பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அமல்படுத்தாத பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும் யுஜிசி அண்மையில் புதிய விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்படும் தேடுதல் குழுவில் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டு, ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் விதமாக புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. புதிய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், யுஜிசி சார்பில் ஒருவர், ஆளுநர் சார்பில் ஒருவர், பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் நியமிக்கப்படுவர். மேலும், தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநரால் நியமிக்கப்படும் நபர் செயல்படுவார். முன்பு மாநில அரசால் நியமிக்கப்படும் நபர் தான் தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். தற்போது தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான தகுதிகளிலும் யூஜிசி முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. முன்பு பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்க, பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித் துறை, பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர் பொறுப்பில் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, கல்விக்கு சிறப்பான பங்களிப்பை நல்கி இருக்கும் நபர்களை, துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 55 சதவீத மதிப்பெண்களுடன் எம்.இ. மற்றும் எம்.டெக் பட்டங்களை பெறுவோரை, நேரடியாக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கலாம் என்றும், அதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாத பல்கலைக் கழகங்களில் யுஜிசி அமைக்கும் விசாரணைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அதில் புகார் உறுதி செய்யப்பட்டால் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் அந்த பல்கலைக் கழங்களுக்கு பட்டம் வழங்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, யூஜிசியால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் இணையவழி வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்படும். விதிமீறலை பொருத்து கூடுதல் தண்டனைகள் வழங்கலாம் என்றும் யூஜிசியின் புதிய விதிகள் குறிப்பிட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யூஜிசியின் புதிய விதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த தீர்மானத்தில், பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த 2 வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளுக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துணை வேந்தர் நியமனம் தொடர்பான விதிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை துணை வேந்தராக நியமிக்க வழிவகுக்கும் என முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி, கேரள அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
யூஜிசி புதிய விதிமுறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அரசு தனி தனி சட்டங்களை இயற்றி 13 பல்கலைக் கழகங்களை உருவாக்கி வைத்துள்ளதாகவும், எனவே யூஜிசியின் இந்த விதிகளைவிட தமிழக அரசு இயற்றியுள்ள சட்டம்தான் செல்லும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்று சொல்வதற்கு யுஜிசிக்கு அதிகாரம் இல்லை என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சட்டப்படி மாநில அரசுக்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திய பின்னர் தான், நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.