சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தங்களது மதத்தில் இருந்து வெளியேற்றி, இந்துக்களாக மாற்றுவதற்காக தான் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு பி.ஜெயினுலாபிதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சி குறித்து கடுமையான உணர்வுகளோடு வீடியோ வெளியிட காரணம், மற்ற அரசியல் கட்சிகள் மதத்தில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் கட்சிக்கு வரும் மாற்று மதத்தினரை இந்துவாக மாற்றும் எண்ணும் எந்த கட்சிக்கும் கிடையாது. பாஜக மட்டும் கர்வாபசி என்ற அஜெண்டா வைத்துள்ளனர். சீமான் கட்சியை பொருத்தவரை, அவர் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியதே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்துக்களாக மாற்றுவது தான் அவர்களது அடிப்படை கொள்கையாக உள்ளது. அப்போது அரசியல் கட்சி என்பது உங்களது முதன்மையான நோக்கம் கிடையாது. மக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக தமிழ், தமிழ் தேசியம் என்று பேசி மக்களை வென்றெடுத்து அவர்களை இஸ்லாமிய நம்பிக்கையில் இருந்து வெளியேற்றுவது. பின்னர் அவர்களை சிலை வழிபாடு செய்யக்கூடியவர்களாக வேறு பெயரில் மாற்றுவது தான் திட்டம். அதனால்தான் இதனை அரசியல் கட்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வருகிறோம்.
இதற்கு அடிப்படை ஆதாரம் என்ன என்றால், நாம் தமிழர் கட்சிக்கு என்று விதிகள், நாம் தமிழர் ஆவணம் என்ற 120 பக்கம் கொண்ட புத்தகம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய ஆவணம் வேறு. ஆனால் நாம் தமிழர் உண்மையில் செயல்பட போகும் ஆவணம் என்ற ஒன்று வைத்துள்ளனர். அதில் என்ன உள்ளது என்றால் முஸ்லீம்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களை சிலை வழிபாட்டாளர்களாக மாற்றுவது நோக்கமாக உள்ளது. இதனை அந்த ஆவணத்தில் ஆங்காங்கே குறிப்பிடுகின்றனர். முன்னுரையில் சீமான், நாதகவின் முன்னணி தலைவர்கள், முத்த வழக்கறிஞர்கள், பல்வேறு நிலை கட்சி பொறுப்பாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கிய நிலையில், பல அமர்வுகள் கலந்தாய்வு செய்ததே இந்த ஆவணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அவரே கையெழுத்து போட்டுள்ளார். இந்த ஆவணம் வெளியே வந்த உடன். இந்த ஆவணம் ஒரு ரஃப் காபியாக அதை டிஸ்கஷனுக்கு வைத்திருந்தோம். அது லீக் ஆகிவிட்டது. நாங்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் அப்படி சொல்லவில்லை. நாங்கள் ஆய்வு செய்துதான் இதனை கொண்டு வந்துள்ளோம் என்கின்னர். நாம் தமிழர் ஆவணத்தை விளக்கப்படுத்தும் முகமாக முன்மாதிரி முழக்கங்களும், முறைவீச்சு திரிப்புகளும், செயல்பாட்டு கொள்கைகளும் ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன. அதனினும் மேலாக ஆவணத்தை துல்லியமாக புரிந்துகொள்ள கலைச் சொற்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மீது திணிக்கப்பட்டுள்ள சாதி, மத அடையாளங்களையும், அணமைக் காலமாக திணிக்கப்பட்டு வரும் இந்தியன், திராவிடன் என்ற அடையாளத்தை அழித்துவிட்டு தமிழன் என்ற அடையாளத்தை முதன்மையானதாக ஏற்க வேண்டும் என்கிறார்கள். சாதி அமைப்புகளுடன் தொடர்பு வைக்கவும், மதம் – சாதி தெரியும்படி பெயர்களை வைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்குள் வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பு உள்ளது. அதில் முருகனை முப்பாட்டனாக ஏற்றுக் கொண்டு காவடி எடுத்து வழிபாடு நடத்த வேண்டும் என்கின்றனர். நாம் தமிழர் ஆவணப்படி இஸ்லாமியர்கள் தொப்பி அணியக் கூடாது என்று சொல்கிறார்கள். தமிழர் உரிமைப் போராட்டம் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால் பரந்துப்பட்ட தமிழர் இனம் நாம் தமிழரே என்று உணர்ந்து அறிந்து, ஓற்றுமையுடன் ஒழுகி ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். சட்ட விதிகளில் நவராத்திரி கொலு விழா, ஐயப்பன் பருவத்தில் திருக்குறள் ஓதி குமரிப்பயணம் மேற்கொள்வது, நடுகல் தெய்வ விழா என அய்யனார், வீரய்யன், கருப்பண்ணன் போன்றோருக்கான விழா நடத்த வேண்டும் என்கிறார்கள். சிலை வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், நாம் தமிழர் கட்சி என்றால் இதை எல்லாம் செய்ய வேண்டும். அப்படி என்றால் முஸ்லிம்கள் முஸ்லீம்களாக இருக்கக் கூடாது என்று அந்த ஆவணம் சொல்கிறது.
தமிழியத்திற்கும், முகமதியத்திற்கும் முரண்பாடு ; தமிழியத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் முரண்பாடு என்ற தலைப்பில் கருத்துக்கள் கூறியுள்ளனர். அதற்கு விளக்கமாக முகமதியமும், கிறிஸ்தவமும் தமிழ் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை. சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலிவும், பன்னாட்டு பின்புலமும் கொண்டு மதவழி தனி இன கட்டுமானத்தை கொண்டவை. முகமதிய தமிழரும், கிறித்துவ தமிழரும், தங்களுயை முதன்மை அடையாளம் என தமிழ் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவார்களே ஆனால், நட்பு முரண் வகையில் இடம்பெறுவர். இவர்கள் விழிப்போடும், எச்சரிக்கையோடும் அன்போடும் கையாளப்பட வேண்டியவர்கள் என நாம் தமிழர் ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் நிர்வாகக் குழுவில் முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் இடம்பெற மாட்டார்கள். தமிழ் என்ற பெயரில் இஸ்லாமியர்களை சிலை வழிபாட்டிற்கு அழைக்கிறார்கள். திருமணம், இறப்பு, பிறப்பு முதலிய நிகழ்வுகளை தமிழர்களை கொண்டு, தமிழில் நடத்த வேண்டும் என்கிறார்.
நாம் தமிழர் ஆவணத்தில் பிராமணர்கள் என்ற வார்த்தை பல இடங்களில் ஐயர், ஐயங்கார், அந்தணர் என்று வருகிறது. அதற்கு கலைச்சொல் விளக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ள விளக்கத்தில் பார்ப்பான் என்பதற்கு ஆய்வாளன், இளைஞன் என பொருள் கொள்ள வேண்டும். அந்தணர் என்றால் ஈவு இறக்கம் கொண்ட அறநெறியாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐயங்கார் என்றால் ஐயன். அதற்கு தந்தை, தலைவர் என பொருள். ஆரியன் என்ற சொல்லுக்கு உயர்ந்தவன். சீரியன் என அர்த்தம். அப்படி என்றால் நல்லவர் என்று பொருள். திராவிடர் என்றால் பல காலங்களில் தமிழில் இருந்து சென்று மனுவியம் சார்ந்து வேறு மொழிகளாய் திரிந்துபோன கோட்பாடு. சீமான் ஆரியத்தை இன்று உயர்த்தி பிடிப்பதாக நாம் பார்க்கிறோம். ஆனால் அவர் தொடக்கம் முதலே ஆரியத்தை தான் உயர்த்தி பிடிக்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது தான் அவர் திட்டமிட்டு இஸ்லாமியர்களை மதத்தில் இருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறார். அதேபோல், தனி இடுகாடு அமைப்போம் என்கிறார். நாம் தமிழர் கட்சியை உருவாக்கும் போது மொழி உணர்வை தூண்டி இஸ்லாமியர்களை ஏமாற்றி, அவர்களை தமது வழிபாட்டிற்கு கொண்டு செல்வதற்காக வீர தமிழர் முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர். நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக மிகப்பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. ஹிமாயூன் கபிர் போன்ற இஸ்லாமியர்கள் முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். அப்படி என்றால் முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்ற உண்டாக்கப்பட்டது தான் நாம் தமிழர் கட்சி என்று அதன் கொள்கையிலே வகுத்து வைத்துள்ளனர். இது கசிந்த உடன் அப்படி இல்லை என்று மறுக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.