திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பது பாஜகவுக்கு புரிந்து விட்டதாகவும், டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதால் எந்த கட்சிக்கும் பயன் கிடையாது. கடந்த காலங்களில் தாங்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக பாஜக அதிமுகவை ஒருங்கிணைக்கும் வேலையை செய்வதால், அந்த கட்சியின் பார்வையில் இருந்து வரவேற்கலாம். கொஞ்சம் நஞ்சம் இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக போய்விட்டது. தற்போது அவர்கள் இல்லை என்றாகிவிட்டதால் பாமக, தலித் இயக்கங்களை உடன் வைத்துக்கொள்ளும் வேறு சூழலுக்கு அதிமுக போய் விடுவார்கள். இதனை எடப்பாடிக்கு புரியவைப்பதற்கு சில காரியங்களை செய்ததற்கு பிரதிபலனாக சரி கூட்டணியில் இப்போதே இருந்துகொள்ளுங்கள் என்று பாஜகவை சேர்க்கலாமே தவிர, அவர்களை சேர்ப்பதால் அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை என்கிற வாதம் தவறாகும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு.
திமுக கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கின்றபோது கட்டாயமாக கவனிக்க தகுந்த கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு உள்ளது. என்டிஏ கூட்டணி என்கிற பெயரில் பாமக ஏற்கனவே பாஜக அணியில் அங்கம் வகிக்கிறபோது, அதிமுகவுக்கு வேறு வழியில்லை. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக என வலுவான அணி அமைந்தால், அந்த கூட்டணியை எளிதில் கடந்துசென்றுவிட முடியாது. ஆட்சியின் மீது அதிருப்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடிவிட்டால் நிச்சயமாக திமுகவுக்கு சவாலாக அமையும்.
ஓபிஎஸ், தினகரன், அதிமுக ஓரணியில் சேர முடியுமா? என கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு திமுக கூட்டணியில் உள்ளவர்களே ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தவர்கள்தான். ஆனால் மதவாத எதிர்ப்பு என்ற பொதுநலனுக்காக இன்று ஓரணியில் உள்ளனர். அதேபோல், திமுகவை அழிக்க, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக என்று சொல்லி அவர்கள் ஓரணியில் திரளுவதில் ஆச்சரியம் இல்லை. சில கசப்புகளை மறந்துதான் ஆக வேண்டும். வைகோ எதற்காக இயக்கம் கண்டார் என்று எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் கூட்டணியை கூடா நட்பு என்று கலைஞர் சொன்னபோது, திமுகவினர் வெடி வெடித்ததை யாரும் மறுக்கவில்லை. இன்று எல்லோரும் ஒன்றுபட்டு ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று சொல்கின்றபோது, அதை எல்லாம் மறக்க வேண்டும். மக்களும் மறக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.
ஒன்றுபட்ட அதிமுக என்கிற புள்ளியை இன்றைக்கும் பாஜக கையில் வைத்துக்கொண்டுதான் உள்ளது. ஏனென்றால் திமுகவை வீழ்த்த தற்போதைய வடிவிலான அதிமுக போதாது என்று அவர்களுக்கு தெரியும். அதனை 2021 சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நிரூபித்துவிட்டன. 2 முறை வாய்ப்பு வழங்கி விட்டோம் இன்னொரு முறை நீங்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை கிளம்பி வாங்க என்று சொல்லிதான் டெல்லிக்கு வரவழைத்தார்கள். சில விஷயங்களை எடப்பாடி புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். அந்த புள்ளிக்கு அவர் வந்துவிட்டதாகதான் நினைக்கிறேன். வெட்கம் பார்த்தால் அரசியல் செய்ய முடியாது. அதிமுக உள்விவகாரங்களும் இந்த பயணத்தில் ஒரு விஷயமாக அலசப்பட்டது நிஜமாக இருந்தால், அது ஒரு வடிவத்திற்கு வந்த பிறகு வெளிப்படையாக அறிவிக்கப்படலாம். இதனை அவசப்பட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு பிறகு பேசலாம் என்று சொன்ன பிறகு ஜெயக்குமார் மாயமாகிவிட்டார். காரணம் தலைவரின் எண்ணம் அறிந்து பேசுவதான் தொண்டர்களின் கடமையாகும். இந்த கூட்டணி அமைகிறபோது, அதிமுவின் ஒற்றுமையும் சேர்ந்து நடந்தால் அதிமுக தொண்டர்களுக்கு இது உற்சாகம் தருகிற அரசியல் நடவடிக்கையாக இருக்கும். ஆனால் யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்று சொன்னால் தொண்டர்களுக்கு அது எரிச்சலைதான் தரும். தொண்டர்களின் மனநிலையை கவனிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது. ஒருகாலும் சேர்க்க மாட்டேன் என்று திரும்ப திரும்ப சபதம் போட்டுக் கொண்டிருந்தார் என்றால், பாஜக – அதிமுக கூட்டணி அமைந்தால் ஒரு பயனும் கிடையாது.
ஒன்றுபட்ட அதிமுக என்று சொல்கிறபோது கொள்கைகளுக்கு இடமில்லை. அவர்களும் ஜெயலலிதா விசுவாசிகள் தான். ஒபிஎஸ் எடப்பாடிக்கும் உயர் பதவியில் இருந்தவர். எடப்பாடியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் முழுக்க முழுக்க பின்னணியில் இருந்து இயக்கியவர் டிடிவி தினகரன். இவை எல்லாம் எடப்பாடிக்கு புரியும் அல்லது புரிய வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும். அதனுடைய தொடக்கப்புள்ளிதான் டெல்லி விஜயம். இந்த டெல்லி பயணம் மூலம் அதிமுக ஒருங்கிணைப்பு நல்ல திசையை நோக்கி பயணிக்கிறது. ஆனால் ஒன்றுபட்ட அதிமுக என்கிற அந்த புள்ளியை ஏதே ஒரு நிர்பந்தம் காரணமாகவோ, சூழல் காரணமாகவோ தவிர்த்துவிட்டு இந்த அணி அமைந்தால் 2 கட்சிகளுக்கும் பயன்படாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.