பொன்னேரி – G. பாலகிருஷ்ணன்
இந்திய அளவில், தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் சூடாகவே இருந்து கொண்டிருக்கும். அதிலும், ஏதாவது ஒரு தேர்தல் நெருங்க கூடிய சூழ்நிலையில் தமிழக அரசியலில் உஷ்ணம் மேலும் உச்சத்தில் இருக்கும். அந்த வகையில், சட்டமன்ற தேர்தல் 26 ம் ஆண்டு நடைபெற உள்ளது, இந்நிலையில் தமிழகத்தில் இருக்க கூடிய சில கட்சிகள் இறங்கு முகத்தில் இருக்கக்கூடிய நிலவரத்தில், நடிகர் விஜய் புதியதாக ஒரு அரசியல் கட்சி துவங்கிய கையோடு முதல் மாநில மாநாட்டையும் நடத்தி, அந்த மாநாட்டில் அவர் உரையாற்றியத்தில், தமிழக அரசியல் களத்தை கொளுத்திப்போட்டு கொழுந்துவிட்டு எரிய செய்து இருக்கிறார்.
குறிப்பாக, புதிய கட்சி துவங்கிய நடிகர் விஜய் தமிழகத்தில் தேசிய அரசியல் எடுபடாது என்று தீர்க்கமாக முடிவு செய்து, தற்போது தமிழகத்தில் பெறுவாரியான மக்களுடைய மனதில் இருக்கக்கூடிய திராவிட கொள்கையையும், அந்த திராவிட கொள்கையை எதிர்த்து, சீமான் போன்றவர்கள் இளைஞர்களை தனது பக்கம் இழுப்பதற்காக பயன்படுத்தக்கூடிய தமிழ் தேசிய அரசியலையும் சேர்த்து தனது கட்சியின் கொள்கையாக முதல் மாநாட்டில் அறிவித்தார். அதனால், பதட்டமடைந்த சீமான் தனது பக்கம் இருக்கக்கூடிய இளைஞர்கள் பெருவாரியாக விஜய்யின் பக்கம் பயணிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து. பதட்டத்தில் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய் தனது மாநாட்டில் உரையாற்றிய போது சீமானை குறித்து ஒரே ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசாத சூழ்நிலையில், சீமான் சுடுதண்ணியை தன் மீது ஊற்றியது போல் பதறிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதே மாநாடு உரையில் விஜய் நேரடியாகவே பாஜகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தவுடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் தான் ஆட்சி அமைப்பேன் என்ற ரீதியில் பேசி முடித்தார். அதனால், ஒரு சில பாஜகவினர் கூட விஜயை விமர்சனம் செய்து கொண்டு இருக்கக்கூடிய சூழலில், நேரடியாக திமுகவை எதிர்த்து வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுத்து கொண்டிருக்கும் விஜயை எதிர்த்து திமுக தரப்பிலிருந்து ஒரு எதிர் விமர்சனம் கூட இதுவரை எழவில்லை, மாறாக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் நடிகர் விஜய் கூட்டிய மாநாட்டிற்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
அதேபோல் நடிகர் விஜய் தனது மாநாடு உரையில, திமுகவை ஊழல் கட்சி என்று அடையாளப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை என்ற செயலும் பலரை சிந்திக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமியை பதர வைத்திருக்கிறது என்பது தான் உண்மை.
அதிமுகவை பற்றி தான் விஜய் ஏதும் குறை சொல்லவில்லையே அப்படி இருக்கையில் எடப்பாடி ஏன்? பதட்டப்படுகிறார் என்று நீங்கள் வியந்து கேள்வி எழுப்பலாம்.
அதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக பின்னோக்கி பயணித்து கொண்டிருக்க கூடிய சூழலை நடிகர் விஜய் பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார் என்பது தான் உண்மை, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை அதிமுகவில் ஒரு தரப்பு தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலும், அதை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களும், இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
குறிப்பாக, 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 33 % மேல் வாக்கு பெற்ற அதிமுக, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 20% வாக்குகள் தான் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டியது உள்ளது. மேலும், இதே தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் திடீரென 18 சதவீதம் உயர்ந்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெறும் இரண்டு, மூன்று சதவீதம் இருந்த பாஜகவின் வாக்கு இப்படி திடீரென உயர்ந்ததற்கு காரணம் அதிமுகவின் பலவீனமான தலைமை தான் என்பதை நடிகர் விஜய் உணர்ந்து தான், பாஜாகாவிற்கு செல்லக்கூடிய அதிமுக வாக்குகளை எதிர்காலத்தில் தாம் பெற வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி திமுகவை எதிர்த்து அரசியல் களம் காண வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்து இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டில் தான், அவர் தன்னுடைய திரைப்பட வாய்ப்புகள் உச்சத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைகளிலும் அவைகளை உதறி தள்ளி விட்டு அவசர அவசரமாக அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.
மேலும், நடிகர் விஜய் எதிர்கொள்ளக்கூடிய முதல் தேர்தலான 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தனித்து களம் காண திட்டமிட்டு இருக்கிறார். அப்படி இல்லாமல் அதிமுக தலைமை ஆசைப்படுவது போல், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை எதிர்கொண்டால் தனக்கும் விஜயகாந்தின் முடிவு தான் என்பதை நன்றாக உணர்ந்து தான், நடிகர் விஜய் பாஜகவிற்கு செல்லக்கூடிய அதிமுக வாக்குகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறார். ஆகவே தான் திமுகவை எதிர்த்து கம்பு சுற்ற துவங்கி இருக்கிறார்.
நடிகர் விஜய், விவேக் ஸ்டைலில் லெப்ட் சைடில் இன்டிகேட்டர் போட்டு விட்டு, ரைட் சைடில் கை சைகை காட்டிவிட்டு, நேராக வண்டியை ஓட்டி விடுவாரோ என்ற கோணத்தில் கணித்த எடப்பாடி பழனிச்சாமி மிகவும் பதறி போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அந்த கட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல முடிவுகள் காட்டுகின்றன.
மேலும், ஒரு நாளிதழில் விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர உள்ளதாகவும், அந்த கூட்டணியில் தமிழக வெற்றி கழகதிற்கு 80 சீட்டுகள் ஒதுக்கப்படும் எனவும், நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனால், சுதாரித்து கொண்ட நடிகர் விஜய் உடனடியாக தமிழகத்தில் தங்களுடைய கட்சிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது எனவும், ஆகவே தங்கள் கட்சி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற ரீதியிலும், திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற ரீதியிலும் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம், நடிகர் விஜய் விவேக் ஸ்டைலில் தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிய வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் 17 வயது முதல் மோஹினி டே… இசை பந்தத்தை வசை பாடிய ஒரே ‘டே’