தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் அவர்தான் பேசப்படுவதாகவும், அவர் குறித்த சிந்தனைகள் அலசி ஆராயப்படுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
பெரியார், பிரபாகரன் ஆகியோரை சீமான் எதிர் எதிர் திசையில் நிறுவத்த முயற்சிப்பதன் சதி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு ஆளுர் ஷாநவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- திராவிடமா? தமிழ் தேசியமா? என்ற கேள்விக்கு இடமில்லை. அதேபோல் பெரியாரா? பிரபாகரனா? என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால் தமிழ் தேசியத்திற்கு எதிராக எந்த ஒரு இடத்திலும் திராவிட இயக்கங்கள் போகவில்லை. அதேபோல் பெரியாருக்கு எதிராக பிரபாகரன் எந்த ஒரு இடத்திலும் போகவில்லை. ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை செல்வா தந்தை பெரியாரை சந்தித்தபோது, பெரியார் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். நாம் இந்திய நாட்டு மக்களாக இருந்துகொண்டு, இன்னொரு நாட்டில் சென்று எப்படி விடுதலை போராட்டத்தில் ஈடுபட முடியும் என்ற எதார்த்தம் பெரியாருக்கு இருந்தது. அதே வேளையில் தார்மீக ரீதியில் தமிழ்நாட்டில் இருந்து ஈழப் போராட்டத்திற்கு என்ன என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளார். அதை ஒட்டிதான் திராவிட இயக்கங்கள் ஈழப் போராட்டத்தில் பெரிய பங்களிப்பை செய்துள்ளனர்.
அதுபோல தமிழ், தமிழ் அடையாளங்களை இவற்றை தூக்கிப் பிடித்து அதிகாரத்திற்கு வந்த திராவிட இயக்கங்கள், அதனை பயன்படுத்தி தமிழுக்கு செய்துள்ள நன்மைகளை யாரும் மறுக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார், துரதிர்ஷ்டவமாக உயிரிழக்க நேரிட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணாவால்தான், தமிழ்நாடு என்ற பெயரை நாம் அதிகாரப்பூர்வமாக பெறுகிறோம். தமிழ் தேசிய அடையாளத்தோடு அறவழி போராட்டம் நடைபெறும்போது, அந்த போராட்டத்தை உள்வாங்கி ஆட்சி அதிகாரத்தில் வெளிப்படுத்திய இயக்கம் திராவிட இயக்கமாகும். அப்படி ஒரு நிலை இருக்கும் போது சீமான் அவரது குறுகிய அரசியலுக்காக பெரியாரையும், பிரபாகரனையும் எதிர் எதிராக நிறுத்துகிறார். எங்காவது ஒரு இடத்தில் பிரபாகரன் திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசியுள்ளாரா?, திராவிடர் கழகத்தை எதிர்த்து பேசியுள்ளாரா?. பெரியாரின் கொள்கைக்கு எதிராக ஒரு பதிவு வெளி வந்துள்ளதா? நேச சக்திகளாக தான் இரு தரப்பும் பார்க்கிறது. அப்போது எங்கிருந்து சீமான் இதனை எடுக்கிறார்?.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று சொன்னவர் தந்தை பெரியார். மக்களை பார்த்து இழிவாகவோ, அறிவுக் கேடாகவோ அவர் பேசுவாரா? சாத்திரங்களில், புராணங்களில் ஒடுக்கப்பட்ட மக்களை இப்படி இழிவாக சொல்லியுள்ளார்கள் என அவர்களிடம் எடுத்து சொன்னார். சொன்னவர்களை விட்டு விட்டு எடுத்து சொன்னவர்கள் மீது பழிபோடுவது ஏன்?. சீமான் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார். சீமான் பெரியாரை கேள்வி கேட்டால், விமர்சித்தால் அதற்கான பதில் கிடைக்கும். ஆனால் அவதூறு பரப்பக் கூடாது. பெரியார் சொல்லாததை சொன்னதாக கூறிய சீமான் அதற்கான ஆதாரத்தை இதுவரை கொடுக்காதது ஏன்?. ஆனைமுத்து ஐயா பெரியாரின் சிந்தனைகள் என்ற தொகுப்பு வெளியிட்டுள்ளார். நீங்கள் சொன்ன கருத்து அதில் இல்லை, நெஞ்சுக்கு நீதியில் இல்லை, விடுதலையிலும் இல்லை. வேறு எங்கிருந்து ஆதாரத்தை எடுத்தீர்கள்?. அடுத்து பெரியார் கற்பப்பையை பிடுங்கி போட வேண்டும் என சொன்னதாக அவதூறு பரப்புகிறார். இப்போது கூறும் பெரியார் குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் முன்பு அவரே பதில் அளித்தவர் தான். பெரியாரின் நோக்கம் என்ன, சிந்தனை என்ன, எதற்காக அவர் தனது வாழ்வை ஒப்படைத்தார் என்பது அலசி ஆராயப்பட்டு விட்டது. அவர் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. இவை எல்லாம் பெரியார் நேற்று புதிதாக முளைத்து வந்து கூறியது அல்ல. தமிழை அவர் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது ஏன்? கர்ப்பப்பையை வேண்டாம் என சொன்னது ஏன்? முஸ்லீம்கள் குறித்து பேசியது என்ன? தலித்துகள் குறித்து பேசியது என்ன? என்று அனைத்தும் அலசி ஆராயப்பட்டு விட்டது. இந்த தலைப்புகளின் கீழ் தனித்தனியாக புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார், ஏனென்றால் அவர் ஒரு கன்னடர் என்று நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அப்படி சொன்ன பெரியார் எந்த இடத்திலும் தனது தாய்மொழியான கன்னடத்தை உயர்த்தி பிடித்தது இல்லை. மாறாக அவர் உலக மொழியான ஆங்கிலத்தை படியுங்கள் என்றுதான் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் ஆங்கிலத்தை வைத்து அறிவியலில் மக்கள் அடையும் வளர்ச்சியை பெரியார் காண்கிறார். ஆனால் தமிழில் கதை, கவிதை என பக்தி இலக்கியங்கள் படைத்துக் கொண்டிருந்தனர். இதனை வைத்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் அவர் எதார்த்தமாக யோசித்தார். இஸ்லாமியர்கள் குறித்த விமர்சனங்களை அவர்கள் மத்தியில்தான் சென்று வெளிப்படுத்தினார். அவர்கள் முன் உரையாடலைதான் முன்வைத்தார். இஸ்லாமிய அறிஞர்களுடன் நெருக்கமான நட்பை கடைபிடித்தவர் பெரியார்.
அவர் கம்பராமாயணம், திருக்குறள், புராணங்கள், இதிகாசங்களை கேள்வி எழுப்பினார் என்றால், அது குறித்து முழுக்க ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் கேள்வி எழுப்பினார். தற்போது மத்தியில் அதிகாரத்தை குவித்து வருகின்றனர். மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு உள்ளது. இன்று வரை இடஒதுக்கீட்டிற்காக போராடி கொண்டிருக்கிறோம். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை தடை போட்டது யார்? ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுமதி அளித்தது யார். அதற்கு உடனே குடியரசுத் தலைவர் அனுமதி வழங்குகிறார். அப்போது சீமான் யாரை நோக்கி கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
பெரியார், அண்ணா, கலைஞர் மீது விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் அவர்கள் பெரியாரிடம் போய்தான் நின்றனர். அனைத்து சாதியினரும அர்ச்சகர் ஆகலாம், சுயமரியாதை திருமணங்களுககு சட்ட அங்கீகாரம் என பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்தியதால், அவர்களுக்கு பெரியார் மீண்டும் ஆதரவளித்தார். காங்கிரசை எதிர்த்த பெரியார் காமராஜரை ஏன் ஆதரித்தார்? காரணம் ராஜாஜி பள்ளிகளை மூடினார். காமராஜர் பள்ளிகளை திறந்து குழந்தைகளுக்கு கல்வி வழங்கினார். அதனால் அவரை ஆதரித்தார். அவர் காங்கிரசை எதிர்த்ததற்கும், காமராஜரை ஆதரித்ததற்கும், திமுகவை ஆதரித்ததற்கும் என எல்லாம் மக்கள் மீதான நேயம்தான் காரணம். அவருக்கு எல்லா இடமும் மக்கள்தான். தனது இறுதிக் காலத்தில் இஸ்லாமியர்களை திட்டியவரும் பெரியார்தான். காயிதே மில்லத் மறைவின்போது இஸ்லாமியர்களை நினைத்து கண்ணீர் வடித்தவரும் பெரியார்தான். தனது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராக சென்றதால் முஸ்லீம் லீக்கையும், திமுகவையும் விமர்சித்தார். அவருடைய போராட்டம் காரணமாகதான் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
மா.பொ.சி எல்லைப் போராட்டம், மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் என தலைவர்கள் தங்களுடைய எல்லைகளுடன் நின்று கொண்டனர். ஆனால் பெரியார் சமூக ரீதியில் செயல்பட்டுள்ளார். தீண்டாமையை எதிர்த்து, சாதிக் கொடுமைகளை எதிர்த்து, பெண் அடிமைத் தனத்தை எதிர்த்து, வகுப்புவாரி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் பெரியார். ஒவ்வொன்றும் ஒரு சமுதாய மாற்ற இயக்கம். அதனை கட்டி அவருக்கு நிகராக யாரும் பயணித்தவர் இல்லை. அதில் உறுதியாக இருந்ததும் இல்லை. எல்லாவற்றுக்கும் ஏன் பெரியாரை சொல்கிறோம் என்றால், எல்லாவற்றுக்கும் அவர் தான் வந்து நின்றுள்ளார். அவர் அளவுக்கு சமுக பிரச்சினைக்களுக்காக சிறை சென்றவர் யார் உள்ளார்கள்? அப்படி ஒருவர் இருந்தால், சீமான் அவரை சொல்லி நீங்கள் பெரியாரை ஏன் சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம். சமுதாயத்திற்கு ஒவ்வொருவரும் அவரவர் அளவில் பங்களிப்பு அளித்துள்ளனர். ஆனால் பெரியாரின் பங்களிப்பு என்பது மிகபெரியது. பெரியார் எதையும் பேச தயங்கியது இல்லை. மக்களின் மொழியில் பேசிய ஒரு தலைவர் பெரியார். அவரை இழிவுபடுத்துவது என்பது அபத்தமானது. பெரியார் இறந்து 50 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் அவர்தான் பேசப்படுகிறார். விவாதிக்கப்படுகிறார். அவர் குறித்த சிந்தனைகள் களத்தில் அலசி ஆராயப்படுகிறது. போய் படித்தால் இந்த சமூகம் தெளிவு பெற்றுவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.