கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே !
திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களும் மிகவும் முக்கியமானவை. மனித சமூகத்திற்கு வழிகாட்டக்கூடியவை.
அதில் எனக்கு மிகவும் பிடித்த மிக மிக முக்கியமான குறள், வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய குறள் எது?
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
இந்த குறளின் சிறப்பு என்னவென்றால், எந்த இடத்திலும் துணைக் கால், நெடில் எழுத்துக்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பது.
திருவள்ளுவர் இந்த குறளுக்கு மட்டும் அப்படிப்பட்ட சிறப்பு தகுதியை வழங்கியது ஏன்?
மனித சமுதாயம் ஆண்டாண்டு காலமாக ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்ந்து வருகிறது. துணை இல்லாத வாழ்க்கை துயரத்தில் மூழ்கி சிரமப்படும். அதனால் வாழ்க்கை துணை அவசியமானது. ஆனால் வள்ளுவர் இந்த குறள் மூலமாக சொல்ல வருவது என்னவென்றால், ஒருவர் கற்றுக் கொண்ட கல்வி மட்டுமே அவர் வாழ்நாள் முழுவதும் கால் போல் துணையாக வரும். மற்றவை இடையிலேயே இல்லாமல் போய்விடலாம். கல்வி இருந்தால் எவரையும் சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் எழுதியிருக்கிறார்.
அதுவும் எப்படிப்பட்ட கல்வியை கற்க வேண்டும்?
“கற்க”
ஒருவர் படித்தே ஆகவேண்டும்.
அதை “கசடு அற“ கற்க வேண்டும்.
ஒருவர் ஆரம்பத்தில் படிக்க தொடங்கும் போது கசடு வரும். கசடு என்றால் அழுக்கு. அறிவுக்கு புறம்பான, மனித சமூகத்திற்கு எதிரான, வாழ்க்கைக்கு ஒத்துவராத கருத்துக்கள் எல்லாம் ஆரம்பத்தில் வரும். அந்த கசடு களிலே தேங்கி வாழ்கை நின்றுவிடாமல் “கசடு அற” கற்க வேண்டும்.
அதன் பின்னர்
”கற்பவை”–
மனித சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தாத, சுதந்திரமாக சிந்திக்கின்ற ஆற்றலைத் தருகின்ற கல்வியை கற்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வியை “கற்றப்பின் நிற்க அதற்குத் தக” எதை ஒன்றை தெளிவாக கற்றுக் கொண்டாயோ அதையே வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்…
ஒருவருக்கு கல்வி மிகவும் முக்கியமானவை. அதை அவர் தெளிவாக கற்றுக்கொண்டு அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கூடியவர்களுக்கு துணை கால் போன்ற மற்றவருடைய உதவியை எதிர்பார்த்து வேதனைப்பட வேண்டிய அவசியமில்லை எனற பொருளில் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.