அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித் ஷா அறிவித்துள்ளதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு மற்றும் அண்ணாமலை பதவி பறிப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அதிமுக – பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிதான் வெற்றி பெற்றிருக்கிறார். தற்காலிகமாக அமித்ஷா தோல்வி அடைந்திருக்கிறார். அமித்ஷா பேசும்போது, எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி என்று சொல்கிறார். அப்படி என்கிறபோது எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர். அதிமுக பெரும்பான்மை இடங்களில் நிற்கும். தனித்தே நிறைய இடங்களை பிடித்தால், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக அதிகாரத்தை பங்குபோட கொள்கை அளவில் எந்த மாற்றத்தையும் அதிமுக கொண்டுவர வில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளை பாஜக ஏற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டும் என அவர் விரும்பினார். அதுபோலவே அமித்ஷா அறிவித்துவிட்டார். ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க சொன்னார்கள். ஆனால் சேர்க்க மாட்டேன் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். அமித்ஷாவும் மற்றவர்களின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிவிட்டார். இதன் மூலம் ஓபிஎஸ்-ஐ பாஜக கைவிட்டு விட்டது.
எடப்பாடியின் மற்றொரு கோரிக்கை அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதாகும். அதேபோல், அண்ணாமலையை கட்சியில் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால் அவரை தென் மாநில பொறுப்பாளராக போடுவதாக தகவல் வந்தது. அதனால் தான் எடப்பாடி, அமித்ஷாவை சந்திக்க தாமதம் செய்தார். அதற்கு பிறகு அதுவும் கிடையாது. நாங்கள் டெல்லிக்கு தேசிய அரசியலுக்கு கொண்டுசெல்லப் போகிறோம். தமிழ்நாட்டிற்கும் அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று சொன்ன பிறகுதான் எடப்பாடி சந்திப்புக்கு ஒப்புக்கொண்டார். அதிமுக தரப்பில் பாஜக உடன் கூட்டணி போகக்கூடாது என்று எதிர்ப்பு உள்ளது. அவர்களை எல்லாம் சமாதானப்படுத்த நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றியாக வேண்டும் என்று எடப்பாடி தெளிவாக சொல்லிவிட்டார். அதனால் பாஜகவுக்கு வேறு வழியில்லை. இதனால் நிபந்தனைகளுக்கு தற்காலிகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி மௌனமாகவே இருந்தார். எதற்காக அவர் மவுனமா இருந்தார்? இன்னும் அவருக்கு பல நிபந்தனைகள் இருக்கலாம். தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் இறுதி செய்யப்படாமல் இருக்கலாம். தொகுதிகளை நாங்கள் தான் பங்கிட்டு வழங்குவோம் என்று சொல்லி இருக்கலாம். இன்னும் அதெல்லாம் இறுதியாகவில்லை. கூட்டணிக்கு வேறு யார் வருவார்கள் என்றும் தெரியவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி மவுனம் காக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக – பாஜக கூட்டணி வலிமையானதாகவும், திமுக கூட்டணிக்கு கடும் போட்டி அளிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கு இந்த 2 கட்சிகள் மட்டும் போதாது. பாமக, தேமுதிக சேர்ந்தால் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி அளிக்கலாம்.
அண்ணாமலை நீக்கத்திற்கு எந்த நிபந்தனையும் காரணம் இல்லை என்று அமித்ஷா சொல்கிறார். எடப்பாடி தலைமையில் கூட்டணி. ஓபிஎஸ்-ஐ சேர்க்க மாட்டோம். அண்ணாமலை மாற்றம் போன்றவை எல்லாம் நிபந்தனைகள்தான். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். ஆனால் எடப்பாடி கூட்டணி ஆட்சிக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். அதிமுக அதிக இடங்களில் வென்றால் ஒருபோதும் கூட்டணி ஆட்சி அமைக்காது. அதனால் தான் இந்த செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார்.
அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட போகிறது என்ற உடன் அவர் டெல்லிக்கு சென்று அமித்ஷாவிடம் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் எல்லாம் செய்தார். ஒரு தொகுதியில் கூட அதிமுகவால் வெல்ல முடியாது என்று சொன்னார். எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக போட்டால் வெற்றி பெறவே மாட்டாம் என்றும் சொன்னார். ஆனால் பாஜக தலைமை கடந்த முறை அண்ணாமலையின் பேச்சை கேட்டு சென்றதால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை அறிந்துள்ளது. இதனால் இந்த முறை நீங்கள் ஒதுங்கி இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அமித்ஷா சொல்லிவிட்டார். பாஜகவுக்கு அதிமுகவை தவிர கூட்டணி அமைக்க வேறு வாய்ப்புகள் இல்லை. அதிமுகவுக்கும் மத்தியில் உள்ள பாஜகவின் தயவு தேவைப்படுகிறது. எடப்பாடி, வேலுமணியை வைத்துக்கொண்டு 39 ஆயிரம் கோடி ஊழல் என்கிறார். அவர்கள் இருவர் மீதுமே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
குருமூர்த்தி தான், இந்த கூட்டணிக்கு சூத்திரதாரியாக உள்ளார். தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு மாற்றாக யாரை வைக்க வேண்டும் என குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. முதலில் தென்னக பொறுப்பாளர் என்று லீக் செய்து பார்த்தார்கள். அப்படி என்றால் தமிழ்நாடும் அண்ணாமலையின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதனால் அண்ணாமலைக்கு அந்த பொறுப்பு கொடுக்கக்கூடாது. அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது அதுபோன்ற கட்சி பொறுப்பை கொடுங்கள் என்று சொன்னார். அதனால்தான் அண்ணாமலையை தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் அமித்ஷா டிவிட் போட்டார். அதனை தொடர்ந்துதான் எடப்பாடி பழனிசாமி உள்ளே வந்தார். இல்லை என்றால் அவர் வந்திருக்க மாட்டார்.
பாஜகவுக்கு என்ன திட்டம் என்றால் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி இருந்தால் இந்துத்துவா வாக்குகளை பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களை வென்றுள்ளார்கள். இந்த முறை திமுகவுக்கு எதிராக நிறைய ஊழல் புகார்களை கொண்டு வருவார்கள். இன்றைய அமித்ஷாவின் பேச்சில் இருந்தே தெரிகிறது அமலாக்கத்துறை போன்ற விஷயங்கள் எல்லாம் திமுக மீது வரும். திமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அரசுக்கு எதிரான வாக்குகளை பெறலாம் என்று திட்டமிடுகிறார்கள், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.