சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு திருச்சி சவுந்தர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிஓட்டர் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. அந்த இடமாவது கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டும். என்றைக்கு பாஜக உடன் போய் சேர்கிறார்களோ. இருப்பதை இழப்பதற்கு தயாராகி விட்டனர். அவர்களுடைய நோக்கம் எல்லாம் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதோ இல்லை. கட்சியை வைத்துக்கொண்டு தங்களுடைய வழக்குகளில் இருந்து மீளவும், கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவும் பயன்படுத்துகிறார்கள். அதற்காக இன்றைக்கு ஓடோடி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார். கட்சியை பற்றி கவலை பட்டிருந்தால் தங்களை தியாகம் செய்து கொண்டு, அவர்கள் கட்சியின் புனித தன்மையை காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். கட்சியை பலி கொடுத்து தன்னை காப்பாற்ற அவர் தயாரானாபோது, அது 3 வது இடமாக இருந்தால் என்ன 4வது இடமாக இருந்தால் என்ன?
4 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த மரியாதை வேறு. அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு அவருக்கு உள்ள மரியாதை வேறு. காரணம் அவர் போய் கூவத்தில் குளிக்க தயாராகிவிட்டார். அதன் பிறகு அவர் எந்த கங்கை தண்ணி போட்டாலும் அவரை சுத்தப்படுத்த முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது. பாஜகவை நம்பி எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அவர் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு, காலடியில் போய் விழுந்துவிட்டார். மக்கள் ஒன்றும் விவரம் தெரியாதவர்கள் அல்ல. அவர்களுக்கு எதற்காக எடப்பாடி டெல்லி சென்றார் என்று தெரியும். இவர் பாஜக உடன் சேராமல் இருந்தால் ஒருவேளை அவருக்கான வாய்ப்புகள் இருக்கும். அதனை தன்னுடைய சுயநலத்திற்காகவும், தன்னுடைய மகன் செய்த தவறுக்காவும், தன்னுடைய சம்பந்திகள் செய்த தவறுகளுக்காக அமித்ஷாவிடம் அடிமை ஆவதை விட எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை. அதனால் அதிமுகவை அடகு வைத்துவிட்டார். இந்த இயக்கம் அழிந்துவிட்டது. என்றைக்கு இவர்கள் எல்லாம் டெல்லிக்கு போய் சன்னிதானத்தில் விழுந்தார்களோ அன்றைக்கே இந்த இயக்கம் அழிந்துவிட்டது.
அதனால் தான் கட்சியில் ஆரம்பம் முதலே இருந்த செம்மலை, ஜெயக்குமார் போன்றவர்கள் சீறியுள்ளனர். இன்னும் அவர்கள் போல பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளியே வந்து தூய்மையான அதிமுகவை நாங்கள் கொண்டு வருவோம் என்று சொல்வார்களேயானால், இந்த தொண்டர்கள் அவர்களை பக்கத்தில் இருப்பார்கள். மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்வீர்கள். 1980களில் எம்ஜீஆர் ஊரெல்லாம் சுற்றிப்பார்த்தார் ஒன்றும் ஆகவில்லை. 2 எம்பிக்கள் தான் வெற்றி பெற முடிந்தது. அதேபோல் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போய் தோற்று போனதும் இந்த சின்னத்தை வைத்துதான். சின்னத்திற்கு கொஞ்சம் மரியாதை உள்ளது. ஆனால் அதுவே வாக்குகளை வாங்கி தரும் என்றால், பிறகு நிர்வாகிகள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள். சின்னத்தை பார்த்து மக்கள் ஏமாறுகிற காலம் மாறிவிட்டது. சின்னத்திற்கு ஒரு முடிவு ஏற்படபோகிற காலம் வந்துவிட்டது.
எம்ஜிஆருக்கு நிகர் யாரும் இல்லை. திமுக இயக்கத்தின் கருத்துக்கள் எந்த இடத்திற்கு சென்று சேராமல் இருந்ததோ. அதை பூர்த்தி செய்தவர். அதனால்தான் அண்ணா அவர்கள், எம்ஜிஆரை இதயக்கனி என்று பாராட்டினார். அண்ணா பல்வேறு முறைகளில் திமுகவை வளர்த்து வந்தபோதும், குடிசை பகுதிகளில் இயக்கம் வளரவில்லை. அந்த இடத்தை பிடிப்பதற்கு சரியான ஆளாக எம்ஜிஆரை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக தான் அந்த இயக்கம் பெருவாரியாக வளர்ந்தது. எம்ஜிஆர் இருந்த காலம் வேறு, இன்றைக்கு விஜய் இருக்கும் காலம் வேறு. அன்றைய தினம் வலிமையான எதிர்க்கட்சிகள் இருந்தன. அன்றைய தினம் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி இருந்தது. இன்றைக்கு அப்படி எந்த இயக்கமும் இல்லை.
அதிமுக டெல்லிக்கு சென்றபோதே அழிந்துவிட்டது. அதிமுகவினர் பலர் குமுறிக் கொண்டுதான் உள்ளனர்.1982ல் அதிமுகவில் ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்த போதே, நான் அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டேன். எடப்பாடி பழனிசாமியும், அவருடன் உள்ளவர்கள் அனைவரும் லட்சியத்தை, கொள்கையை விட்டு விட்டு பணத்திற்கு பின்னால் போய்விட்டார்கள். அவர்களே ஒரு தற்கொலை முடிவாக சசிகலா காலில் விழுந்து பிடித்த ஆட்சியை அமித்ஷா காலில் விழுந்து அடக்கம் செய்துவிட்டார்கள், இவ்வாறு அவர் கூறினார்.