Homeசெய்திகள்கட்டுரைஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் - என்.கே.மூர்த்தி

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் – என்.கே.மூர்த்தி

-

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் - என்.கே.மூர்த்தி

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் 
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மின்சாரம் தேவையின் அளவு 18 ஆயிரம் மெகாவாட். கோடை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்துவதால் அப்போது 20 ஆயிரம் மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள வட சென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 5ல் ஒரு பகுதி மட்டுமே. அதாவது 20 சதவீதம் மட்டுமே மாநில அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுபோக மத்திய அரசு மின் தொகுப்பில் இருந்து 7,170 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. மீதமுள்ள 8,510 மெகாவாட் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்து வருகிறது.

தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாங்கி மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் தற்போது 2 கோடியே 47 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் இருக்கிறது. இதில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடி என்று அரசு கணக்கு சொல்கிறது. மீதமுள்ள ஒரு கோடியே 47 லட்சம் பயனாளர்கள் மட்டுமே மின் கட்டணம் உயர்வால் பாதிக்கப்படுவதாகவும் அரசு கூறுகிறது.

மின்கட்டணம் அதிகரிப்பு விபரம்

ஒரு யூனிட் முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்பாட்டிற்கு ரூ.4.60 இருந்து ரூ 4.80 (20 பைசா) என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.15 ல் இருந்து ரூ.6.45 (30 பைசா) உயர்ந்துள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8.15 விருந்து ரூ 8.55 (40 பைசா) ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20 ல் இருந்து ரூ 9.65 (45 பைசா) ஆகவும், 801-1000 யூனிட் வரை ரூ 10.20 ல் இருந்து ரூ 10.70 (50 பைசா) ஆகவும், 1000 யூனிட் டிற்கு மேல் ரூ. 11.25ல் இருந்து ரூ 11.80 (55 பைசா ) ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டணம் உயர்வினால் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடியில் இருந்து ரூ 22 ஆயிரம் கோடி வரை கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் மின்வாரியத்தின் கடன் சுமை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் - என்.கே.மூர்த்தி

மின்வாரியத்தின் கடன்
கடந்த 2011-2012 ம் ஆண்டில் ரூ.43.493 கோடியாக கடன் இருந்தது. அதற்கு ரூ.4.588 கோடி வட்டி கட்டப்பட்டது.

2021-2022 ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடியாக கடன் அதிகரித்தது. தற்போது ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அதற்கான வட்டி ரூ. 16. 511 கோடி அதிகரித்து உள்ளது. இப்படி தொடர்ந்து மின்சார வாரியம் கடன் சுமையில் மூழ்கி போய் உள்ளது.

கடன் சுமைக்கு காரணம்
தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக மின்சாரத்தை தயாரித்து வந்ததை படிப்படியாக குறைத்து தனியாரிடம் வாங்கும் கொள்கையை அமுல்படுத்தியதால் மின் வாரியமே மூழ்கும் நிலையில் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2000 ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்த மின்சாரம் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தை வைத்து தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

புதிய மின்சார சட்டத்தை கொண்டு வந்ததால் தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்வதை கொள்கையாக வகுத்தனர். அதுவே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணம். தற்போது தனியாரிடம் இருந்து 40 சதவீதம் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகின்றனர். தனியாரிடம் ஒப்பந்தம் போடும் வாரியத்தின் உயர் அதிகாரிகள் கோடிக் கணக்கில் ஊழல் புரிந்து வருகிறார்கள்.

தமிழகத்திற்கு தினம் 18 ஆயிரம் மெகாவாட் தேவை இருக்கிறது. (ஒரு மெகாவாட் என்பது ஆயிரம் யூனிட். அதாவது தினமும் 1,80,00,000 யூனிட் மின்சாரம் தேவை) அதில் மாநில உற்பத்தி, மத்திய தொகுப்பு 11,490 மெகாவாட் கிடைக்கிறது. பற்றாக்குறையாக தனியாரிடம் 6,510 மெகாவாட் (6,510,000 யூனிட்) மின்சாரம் வாங்கப்படுகிறது. இதில் சிறிய அளவில் கையூட்டாக பெறமுடியும் என்றாலும் ஊழல்வாதிகளுக்கு தங்கச் சுரங்கமாக மாறிவிட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் ஒரு யூனிட் மின்சாரத்தின் அடக்க விலை ரூ1.90 முதல் ரூ 2.20 வரை செலவாகிறது. ஆனால் தனியாரிடம் இருந்து ரூ 6 முதல் ரூ20 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போடப்பட்டு மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டனர்.

மின்வாரியத்தின் கொள்கையை அடியோடு மாற்றிவிட்டு, தனியார் உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யும் படியான கொள்கையை கொண்டுவந்தால் மட்டுமே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொத்துக்களை பாதுக்காக்க முடியும். தவறினால் மொத்த வாரியமும் விரைவில் தனியாரிடம் பறிப்போய் விடும்.

MUST READ