அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்குதான் நன்மையாக அமையும். அதனால்தான் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி என்று சொல்லவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால், திமுகவுக்கு எந்த விதமான சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்றத்தில் அதிமுகவின் கணக்கை எங்கே இருந்து போடுகிறார்கள் என்று சொன்னார். அதை சாணக்ய வியூகம் என்று குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது சட்டப்பேரவையில் அதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது திமுக, அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் தங்களுக்கு லாபம் என்றே நினைக்கிறது.
வெளிப்படையாக சொல்வதென்றால் அரசியல் தேர்தலில் பணம் இல்லாமல் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. வாக்காளர்கள், வாக்குகளுக்கு பணம் வாங்காமல் உள்ளனரா? வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் வாக்கிற்கு பணம் பெறுகிறார்கள். எஞ்சிய 15 சதவீத வாக்காளர்களில் சிலர் சித்தாந்த அடிப்படையிலும், சிலர் பாஜக வரக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்பபடையிலும் வாக்களிக்க மாட்டார்கள். அந்த வாக்குகள் நமக்கு கிடைத்துவிடும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது. ஆட்சியின் மீது அதிருப்தி இருக்கும், ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் ஆனாலும் இந்த வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்ன என்றால்? இந்த முறை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரி. ஸ்டாலின் முதலமைச்சராக தொடருவார். 200 தொகுதிகளில் இல்லாவிட்டாலும், 120 தொகுதிகளில் வென்றுவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்து 2029ல் மக்களவை தேர்தல் வருகிறது. அடுத்து 2031ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இவை உதயநிதி ஸ்டாலினுக்கான பரிசோதனையாக அமைந்துவிடும். அதற்கான ஒரு பாலம் போட வேண்டிய கட்டாயத்திலும் திமுக இருக்கும். அப்போது பாஜகவின் வளர்ச்சி என்பது திமுகவுக்கு எதிர்கால இடைஞசலாகும். அதிமுகவின் ரத்தத்தை உறிஞ்சி பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்பதைதான் தங்கம் தென்னரசு சாணக்ய வியூகம் என்று சொல்கிறார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஒரு பேசு பொருளாகிவிட்டது. இது திமுகவுக்கு கிடைத்துள்ள அரசியல் லாபம்தான். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்லிவிட்டால் திமுகவுக்கு ஒரு அட்வாண்டேஜ் கிடைக்கிறதல்லவா?
விஜய் எந்த முடிவும் சொல்லாமல் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திமுக வாக்குகள் அப்படியே கூர்மைபட்டுவிடும். எடப்பாடி பழனிசாமி வெல்கிறாரோ இல்லையோ நாம் வென்றுவிட வேண்டும் என்றுதான் எஸ்.பி.வேலுமணி நினைப்பார். அப்படிதான் நினைக்க முடியும். எம்எல்ஏ என்கிற அந்தஸ்தை இழந்துவிடக்கூடாது என்றால், பாஜகவுக்கு இவ்வளவு வாக்கு சதவீம் உள்ளது, அது நமக்கு வர வேண்டும் என்று யோசிப்பார்கள். அது தவறில்லை. அதேநேரத்தில் நம்ம தொகுதி பாஜகவுக்கு போய்விடக்கூடாது என்றும் நினைப்பார்கள். எனவே கூட்டணி இல்லை என்று சொல்வதைதான் அனைவரும் விரும்புவார்கள். அதிமுகவுக்குள் தொகுதி கணக்கிலும் கூட்டணியை விரும்பாதவர்கள் இருக்கலாம், சித்தாந்த கணக்கிலும் கூட்டணியை விரும்பாதவர்கள் இருக்கலாம். பாஜகவை உள்ளே விட்டால் அதிமுகவுக்கு ஆபத்து என்ற கருத்தும் உள்ளது. தற்போது பாஜக உடன் கூட்டணி உள்ளது என்று சொல்லிவிட்டால் அதிமுகவுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டு விடும்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வந்தவர்கள் எல்லாம், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியானால் நமக்கு இனி வேலை இல்லை என்று சொல்லிவிட்டு மாற்று கட்சிகளுக்கு போய்விடுவார்கள். சிக்கல் என்ன என்றால் இன்றைக்கு உடனுக்குடன் தகவல்கள் மக்களுக்கு செல்கிறது. அதை வைத்து அவர்கள் முடிவெடுப்பார்கள். இவை எல்லாம் திமுகவுக்கு ஆதரவாகத்தான் வருகிறது. ஆனால் பாஜக நிறைய நெருப்பு வளையங்களை உருவாக்கி கொண்டே இருப்பார்கள். பல மாநிலங்களில் அவர்கள் நடந்துகொண்ட முறைகளை பார்க்கும்போது, எப்படியாவது ஒரு இடத்தில் சங்கடத்தில் மாட்டுவார்கள். எந்த ஆட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது என்னுடைய தெளிந்த அறிவாகும். எந்த ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் அதன் ஒரு பகுதியே இதுதான். ஏனென்றால் பணம் இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது என்கிற இழிநிலையை வாக்காளர்கள் கொண்டுவந்து விட்டார்கள்.
10 கோடி ரூபாய் இல்லாமல் ஒரு எம்எல்ஏ வெற்றிபெற்று விட முடியாது. தேர்தலில் செலவு செய்யக்கூடாது. அதற்காக தேர்தல் விதிகளில் பாஜக திருத்தம் மேற்கொள்ள வேண்டியது தானே?. பொதுவான மேடை, பொதுவான பிரச்சாரம், தொலைக் காட்சிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள். 10 நாட்களே போதும். ஒரு வாரத்திற்குள் ஒரு மாநிலத்திற்குள் தேர்தல் நடத்துங்கள். அப்படி என்றால் தேர்தல் செலவுகள் குறையும். அதன் மூலம் ஊழலும் குறையும். அந்த ஒரு சரியான பாதைக்கு நாம் செல்வதே இல்லையே. அப்படி என்கிறபோது அரசியல்வாதிகள் பணம் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாத்திற்கு செல்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவுக்குள் அழுத்தம் கொடுப்படுவது உண்மைதான். அவருடன் உடனிருக்கும் தங்கமணியோ, வேலுமணியோ அடுத்த தேர்தலில் வெற்றிபெற பாஜக வாக்குகள் தேவைப்படுகிறது. அண்ணாமலை வருகைக்கு பின்னர் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அப்போது அதிமுக வாக்குகள் இருந்தால் வெற்றி பெறலாம் என்கிற கணக்கு பாஜகவிலும் பலருக்கும் உள்ளது. இதேபோல் அதிமுக வாக்குகள் இருந்தால் வெற்றி பெறலாம் என்கிற எண்ணம் பாஜகவிலும் பலருக்கும் இருக்கிறது. அதனால் அவர்கள் காய்களை இப்படிதான் நகர்த்துவார்கள். இதில் எடப்பாடி பழனிசாமியின் மிகப் பெரிய பிரச்சினை என்ன என்றால்? அவர் எந்த முடிவையும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்.
ஜெயலலிதாவாக இருந்தால் இப்படி அவர் செய்திருக்க மாட்டார். அவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகமாகும். விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அந்தரங்கத்தில் பேச்சவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்படி வந்தால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி போகாது. குறைந்தபட்சம் ஒரு திரைப்பட நடிகருக்கு இருக்கிற 8 முதல் 10 சதவீத வாக்குகள் என்பது அதிமுகவுக்கு போதுமானதாகும். ஆனால் அது வருமா? என்று நமக்கு தெரியாது. அரசியலில் அடுத்தக்கட்டம் என்பது இதுதான். திமுக அரசுக்கு நிறைய நெருக்கடிகள் வரும். அரசு என்றாலே நெருக்கடிகள் வரத்தான் செய்யும். ஆனால் பாஜக ஏவி விடுகிற நெருக்கடிகள் இதுவரை காங்கிரஸ் கூட அத்தகைய உத்திகளை கடைப்பிடித்தது கிடையாது. அமலாக்கத்துறை சூப்பர் போலிசாக செயல்படுவது மிகப்பெரிய சிக்கலாகும். அப்படிப்பட்ட நிலை வருகிறபோது திமுகவுக்கு சிக்கலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.