Homeசெய்திகள்கட்டுரைமோடி நூலிழையில் தப்பித்தது எப்படி?

மோடி நூலிழையில் தப்பித்தது எப்படி?

-

modi - vajpayee
பிரதமர் நரேந்திர மோடி நூலிழையில் தப்பித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது எப்படி? அவரை காப்பாற்றிய கடைசி ஆயுதம் எது?

கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆணவத்தோடு நடந்துவந்த ஒரு ஆட்சி, மீண்டும் எப்படி வெற்றிப் பெற்றது? இதுதான் நாம் ஆய்வு செய்ய வேண்டிய மிக முக்கியமான கேள்வி.

2004ல் நடந்த தேர்தலுக்கும் 2024 ல் நடந்த தேர்தலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றது. 2004-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் காலக்கட்டத்தில் தங்கநாற்கர சாலைகள் போடப்பட்டது. “இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது” என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தார். உண்மையில் வாஜ்பாய்க்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருந்த காலம் அது. 1999ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் 2004 தேர்தலிலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் கூறியது. ஆனாலும் தேர்தல் முடிவுகள் எல்லோரையும் திகைக்க வைத்தது.

2004ல் மக்களிடம் வாஜ்பாய்க்கு இருந்த செல்வாக்கும் 2024ல் மோடிக்கு இருந்த செல்வாக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 2004ல் உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டபோது 38% சதவீத வாக்காளர்கள் வாஜ்பாயை முன்மொழிந்து இருந்தனர். 26% வாக்காளர்கள் சோனியா காந்தியை ஆதரித்து இருந்தனர்.

2024ல் 41% பேர் மோடியை ஆதரித்து இருந்தனர். ராகுல் காந்தியை 27% பேர் ஆதரித்து இருந்தனர். இந்த ஆட்சி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்ற கேள்விக்கு வாஜ்பாயை விட 6% மோடிக்கு பின்னடைவு இருந்தது. அதாவது வாஜ்பாய் ஆட்சியை விட மோடியின் ஆட்சி மோசமானது என்று 6% பேர் தெரிவித்திருந்தனர்.

Exit poll

2004ல் நடத்திய தேர்தலுக்கு முந்தைய & தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 முதல் 275 தொகுதிகள் வரை வெற்றிப்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வெற்றி பெற்றது 181 தொகுதிகள் மட்டுமே. அப்பொழுது காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.2024ல் அது நடைபெறவில்லை.

2004ல் நடந்ததைப் போன்று 2024ல் நடைபெறாமல் போனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவாக கட்டமைத்து வைத்திருந்தது. இரண்டாவது ஊடகங்கள் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததோடு , எதிர்கட்சிகளின் குரலை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது. இது ஊடகங்களின் திட்டமிட்ட சதி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கடைசி நேரத்தில் நிதிஷ்குமாரை உள்ளே இழுத்தது. அதேபோன்று கடைசி நேரத்தில் ஆந்திராவில் சந்திரபாபு-வை கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டது. இதுவே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோன்று பீகாரில் தலித் வாக்கு வங்கி அதிகம் உள்ள சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை அவர்கள் பக்கமே வைத்துக் கொண்டதும் வெற்றிக்கு முக்கிய காரணம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றிப்பெற்ற 18 தொகுதிகள் 1% சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வாக்குகள் மாறியிருந்தால் நிலைமை வேறு மாதிரியாக மாறியிருக்கும். இந்த தேர்தலில் மோடி நூலிழையில் தான் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மோடி தோல்வி அடைந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

exit poll
இந்தியா ஊடகங்களின் சதி

இந்தியா ஊடகங்களில் பெரும்பாலானவை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று ஒரு மாயையை கட்டமைத்து வந்தது. பொதுமக்களின் மீதும், வாக்காளர்கள் மீதும் உளவியல் தாக்குதல் நடத்தியது தான் காரணம்.

ஊடகங்கள் நடுநிலையுடன் மக்களின் கருத்துகளையும், தேர்தல் தொடர்பான செய்திகளையும் வெளிப்படுத்தி இருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். வாக்காளர்களில் 80 சதவீதத்தினர் தொலைக்காட்சியை பார்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். அதில் 65 சதவீதம் பேர் செய்தி, விவாதங்களை பார்க்கக் கூடியவர்களாகவும், அதன் வாயிலாக முடிவெடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான ஊடகங்கள் மோடியின் ஊடகங்களாக மாறிப்போன தால் அதனை நம்ப வேண்டிய, அந்த ஊடகத்தின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டார்கள். அந்த தொலைக்காட்சிகள் நடுநிலையோடு மோடியின் ஆட்சியைப் பற்றி பேசியிருந்தால் தேர்தல் முடிவு மாறியிருக்கும். மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் அமர்ந்ததற்கு ஊடகங்கள் மோடி மீடியாவாக மாறியது முக்கிய காரணம்.

– என்.கே.மூர்த்தி

MUST READ