalin

திராவிட கட்சிகள் தலித் மக்களுக்கு நிறைய செய்துள்ளது. அருந்தியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர். ஜெயலலிதா தனது அமைச்சரவையில் அருந்தியர் வகுப்பை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பதவியை வழங்கி கவுரவப் படுத்தினார். திமுகவில் வி.பி.துரைசாமி உள்ளே வருவார், போவார். ஆனால் கலைஞர் அவருக்கு பதவி வழங்கி சிறப்பித்தார். அந்தியூர் செல்வராஜுக்கு கிட்டத்தட்ட அரசியலே முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவரை அழைத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்கள். ஆ.ராசாவுக்கு, உச்சபச்சமாக கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

டிடிவி தினகரன்

ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் டிடிவி தினகரனின் கருத்து மிகவும் சரியானது. மன்னராட்சி என்பது தவறு என்றும், இது ஜனநாயகம் என்றும் தினகரன் தெரிவித்தார். மேலும் மக்கள் வாக்களித்து தேர்வு செய்வதால், இதில் மன்னராட்சி என்பது தவறு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உதயநிதியை வாரிசு என்றார்கள், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவரை மக்கள் எம்.எல்.ஏ ஆகினார். ஒரு வருடத்தில் மந்திரி ஆக்கினார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பொதுவெளியில் எடுத்துச்சென்றார்கள். ஆனால் மக்கள் 40க்கு 40 தொகுதியை திமுகவுக்கு அளித்தார்கள். மக்கள் மோடியை மட்டும் பார்க்கவில்லை. திமுக செய்த செயலுக்கான அங்கீகாரமாகவும் பார்க்கின்றனர். அப்போது மக்கள் திமுகவை தண்டிக்கவில்லை. மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றால் உங்களுக்கு என்ன கவலை. விசிகவை, விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா தனிப்பட்ட முறையில் விரும்பினார் எனில், அவர் இழுத்த இழுப்புக்கு திருமாவளவன் நிச்சயம் செல்ல மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ