Homeசெய்திகள்கட்டுரைஅரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

-

- Advertisement -

பொன். முத்துராமலிங்கம்
முன்னாள் அமைச்சர்
கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்

அரசியல் சட்டப்படியும், தார்மீக இயற்கை நீதியின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

இந்திய அரசியல் சட்டப்படி மாநில ஆளுநர்கள் குடியரசுத்தலைவரால் பணியமர்த்தப்படுகிறார்கள்(appointed). மேலும், தொடர்புடைய மாநிலங்களில் பொறுப்பேற்கும் ஆளுநர்கள் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள். அந்த உறுதிமொழியின் படி தொடர்புடைய மாநில மக்களின் நல்வாழ்விற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றும், அரசியல் சட்டத்தை எல்லாவகையிலும் பாதுகாக்க வேண்டிய கடமையை முறையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

ஆனால்,  தமிழ்நாட்டினுடைய ஆளுநர் ஆர்.என். ரவி, தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையும்,  தனக்கென அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரவரம்பின் எல்லைகளையும் மீறி, தான் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் தொடங்கி, ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், அந்தக் கட்சிக்கு சித்தாந்த ஆலோசனைகளை வழங்கும் இராஷ்டிரிய சுயம் சேவக் சாங் அமைப்பிற்கும் தமிழ்நாட்டின் முகவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே அல்லாமல், தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளை கிஞ்சிற்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவாகவே அறிவார்கள்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் முதல்வராக மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், வெற்றிகரமாகச் செயல் படுத்திக் கொண்டிருக்கும் “திராவிட மாடல் ஆட்சி இன்று இந்திய ஒன்றியம் முழுமையும் பிரதிபலிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிற மாநில அரசுகளும் ‘திராவிட மாடல் ஆட்சியின் புரட்சிகர சட்டங்களையும், புதுமையான திட்டங்களையும் பின்பற்றி தங்கள், தங்கள் மாநிலத்தில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வழித்தடம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைக் கண்டு எரிச்சல் அடைந்த பாரதிய ஜனதாக் கட்சியின் ஒன்றிய ஆட்சியினர் ஆளுநர் ரவியின் மூலமாக தமிழக அரசினுடைய சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்குவதில் காலதாமதப்படுத்துவதும், நிரந்தரமாகத் தடுப்பதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர், மாண்புமிகு தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும் ஆளுநர் ரவியின் “சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறியும். எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. உச்சநீதிமன்றமும், ஆளுநர் ரவியின் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதோடு தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் இணக்கமான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியும், ஆளுநருடைய நடவடிக்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

ஆளுநர் ரவியின் எதேச்சதிகாரப் போக்கு தொடர்ந்த நிலையில், தமிழக அரசின் சார்பாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 08/04/2025ம் தேதி இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அனைத்து மாநிலங்களுக்கும் புதிய வெளிச்சமும், விளக்கமும் தரக்கூடிய ஓர் வரலாற்றுத் திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு குறித்து இந்து ஆங்கில நாளிதழ் விரிவான தலையங்கம் தீட்டியுள்ளது. (The Hindu. Date: 10.04.2025)

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடியரசுத் தலைவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள், அந்தந்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும், இந்தப் பிரச்சினைகள் இந்திய அரசியல் அரங்கத்தில் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் சூழலில், இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவுகட்டி, தீர்வுகாணக்கூடிய வரலாற்றுத்திருப்புமுனைத் தீர்ப்பாக உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியிருப்பதன் மூலம், எந்த ஒரு மாநிலத்தின் ஆளுநரும் அரசியல் சட்டத்தினுடைய வரையறைகளுக்கு உட்பட்டவர்களேயல்லாமல், அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்பதை உறுதிபட உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி காலதாமதப்படுத்தி  நிறுத்தி வைத்திருந்த பத்து மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி கொடுத்த விளக்கம் என்பது. “காலதாமதப்படுத்தி நிறுத்தி வைத்தாலே அந்த மசோதாக்கள் காலாவதியாகி விட்டது” என்றுதான் அர்த்தம் என ஆணவத்தோடு விளக்மளித்தார். ஆனால், அப்படிப்பட்ட அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆளுநரால் காலதாமதப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் அரசால் நடத்தப்படுகின்ற பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் நியமனங்கள் குறித்ததாகும். இது குறித்த ஆளுநரின் நடவடிக்கை முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல, அரசியல்  சட்டப்படி முற்றிலும் தவறானதும் கூட என்று உச்சநீதிமன்றத்தினுடைய அமர்வு எச்சரித்திருக்கிறது.

மேலும், இந்திய அரசியல் சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியிருக்கின்ற சிறப்பு அதிகாரத்தைப்(Article 142) பயன்படுத்தி ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தால் இரண்டாவது முறையும் நிறைவேற்றப்பட்டு விட்டமையால், அந்த 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாகவே கருதப்பட்டு, சட்டங்களாக அமல்படுத்தப்படும் என்ற உச்சநீதிமன்றத்தினுடைய இந்தத் தீர்ப்பு ஆளுநருடைய அதிகாரத்தையும், நடைமுறைகளையும் வரையறுத்திருக் கிறது.

இந்தத் தீர்ப்பு, தமிழ்நாடு அரசு. ஆளுநர் மூலமாக எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் இந்தப் பிரச்சினைகளில் ஆளுநர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற் கான வழிகாட்டும் நிபந்தனைகளாக உள்ளது என்பதில் ஐயப்பாட்டிற்கு இடமில்லை.

(The verdict enhances the administrative autonomy of States, and regulates the functioning of constitutional offices, with implications for the entire country).

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஆளுநரை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் இனி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கின்ற மசோதாக்களை தன்னுடைய விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பொறுப்பற்ற காரணங்களைச் சொல்லி நிராகரிக்கக் கூடாது என்றும், குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ள உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது இந்தியா முழுமையும் உள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய வழி காட்டுதலாக அமைந்துள்ளது.

(The significance of the judgment goes beyond the censure of a particular Governor. It lays down definite timelines for Governors to act on Bills. It ensures that Governors can no longer indefinitely delay legislation under the pretext of scrutiny or act whimsically or with impunity. The Court has reaffirmed a constitutional principle that has often been undermined: that Raj Bhavans must function with transparency, and accountability).

உச்சநீதிமன்றத்தினுடைய இந்தக் கடுமையான கண்டனத்திற்கு பின்னரும், ஆளுநர் தன் பொறுப்பில் தொடர்வது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த பொறுப்புக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

இந்து தலையங்கம், உச்ச நீதிமன்றத்தினுடைய இந்தத் தீர்ப்பு என்பது நீதித்துறையில் ஓர் மைல்கல் என்பதோடு மட்டுமல்லாமல், இந்த தீர்ப்பின் மூலம் அரசியல் சட்டத்தை ஆளுநர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற ஒழுக்கத்தையும், ஒன்றிய அரசிற்கும், மாநிலங்களுக்கும் இடையேயான கூட்டுறவுக் கூட்டாட்சி முறைக்கு கிஞ்சிற்றும் தீங்கு விளைவிக்கின்ற நடவடிக்கையில் ஆளுநர்கள் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் அரசியல் சட்டத்தினுடைய வரன்முறைகளையும், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கோட்பாடுகளை முற்றிலும் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நிராகரித்துவிட்ட ஆளுநர் ஆர்.என். ரவி. இனி ஒரு நொடிப் பொழுது கூட அந்தப் பொறுப்பில் தொடர்வது எந்த வகையிலும் நியாயமான தல்ல. அப்படியே, மலுமட்டைத்தனமாக ஆளுநர் ரவி அந்தப் பொறுப்பில் தொடர்வாரேயானால், ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் நலன் கருதி ஆளுநர் ரவியை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் குரலாக தமிழகம் முழுமையும் எதிரொலிக்கிறது.

                                                                                                நன்றி முரசொலி.

 

ஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர் வில்சன்!

MUST READ