திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவாத அரசியல் செய்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் லஜபதி ராய் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், மத வழிபாட்டு தலங்கள் தொடர்பான 1991 சட்டப்பிரிவு என்ன சொல்கிறது என்று விளக்கம் அளித்து, வழக்கறிஞர் லஜபதிராய் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சுவார்ட்ஸ் பாதிரியாரின் கருத்துக்களின் படி சிக்கந்தர் மலையில் அடக்கம் செய்தவர்களின் பட்டியலில் சிக்கந்தர் என்ற பெயர் இல்லை. ஆனால் வரலாற்று அறிஞர் எஸ்.சி.ஹில் தனது நூலில் சிக்கந்தர் என்ற இஸ்லாமிய துறவி இருந்தார் என சொல்கிறார். திருப்பரங்குன்றம் மலையில் தர்காவை ஒட்டி அமைந்துள்ள மசூதி, 275 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அப்படி என்றால் மத வழிபாட்டு தலங்கள் தொடர்பான சட்டம் 1991-ல், 6வது பிரிவில் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு, அன்று என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி சட்டத்தை மீறி சொன்னால் 3 வருட தண்டனைக்கு உரிய குற்றமாகும். பொதுவாக பாஜக இப்படி சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை. சிக்கந்தர் மலையில் உள்ள தர்காவை, கோரிப்பாளையத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பாஜகவினர் சொல்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பொதுவாக 100 வருடங்களுக்கு மேலாக ஒரு கட்டிடம் இருந்தாலே, அது தொல்லியல் சின்னமாக தான் கருத முடியும். சட்டப்படி அதனை அகற்றவும் முடியாது.
இன்றைய கால கட்டத்தில் உடன் கட்டை ஏறும் சதி வழக்கத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும், அல்லது தனித் தமிழ்நாடு வேண்டும் என கூட்டம் போட்டாலோ, பேட்டி கொடுத்தாலோ, அது தண்டனைக்கு உரிய குற்றமாகும். அயோத்தியில் நடந்தது இங்கு நடக்கும் என்று இந்து அமைப்பினர் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் நிறைய கலவரங்கள் நடைபெற்றதற்கு காரணம் அரசியல் உறுதியோடு நடைபெறாதது தான். மண்டைக்காடு கலவரத்தின்போது அன்றைய அரசு இருப்புக்கரம் கொண்டு கையாண்டு இருந்தால், நிச்சயமாக கலவரத்தை நிறுத்தி இருக்க முடியும். இன்றைய சூழலில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறபோது அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை அரசு ஆவணங்களின் படி சிக்கந்தர் மலை என்றுதான் உள்ளது. இஸ்லாமியர்களும், இந்துக்களும் வேறு வேறு பெயர்களில் அந்த மலையை அழைக்கலாம். ஆனால் மலை ஒன்றுதான். ஒவ்வொரு தரப்பும் அவர்களுக்கு வேண்டிய பெயரில் அழைத்துக் கொள்ளலாம். அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் நமது சமுதாயத்தை பின்னோக்கி கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது. திருப்பரங்குன்றனத்தில் மக்கள் இன்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். இது குறித்து பேசுவதே எனக்கு வருத்தமாக உள்ளது.
சிக்கந்தர் மலையில் கந்தூரி விழா பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. அப்போதும் பலி கொடுக்கும் நிகழ்வுக நடைபெற்றுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்களில் நடைபெறும் வழிபாட்டிற்கு, அங்குள்ள பெரும்பான்மை மக்கள் தங்களது மத உணர்வுகளை பாதிப்பதாக கூறினால் எவ்வளவு முட்டாள்தனம். அதுபோன்று தான் இந்து அமைப்புக்களின் வாதமும். இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக இதனை செய்கிறார்கள். 1993ஆம் ஆண்டு தீர்ப்பின் படி மலைமீது தீபம் ஏற்றலாம். ஆனால் இஸ்லாமியர்கள் அதற்கு அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் மதவழிபாட்டு சட்டம் 1991 நாட்டில் அமலுக்கு வந்த பின்னர், இந்த உத்தரவுகள் எல்லாம் செல்லாது. அண்மையில் ஞானவாபி மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. அதில் நாடு முழுவதும் இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்தால், அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அப்படி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அது செல்லாது என்றும் அறிவித்துள்ளது. இதனால் இன்று மத வெருப்பு அரசியலை இங்கே விதைத்தால் அது 3 வருட தண்டைக்குரிய குற்றமாகும்.
தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஏன்? இது போன்று திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழிகள் வெட்டக் கூடாது என்று எவரும் சொல்ல வில்லை. ஏன் என்றால் ஜெயலலிதா உடனடியாக அப்படி சொல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுப்பார். அதேபோல், இப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இன்னும் தனது கடிவாளத்தை இறுக்க வேண்டும். வன்முறையை தூணட முயற்சிப்பவர்கள் மீது, சட்ட ரீதியாக என்ன என்ன வழிமுறைகள் உள்ளதோ அதன்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாம்பும் சாக கூடாது, தடியும் உடையக்கூடாது என்பது போன்று அரசு செயல்படக் கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.