ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்காக நடைபெற்று வரும் முயற்சிகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என செங்கோட்டையன் உள்ளிட்ட 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இப்போது செங்கோட்டையன் கொந்தளிப்பது, அதிமுக தொடர்பான வழக்கை தேர்தல் ஆணையம் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்பு படுத்தி பார்ப்பது தவறானது இல்லை. பாஜக அதிமுகவின் அனைத்து உட்கட்சி விவகாரங்களிலும் தலையிடுவது என்பது தெரிந்த விஷயம்தான். நயினார் நாகேந்திரன் சொன்னார் தெரியுமா? அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு ரைடு எல்லாம் தேவை இல்லை. ஒரு போன் செய்தாலே போதும் என்று. அதுதான் உண்மை… அமித்ஷா நினைப்பதோ, பாஜக மேலிடம் நினைப்பதோ அதிமுகவை வழிக்கு கொண்டு வருவதற்கு ரெய்டு எல்லாம் அவசியம் என்று நினைக்கவில்லை. சாதாரணமாக பேசினாலே அதிமுக வழிக்கு வந்துவிடுவார்கள் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள்.
அதிமுகவில் பிரிந்தவர்களை இணைப்பது, கூட்டணி வைப்பது போன்ற விவகாரங்கள் வரும் போது எடப்பாடி பழனிசாமி தானாவே வழிக்கு வந்துவிடுவார், அவருக்கு ரொம்ப அழுத்தம் தர வேண்டாம் என நினைக்கிறார்கள். அவருடைய சம்மந்தி வீட்டில், அவருக்கு நெருக்கமான இளங்கோ வீட்டில் சோதனை செய்வது என்று ஏதோ அவ்வப்போது மிரட்டுகிறார்களே தவிர, முழு மூச்சாக இறங்கி எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டுவரலாம் என செயல்படவில்லை. ஏனென்றால் அதிமுக, பாஜக என இரண்டு கட்சிகளிலுமே கூட்டணி அமைய வேண்டும் என்று நலம் விரும்பிகள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியை விரும்புவதாகவோ, விரும்பவில்லை என்றோ வெளிப்படையாக சொல்லவில்லை. மேலும் வேலுமணி, தங்கமணி போன்றோர் நிர்மலா சீதாராமனுடனும், பியூஷ் கோயல் உடனும் அவ்வப்போது கூட்டணி தொடர்பாக பேசி கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எடப்பாடி பழனிசாமி தடுக்கவில்லை. பழனிசாமியின் மகன் மிதுன், அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளதே. கொள்கையோ, கருத்து வேறுபாடோ கூட்டணிக்குள் தடையாக இருக்க முடியாது.
2021 சட்டமன்ற தேர்தலில் 10 வருட ஆட்சிக்கு எதிரான மனநிலையை கடந்தும் அதிமுக 75 இடங்களில் வென்றது. அப்போது பாமக மட்டும் தான் உடனிருந்தனர். இப்போது பாமக, தேமுதிக, தினகரன் என அனைவரும் சேரும்போது திமுகவுக்கு கடுமையான சவாலை அளிக்கும். இந்த அணி திமுகவை வீழ்த்தும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால், அந்த அணிக்குததான் வாக்களிப்பார்கள். அப்போது, சீமான் விஜய் போன்றோரை ஓரம் கட்டுவார்கள். பாஜக இருப்பதால் இந்துத்துவா வாக்குகளும் வரும். ஆனால் அந்த கூட்டணியில் பாஜக 2வதாக தான் வரும். பாஜக 2026 சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களை 10 ஆக மாற்றினால் போதும் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது என்பது 1936ஆம் ஆண்டைதான் இலக்காக வைத்துள்ளனர். நடுவில் உள்ள 2026, 2031 சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை வளர்த்துக் கொள்ளலாம். 2031ல் நமது எண்ணிக்கையை 45 முதல் 50 இடங்கள் வரை கூட்டலாம் என நினைக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு பாஜக காய்களை நகர்த்துகிறது.
மத்தியில் 2029 வரை பாஜக ஆட்சியில் இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் ஏதாவது ஒரு வகையில் அதிமுகவின் செல்வாக்கை குறைக்க முயற்சிப்பார்கள். அப்போது அமலாக்கத்துறையில் இருந்து 4 வழக்குகளை போட்டால் பிரச்சினை ஆகும் அல்லவா? தமிழகத்தில் பாஜக, தவெக ஆகிய 2 கட்சிகளும் அதிமுகவின் வீழ்ச்சிதான் தமது வளர்ச்சி என நினைக்கின்றனர். ஆனால் அதிமுக அவர்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே வேளையில் அதிமுக தன்னுடைய செல்வாக்கை இழக்காமல் இருக்கவும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் சிக்கலான நிலையில் உள்ளார். அதனால் செங்கோட்டையனுடன் மோதல் வைத்துக்கொள்ள மாட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நோக்கம் வலுவான கூட்டணி அமைப்பதுதான். பாஜக கூட்டணி அமைந்தால் தினகரன், ஓபிஎஸ்-ஐ சரிகட்டுவதுதான் அவருக்கு பிரச்சினையாக வரும். அதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் முக்கியம். டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உடனோ, எடப்பாடி பழனிசாமி இல்லாமலோ அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாமல் அதிமுக இல்லை. கட்சியினர் எதற்காக எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நிற்கிறார்கள் என்றால் இரட்டை இலை அவரது கைகளில் உள்ளது என்பதால்தான். தற்சமயம் எடப்பாடியின் பின்னால் திரள்வதை தவிர வேறு வழியில்லை என்தால்தான் பலரும் அங்கிருக்கிறார்கள். ஆனால் ஒன்றுபட்ட அதிமுக அமைய எடப்பாடி பழனிசாமி தடையாக இருக்கிறார் என்கிற கருத்தும் தொண்டர்கள் மத்தில் உள்ளது. அதனால்தான் ஓபிஎஸ் இன்று எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு தயார் என்கிறார்.
ஏனென்றால் எடப்பாடி தான் அதிமுக ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கிறார் என்பதை ஓபிஎஸ் வெளிப்படுத்துகிறார். ஏற்கனவே சொன்னோம் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. 6 அமைச்சர்கள் சொன்னார்கள் கேட்கவில்லை. இப்போது மறுபடியும் சொல்கிறார் அவர் கேட்கவில்லை என்று வெளிப்படுத்ததுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ் தரப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் நிபந்தனை வைக்கிறார்கள். வழக்கை திரும்ப பெறும் பட்சத்தில் பின்னர் அவர்களை அதிமுகவில் இணைப்பது குறித்து யோசிக்கலாம் என்கிறார். இது செங்கோட்டையன், உதயகுமார் போன்றோர் மூலமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த மனுவை வாபஸ் வாங்கினால் அவர்கள் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொண்டதாக தான் அர்த்தம். இந்த அளவிற்கு இப்போது இந்த விவகரம் நகர்ந்துள்ளது.
அதிமுக உடன் கூட்டணி அமைக்க விஜய் தரப்பில் 117 கேட்பதாக தகவல் வெளியாகிறது. விஜய் பெரிய நடிகராக உள்ளார். பிரசாந்த் கிஷோர் போன்றோர், அவருக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் பாஜக, அதிமுக கூட்டணியில் வரும்போது, அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கும் நிலையில் தான் உள்ளனர். அதற்காக முதலமைச்சரோ, துணை முதலமைச்சர் பதவியோ கேட்டால் அதிமுக கொடுக்க வேண்டிய நிலையில் இல்லை. விஜயை, அதிமுகவில் சம அளவிலான நபர்களாகவே கருதப்படுகிறார்கள். இந்த கூட்டணியில் இருவரும் முதன்மை கட்சியாக உள்ளனர். ஆனால் பாஜவின் இலக்கே 36 இடங்கள் தான். அவர்கள் இந்த கூட்டணியில் முதன்மையான சக்தி கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.