Homeசெய்திகள்கட்டுரைமாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

-

- Advertisement -

த.லெனின்

 

மாவீரன் பகத்சிங் ஒரு நாத்திகர் என்பதும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியும். 1929 ஏப்ரல் 9ஆம் தேதி பகத்சிங் அன்றைய மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையால் அவர் தேசிய அளவில் மாவீரனாகப் புகழ் உச்சியிலிருந்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இயக்கத்தின் மிகப்பெரும் தத்துவவாதியாகவும், தலைமறைவு இயக்கத்தில் ஒரு புரட்சிவாதியாகவும் பகத்சிங் கருதப்பட்டார்.மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

திடீரென 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவர் வாழ்ந்த இந்தக் குறுகிய காலத்தில் அவர் எடுத்துச் சொன்ன அரசியல் கொள்கைகளுக்கு பரவலான ஆதரவும் கிடைத்தது. அவரது விடுதலை உணர்வும் இளைஞர்கள் மத்தியில் காட்டுத் தீ போல வேகமாகப் பரவியது. நாட்டின் தென்முனையில் இருந்து வெளிவரும் குடியரசு என்ற தமிழ் வார இதழில் பகத்சிங்கைத் தூக்கில் போட்ட பிரிட்டிஷ் அரசின் செயலுக்குத் தெளிவான ஆனால் கடுமையான முறையில் எதிர்க்கருத்து வெளியானது.

தந்தை பெரியார் மார்ச் 29, 1931 இதழில் ஒரு தலையங்கம் தீட்டினார். காங்கிரசும், காந்தியாரும் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். பகுத்தறிவுக் கொள்கையினை ஏற்றுக் கொண்டிருக்கிற, ஒடுக்குமுறையினை எதிர்த்துப் போராடுகிற இளைஞர் பகத்சிங்கை, தன் உற்ற தோழனாகப் பெரியார் பார்த்தார். அவர் தனது தலையங்கத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதவர் எவருமில்லை; அவரைத் தூக்கிலிட்ட அரசாங்கத்தின் செயலைத் கண்டிக்காதவர் எவரும் இல்லை என்று தொடக்கத்திலேயே குறிப் பிடுகிறார்.

இந்தியாவிற்கு பகத்சிங்கின் கொள்கை தேவைப்படுகிறது என்பதுதான் எங்களின் அசைக்க முடியாத கருத்தாகும். பகத்சிங்கின் கொள்கைகள் சோஷலிசம் மற்றும் கம்யூனிச அமைப்பை பிரதிபலிப்பவை என்று பெரியார் தெளிவாக உணர்ந்திருந்தார்; அதற்கு ஆதாரமாக பஞ்சாப் ஆளுநருக்கு பகத்சிங் எழுதிய கடிதத்திலிருந்து இரண்டு வரிகளை மேற்கோள் காட்டுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வரும்வரையில், மக்கள் ஏற்றத் தாழ்வான வாழ்க்கையினை வாழும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். எங்களைக் கொன்று குவித்து அதை முடிவுக்கு கொண்டுவர முடியாது, வெளிப்படையாகவும் ரகசியமாகவும் அதற்கான எங்களது செயல் பாடுகள் தொடரும் என்ற அந்த வரிகளைத்தான் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார் தந்தை பெரியாா்!

மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

பகத்சிங்கின் வழக்கு விசாரணையினையும் அவர் விடுத்த அறிக்கைகளையும் மிகவும் கூர்மையாகக் கவனித்து வந்தார் பெரியார். 1929ம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியிட்ட பகத்சிங்கின் மிகவும் பிரபலமான அறிக்கையில், இந்த நேரத்தில் நாட்டைக் காப்பாற்றாவிட்டால், இந்த நாகரிகம் அதன் அடித்தளத்தோடு நொறுங்கிப் போய்விடும். அடிப்படை மாற்றம் தேவை. இதை உணர்ந்துகொள்பவர்களுக்கு இந்தச் சமூகத்தினை சோஷலிச அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கடமை உள்ளது. இது செயல்படுத்தப்படாத வரை, மனிதனை மனிதன் சுரண்டுவதும், நாடுகளை நாடுகள் சுரண்டுவதும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரை, மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் துன்ப துயரங்களையும் வெறியாட்டங்களையும் தடுத்து நிறுத்த முடி யாது.

தந்தை பெரியார் இந்தக் கருத்துகளால் கவரப்பட்டு 1930ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களையும் – விவசாயத்  தொழிலாளர்களையும்  அமைப்பாக அமைத்து பெரு முதலாளிகளையும் – நிலப்பிரபுக்களையும் எதிர்த்துப் போராட வழிகாட்டினார். இந்தப் போராட்டங்களினால் கோபமுற்ற காலனி யாதிக்க அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியையும் அத்தோடு ஒத்த கருத்துள்ள இதர அமைப்புகளையும் தடை செய்தது.

பகத்சிங் சிறையில் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்? ’ என்ற புகழ்பெற்ற புத்தகம் ரகசியமாக வெளிக்கொணரப்பட்டு தேசிய பத்திரிக்கைகள் மூலம் வெளியிடப்பட்டது. இதனை தோழர் பா.ஜீவானந்தம் மூலம் தமிழாக்கம் செய்து தமிழகத்தில் வெளியிட்டவரும் பெரியாரின் தமையனாருமான வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர். (குடி அரசு, 24.2.1935) மேலும்; குடி அரசு அலுவலகத்தில் காவல்துறை ரெய்டுகள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் வெளியிட்ட நூல்கள் கைப்பற்றப்பட்டன என்பதிலிருந்து இதனை நாம் உணர முடியும்.மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!பகத்சிங் தனது சிறைவாசத்தின் போது சுமார் 151 புத்தகங்களை வாசித்து முடித்தார். ஆறு சிறு புத்தகங்களை வெளியிட்டார். சிறைக் குறிப்புகளில் 108 படைப்பானிகள் எழுதிய 43 படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. அந்த அளவுக்கு வாசித்திருக்கிறார் அந்த ஆச்சரியப்படத்தக்க விடுதலை வீரன்!

சிறைவாச காலத்தில், பலர் கேட்டும் மன்னிப்புக் கேட்காதவர் பகத்சிங் மன்னிப்புக் கேட்டால் தண்டனை குறையும் என்ற போதும், கேட்காத மாவீரன். ஒருமுறை பஞ் சாப்காங்கிரஸின் தலைவர் பீம் சென் சச்சார் உரத்த குரலில் பகத்சிங்கிடம், “நீங்களும், உங்கள் நண்பர்களும் லாகூர் சதி வழக்கில் தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு பகத் சிங் என்ன கூறினார் என்றால் “போராட்டக்காரர்கள் என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒரு போதும் வலுவாகாது. அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும்” என்றார். அவர்தான் பகத்!

எதிர்த்து வாதிடாமல் இருப்பதே பெரியாரின் வாடிக்கை!

மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

குடி அரசு ஏட்டில் சென்னை மாகாணத்தில் கல்வி கற்பிப்பதில் இருந்த குறைபாடுகளை விளக்கி பெரியார் எழுதிய ஒரு கட்டுரைக்காக அவரும் ‘குடி அரசு’ ஏட்டின் அன்றைய பதிப்பாளரான பெரியாரின் தங்கை  கண்ணம்மாளும் இராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து வாதிட மறுத்ததால் பெரியாருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும், கண்ணம்மாளுக்கு அதைவிடக் குறைவான கால சிறைத்தண்டனையும் அளவு கொண்ட வழங்கப்பட்டன (புரட்சி, 27.1.1934) இப்படிப்பட்ட தந்தை பெரியாரைத் தான் தேசிய போராட்டத்தில் ஈடுபடாதவர் வெள்ளையர்களுக்கு ஆதரவாக நின்றவர் என்றெல்லாம் சங்கிகள் பேசுவதைக கேட்கிறோம். சீமானும் இதனையே பின்பற்றுகிறார். ஆனால், அவர்களால் கொண்டாடப்படும் வீர் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதி, மடிப்பிச்சை ஏந்தித்தான் விடுதலை பெற்றார். அவரே வீரன் என்றால் மாவீரன் பகத்சிங் எங்கே? தந்தை பெரியார் எங்கே!

வகுப்புவாத மற்றும் பிரிவினை வாத அரசியலுக்கு மட்டும் பகத்சிங் எதிராக நிற்கவில்லை, அவர் இந்திய சாதி அடிப்படையை அறவே வெறுத்து எள்ளி நகையாடினார். குறிப்பிட்ட சாதியில் பிறந்த மக்களைப் பிறப்பின் அடிப் படையில் தீண்டத்தகாதவர்களாக மாறியது எது? என்பதை விளக்கும் முகமாக உயர் சாதி மக்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார் பகத்சிங். தாழ்ந்த தொழில்களை செய்வதால் தான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் உயர்ந்த ஜாதி பெண்களும் தன் குழந்தைகள் மல ஜலம் கழித்த பின்பு சுத்தம் செய்கின்றனரே, அவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதியினராக வில்லையே ஏன்? என வினா தொடுத்தார். எனவே அவர், ஒரு பலம் வாய்ந்த தேசத்தை உருவாக்க வேண்டுமானால், சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியான சுரண்டல் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட வேண்டுமெனத் தனது எழுத்துகளிலும் பேச்சிலும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

தந்தை பெரியாரும் தனது தலையங்கத்தில் இதனை எதிரொலிக்கும் வகையில் தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் முதலில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற முறைக்கு முடிவு கட்டியாக வேண்டும். அதைப் போலவே நாம் வறுமையை ஒழித்துக் கட்ட முதலாளிகள், கூலி உழைப்பாளிகள் என்ற முறை அகற்றப்பட வேண்டும். எனவே சோசலிசம், கம்யூனிசம் என்பது சுரண்டல் அமைப்பு முறைகளை ஒழித்துக் கட்டுவதுதான். அதற்காகவே பகத்சிங் தொடர்ந்து போராடினார் என்று எழுதினார்.மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!தந்தை பெரியார் தனது தலையங்கத்தை பகத்சிங் சாதாரண மனிதனுக்கு நிகழும் மரணத்தைப் போன்று நோயில் விழுந்து இறக்கவில்லை. தன்னுடைய விலைமதிப்பற்ற வாழ்வை தனது உயர்ந்த லட்சியங்களுக்காக இந்தியாவையும், உலகத்தையும் உண்மையான சமத்துவப் பாதையில் அழைத்துச் செல்வதற்காகவும், அமைதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தது என்பது அவரை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது. மற்ற எவரும் செய்ய முடியாத ஒரு சாதனையை அவர் நிறைவேற்றினார் என்று முடிக்கிறார் தந்தை பெரியார்!

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

 

MUST READ