Homeசெய்திகள்கட்டுரைஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

-

- Advertisement -

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர். ஆனால் அவர்களுக்கு சித்தாந்த ரீதியாக இடையூறாக இருந்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நேர் எதிர் கொள்கைகளை, கருத்தியலை கொண்ட இயக்கம் திராவிட இயக்கங்கள். அதற்கான கொள்கை தலைவர் தந்தை பெரியார்.

திராவிட இயக்கங்களும், தந்தை பெரியாரின் கோட்பாடுகளும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாது என்கிற புரிதலுக்கு ஆர்.எஸ்.எஸ்.- பாஜக வந்துவிட்டது.

அதனால் ஆரியமா – திராவிடமா? என்று நடந்து வந்த வரலாற்று ரீதியான சித்தாந்த போரை தற்போது மணியரசன், சீமானை பயன்படுத்தி திராவிடரா – தமிழரா என்று மடைமாற்றம் செய்து வருகின்றனர். இதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி, எச். ராஜா, ரங்கராஜ் பாண்டே போன்ற ஆரியர்கள் நேரடியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதலில் ஆரியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன என்கிற புரிதல் மணியரசனுக்கும், சீமானுக்கும் நன்கு தெரியும். அவர்கள் தெரிந்தே வரலாற்று பிழையை செய்து வருகிறார்கள்.

ஆரியம் என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கின்ற சனாதன கோட்பாடுகளை கொண்டது. சாதியை மையமாக வைத்து சமூக கட்டமைப்பை உருவாக்கியது ஆரியம். அந்த கோட்பாட்டின் படி குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் கல்வி கற்க வேண்டும். எல்லோரும் கல்வி கற்க, கோயிலுக்கு செல்ல கூடாது. பெண்களை விட ஆண்கள் மேலானவர்கள். பெண்களுக்கு கல்வி, சொத்தில் சம உரிமை எதுவும் கிடையாது என்கிற சனாதன கோட்பாட்டை கொண்டது ஆரியம்.

திராவிடம் என்பது ஆரியத்திற்கு நேர் எதிரானது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துவது திராவிடம் . 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தப் பின்னர் தான் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அனைத்து சமூகத்தினரும் கல்வி கற்க முடிந்தது. 1989 இல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் மணியரசனும், சீமானும் திட்டமிட்டு திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ன செய்தது? பெரியார் தமிழரா? என்று பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. அவரை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் அவர் பேசாததை பேசியதாக பொய்யான கருத்தை கூறி அவதூறை பரப்பி வருகின்றனர்.

திராவிடம் என்பது மரபினம் என்றும் தமிழர் என்பது தேசிய இனம் என்றும் பலமுறை விளக்கம் கொடுத்தாலும் எதையும் புரிந்து கொள்கின்ற நிலையில் சீமானும், மணியரசனும் இல்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் சென்னை மாகாணத்தில் இருந்தபோது அதை திராவிட நிலப்பரப்பு என்று அயோத்திதாசர் பண்டிதர் முதல் பல அறிஞர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். திராவிடம் என்கிற மரபினத்திற்குள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற பல தேசிய மொழி இனங்களை உள்ளடக்கி இருந்தது. புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் திராவிடம் என்றால் தமிழ்தான், திராவிட நாடு என்றால் தமிழ்நாடுதான் என்று கவிதை எழுதி பெரியாரின் பெரும் தொண்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

இதுபோன்ற எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தற்போது ஆர்எஸ்எஸ், பாஜக வலையில் சிக்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியாரின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார். ஆர்.எஸ்.எஸை பொருத்தவரை சீமானை வைத்து பெரியாரை தாக்குவது, பெரியாரின் பிம்மத்தை சிதைப்பது என்பது அவர்களின் தொலைநோக்கு திட்டம். அதில் பெரியாருக்கு எதிராக எந்த அளவிற்கு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவிற்கு செய்வது. இறுதியில் சீமான் வென்றாலும் அல்லது பெரியார் வென்றாலும் அது ஆர்எஸ்எஸிற்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ்- பாஜகவின் முதல் செயல் திட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை மட்டும் நேரடி களத்தில் இறக்கியுள்ளது. பெரியாரின் சொந்த மண்ணில் அவரை எந்த அளவிற்கு தாக்கி அவதூறு பரப்ப முடியுமோ அந்த அளவிற்கு செய்வது. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? பெரியாருக்கு எதிரான அவதூறுகள் வாக்குகளாக மாறுமா? அல்லது பெரியாருக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுக்கிறார்களா என்று ஆழம் பார்க்கவே இந்த தேர்தல்.

ஆரியத்திற்கு ஆதரவான வேலையை சீமான் சிறப்பாக செய்து வருகிறார். அதேபோன்று ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ், பாஜக, நாதக என்கிற இந்த புதிய கொள்கை கூட்டணியில் கடந்த தேர்தலை விட சீமானுக்கு அதிக வாக்குகளை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு வேளை இந்த இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைத்து விட்டால் 2026 தேர்தலில் திமுக விற்கு அதிக நெருக்கடி கொடுப்பதே ஆர்எஸ்எஸின் நோக்கம். அந்த நெருக்கடி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

MUST READ