ஹார்ட் அட்டாக் – பெண்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஹார்ட் அட்டாக் என்பது அண்மைக்காலங்களாக அதிகம் கேட்கும் வார்த்தையாகி விட்டது. முன்பெல்லாம் 40, 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் மாரடைப்பு ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
அதிலும் ஆண்கள் தான் அதிகம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதை பார்த்திருப்போம், ஆனால் இப்போதெல்லாம் 30 வயதை நெருங்காத இளம்பருத்தினரே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழப்பதை செய்திகளில் பார்க்கிறோம். அதிலும் ஆண், பெண் என ஹார்ட் அட்டாக் வராதவர்களே இல்லை.
ஆனால் பெண்களுக்கு மட்டும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதற்க்கான சில வழிமுறைகளை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
அவர் கூறும் வழிமுறைகள்: “பெண்களும் நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பாதிப்புகள் போன்றவை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதயநோய்கள் ஆண்களை மட்டுமே பாதிக்கும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. இதயநோய்கள் பெண்களையும் பாதிக்கும்.
பிரசவத்துக்குப் பிறகு பெண்களை பாதிக்கும் Spontaneous coronary artery dissection என்கிற பிரச்னை வரலாம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னையாலும் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரலாம். அடுத்து ப்ரீ எக்லாம்சியா மற்றும் கர்ப்பகால நீரிழிவு பிரச்சனை உள்ள பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம்.
அதே போல கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு வரும். இந்த இரண்டு பாதிப்புகள் உள்ள பெண்களுக்கும் பிரசவத்துக்குப் பிறகும் இந்த பாதிப்புகள் தொடரும் வாய்ப்புகள் உண்டு.
அதன் விளைவாக இவர்களுக்கு இதயநோய்கள் பாதிக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் (Stress) அதிகமாக இருக்கிறது. குடும்பம், வேலை என பல காரணங்களால் அதிகரிக்கும் அந்த ஸ்ட்ரெஸ்ஸை அவர்களால் வெளிப்படுத்தக்கூட இயலாமல் இருக்கும்.
ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஹார்ட் அட்டாக் வரும் அபாயமும் அதிகரிக்கும் என்பதால் ஸ்ட்ரெஸ்ஸை அலட்சியப்படுத்தக்கூடாது. ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல உறவில் இருங்கள். மனம் விட்டு பேசுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.
நெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும்.
பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருவது, அசௌகர்யத்தை உணர்வது, வியர்வை, நெஞ்செரிச்சல், வேறு ஏதேனும் வித்தியாசமான புதிய அறிகுறி என எதுவானாலும் ஐந்து நிமிடங்களில் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். வருடம் ஒருமுறை இதயநலனை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.” என்று கூறுகிறார்.